திண்ணை!
ஒரு கட்டுரையில், பத்திரிகையாளர் ஞாநி எழுதுகிறார்: சிவாஜிகணேசனுக்கு வாய்க்காமல் போன ஒன்று, அனைத்திந்திய அங்கீகாரத்தை பெற்றுத் தரக்கூடிய, அரசியல் செல்வாக்கு! பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்றவை, அவருடைய காங்கிரஸ் அரசு தந்திருக்கிறது. இருப்பினும், இந்திய அரசு, அவருடைய பிரதான தொழிலான நடிப்பில், அவருக்கு உரிய அங்கீகாரத்தை நீண்ட காலம் அளிக்கவே இல்லை. வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா மற்றும் சவாலே சமாளி என்று, பல வகையான படங்களை அவர் தந்திருக்கிறார். அதே சமயத்தில், இதில், எந்த படத்துக்கும் ஈடாகாத, ரிக் ஷாக்காரன் படத்துக்காக, எம்.ஜி.ஆருக்கு டில்லியில், 'பாரத்' விருது தரப்பட்டது. சிவாஜியை விட, மிக குறைவான பங்களிப்பை செய்தவர்களுக்கெல்லாம், 'தாதா சாகிப் பால்கே' விருது கொடுத்து தீர்த்த பின் தான், அவருக்கு, பால்கே விருது கிட்டியது!'தமிழர் சிற்பக்கலை' நூலில், சிற்பி கோ.வீரபாண்டியன்: பொதுவாக,சிற்பக் கலை என்பது, வெறும் இந்துக் கோவில் கலை என்ற நிலைமையே இருந்தது. இதனால், சிற்பக் கலைஞர்கள், போதிய வேலையின்றி தவித்தனர். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், தங்களின் நிலைமையை தெரிவித்தனர், சிற்பக் கலைஞர்கள். இதன் விளைவாக, பூம்புகார் கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் மற்றும் வள்ளுவர் கோட்டம் ஆகியன தோன்றின; சிற்பக் கலைஞர்களுக்கும் வேலை கிடைத்தது. சிற்பப் பணிகளுக்கும், 200 ஆண்டுகளுக்கு பின் மதிப்பும், ஏற்றமும் கிடைத்தது. சமயத்தை மட்டுமே சார்ந்திருந்த சிற்பம், இலக்கியத்திற்கும் பயன்பட்டது.'வரலாறாய் வாழ்ந்தவர்கள்' நூலிலிருந்து: ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில், ராமநாதபுரம் பகுதிக்கு, தேர்தல் பிரசாரத்திற்காக ராஜாஜி வந்திருந்தார். அப்போது இளைஞராக இருந்த முத்துராமலிங்க தேவர், ராஜாஜியை மாட்டு வண்டியில் அமர்த்தி, மாவட்டம் முழுவதும், வண்டியை ஓட்டிச் சென்றார். பின், ராஜாஜி, 'வியாசர் விருந்து' என்ற நூலை எழுதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அந்நூலை வெளியிடும் போது, வெளியீட்டு விழாவில், நூலை அறிமுகம் செய்து, உரையாற்றவும் செய்தார்.பின், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆலயப்பிரவேசம் செய்யும், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு, அன்றைய முதல்வர் ராஜாஜியும், மதுரை பிரமுகர் வைத்தியநாத ஐயரும் ஏற்பாடு செய்திருந்த வேளையில், தடைகளும், எதிர்ப்புகளும் கிளம்பின. தடைகளை தகர்த்து, ஆலய பிரவேசம் நடந்தேற துணை நின்றார் முத்துராமலிங்கம். அதே காரணத்துக்கு, சட்டசபையில், ராஜாஜி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது, 'ராஜாஜியின் நடைமுறைகள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை...' என்று கூறி எதிர்க்கவும் செய்தார்.மு.பழனி ராகுலதாசன் ஒரு கட்டுரையில்: சென்னை ராஜதானியின், அன்றைய சட்டசபை கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் முத்துராமலிங்க தேவர். ஒரு உறுப்பினர் கிண்டலாக, 'தேவரின் பேச்சை பார்க்கும் போது, ஒரு பார்வைக்கு, காங்கிரஸ்காரரைப் போல தெரிகிறது; மற்றொரு பார்வைக்கு, பார்வர்டு பிளாக் இயக்கம் போல தெரிகிறது. தேவர், எதைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லயே...' என்றார்.உடனே, 'தெரிந்து கொள்ளுங்கள்... நான் காங்கிரஸ் காரனுமல்ல; பார்வர்டு பிளாக் கட்சிக்காரனுமல்ல. நான், ராமகிருஷ்ண இயக்கத்தை சார்ந்தவன்; விவேகானந்தரை பின்பற்றுபவன்...' என்று கூறினார் முத்து ராமலிங்கத் தேவர். 1933ல், தன், 25ம் வயதில், சாயல்குடி விவேகானந்தர் வாசக சாலை முதலாம் ஆண்டு விழாவில் ஆற்றிய முதல் பேச்சு தான், அவரை அரசியல் பாதைக்கு அழைத்து வந்தது. தேசியமும், தெய்வீகமும், தன் இரு கண்கள் என்பதை, தன் கொள்கையாக கொண்டு, பிரம்மசரிய வாழ்வை தொடர்ந்தார்.தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யருக்கு, பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன்! ஆனால், வீட்டில் அவரை, சாமா என்றே அழைப்பர். அதையொட்டி, அவருடைய ஆசிரியரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சாமிநாதன் என பெயரிட்டார். அதுவே நிலைத்து விட்டது. இப்பெயர் மாற்றம், அவருடைய, 18வது வயதில் நடந்தது.- நடுத்தெரு நாராயணன்