திண்ணை!
மாமல்லபுரம் சிற்ப கல்லூரி ஆசிரியர் வை.கனகராஜன் எழுதிய, 'சிவ ஆகமச் செந்நூல்' என்ற நூலிலிருந்து:கோவிலில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலையை, சிற்பி செய்து முடித்தவுடன், அச்சிலைக்கு கண் திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்; இது, மிக முக்கியமானது.ஸ்தபதியானவன், குளித்து, புத்தாடை உடுத்தி, பூணுால் அணிந்து, (சிலை செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினர் பூணுால் அணிவர்) நெற்றிக்கு திலகம் இட்டு, விரல்களில் மோதிரம் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்த பின், முதலில், கணபதி பூஜை செய்ய வேண்டும்.பின், பிம்பத்திற்கு அருகில், அரிசியால் பீடம் அமைத்து, அதன்மீது, கலசத்தை வைக்க வேண்டும். கலச பூஜை செய்து, அக்கலச நீரால் உரிய தேவதையை படிமத்தில் ஆவாகனம் செய்து, தேவதையின் மந்திரத்தை ஜபித்து, படிமத்தை பூஜை செய்ய வேண்டும். இத்தருணத்தில், மணி ஒலித்து, மங்கல கோஷங்கள் முழங்கச் செய்தல் வேண்டும்.பின், சிற்பியானவன், பிரம்மனை வணங்கி, அவன் அனுமதி பெற்று, கண் திறப்பதற்கு, படிமத்தின் அருகில் சென்று, பொன்னால் ஆன உளியால் அல்லது தங்க ஊசியால் முதலில் வலது கண்ணை திறக்க வேண்டும். பின், இடது கண்ணையும், நெற்றிக் கண்ணையும் திறக்க வேண்டும்.இறைவனின் வலது கண் சூரியனைக் குறிப்பதால், சூரிய பீஜ மந்திரத்தை மனதில் துதித்து, கண் திறக்க வேண்டும். அதே போன்று, இடது கண் சந்திரனை குறிப்பதால், சந்திர பீஜத்தையும், நெற்றிக் கண் அக்னியை குறிப்பதால், அக்னி பீஜத்தையும் செதுக்குதல் வேண்டும்.இதற்கு பின், கூரிய உளியால் ஒளி மண்டலம் மற்றும் விழி மண்டலம் ஆகிய இரண்டையும் தெளிவுறச் செய்தல் வேண்டும். இரு கண்கள் மட்டும் இருப்பின், அவ்விரண்டு கண்களை திறத்தல் வேண்டும். பல முகங்கள் இருப்பின், அம்முகங்களில் உள்ள கண்களையும் திறந்திடல் வேண்டும்.படிமத்திற்கு கண் திறக்கும் போது, ஸ்தபதியை தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது. எனவே, படிமத்திற்கு நாற்புறமும் திரையிட்டே இப்பணியை செய்தல் வேண்டும். தூப தீபம் காட்டி, பாலும், பழமும், தேனும் படைக்க வேண்டும். இதுவும் திரைக்குள்ளேயே நடைபெற வேண்டும்.கண்கள் திறந்தவுடன், முதன் முதலில் கண்ணாடியை சுவாமிக்கு முன் காட்டி, தர்ப்பண தரிசனம் செய்வதுடன், பசுவை, கன்றுடன் கொண்டு வந்து நிறுத்தி, பார்த்திட செய்தல் வேண்டும். பின், சுமங்கலி பெண்கள், நவ தானியங்கள், கன்னியர், சன்னியாசிகள், வேத விற்பன்னர்கள், இறுதியாக, ஆலயம் கட்டுவித்த எஜமானன் என, வரிசை கிரமமாக சுவாமி முன் நிறுத்தி, வணங்கிடச் செய்ய வேண்டும்.இவை - ஆகம விதிகள்!எஸ்.எம்.உமர் எழுதிய, 'கலை உலக சக்ரவர்த்திகள்' நூலிலிருந்து:சக்ரவர்த்தி திருமகள் படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆருக்கு வயது, 40; 'தமிழ் சினிமா' பத்திரிகை ஆசிரியர் கரீம், தன் பத்திரிகையில், எம்.ஜி.ஆரை, 'கிழட்டு நடிகன்' என்று குறிப்பிட்டார். அதைப் படித்த எம்.ஜி.ஆர்., கோபப்படவில்லை. மாறாக, 'கரீம் எழுதியதில் உண்மையுள்ளது. 'மனோகரன்' நாடகத்தில், மனோகரனாக, பம்மல் சம்பந்த முலியார் நடிப்பார். அந்த நாடகத்தில், நானும் சிறிய வேடத்தில் நடிப்பேன். ஒரு காட்சியில், 'அம்மா... இந்த, 16 வயது பாலகனைப் போருக்கு அனுப்புங்கள்; வென்று வருகிறேன்...' என்பார். அப்போது அவருக்கு வயது, 40. 'துணிந்து பொய் சொல்கிறாரே...' என்று நினைப்பேன். அதை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதனால், கரீம் கவலைப்பட வேண்டாம்...' என்றார். 'தெரிந்ததும் தெரியாததும்' நூலிலிருந்து:அக்பரின் அரசவையில் இருந்த பீர்பால் மற்றும் தான்சேன் இருவருமே பிராமணர்கள். இசை மேதை தான்சேன், இளம் வயதில் சரிவர பேச்சு வராமலும், புத்தி சுவாதீனமற்றும் இருந்ததால், ஒன்றுக்கும் உதவாதவன் என்று அவரை உதாசீனப்படுத்தினர். ஸ்வாமி ஹரிதாசர் என்ற யோகியின் அருள் பெற்று, ஒப்பற்ற இசை மேதையானார் தான்சேன். இந்து புரோகிதருக்கு மகனாக பிறந்த தான்சேன், இஸ்லாமிய பெயரை சூட்டிக் கொண்டது ஒரு அதிசயம். ரீவா மன்னரை தவிர, வேறு எவரிடமிருந்தும் வலது கையால் அன்பளிப்பை இவர் பெற்றுக் கொண்டது இல்லை. எங்கு சென்றாலும், தன்னுடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு, அக்பரின் அன்பைப் பெற்றிருந்தார். அவர், 'தீபக்' ராகத்தை பாடினால், விளக்குகள் தாமே எரியத் துவங்கும் என்பர். மேலும், 'ரபாப்' என்ற தந்தி வாத்தியத்தை உருவாக்கியவர் தான்சேன்,நடுத்தெரு நாராயணன்