உள்ளூர் செய்திகள்

திண்ணை!

காங்., தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தீரர் சத்தியமூர்த்தி, 'மெட்ராஸ் மெயில்' நாளிதழில், நவ., 8, 1938ல் எழுதிய கட்டுரையிலிருந்து: இன்றைய நாடகத் துறையில், சிறுவர்களை, நடிகர்களாக கொண்ட நாடக கம்பெனிகள் அதிகம். போலீசாரோ, நீதிபதிகளோ ஏன், சமூக சீர்திருத்தவாதிகள் கூட இதை கவனிப்பதில்லை. பள்ளியில் படிக்க வேண்டிய பருவம் இது! மூளை மற்றும் உடலை அபிவிருத்தி செய்வதுடன், நன்கு தூங்க வேண்டிய இந்த வயதில், அதையெல்லாம் அவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்து, பணம் சம்பாதிப்பதற்காக அவர்களை பயன்படுத்துவது கொள்வது, மனித வர்க்கத்திற்கே தகாத அம்சம்; உண்மையில் கொடுமையான செயல்.இதைத் தடுக்க, 18 வயதுக்கு உட்பட்டோர் நாடகங்களில் நடிக்க, தடைச் சட்டம் இயற்ற வேண்டும்.- குழந்தை தொழிலாளர் தடை சட்டம் இல்லாத ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே இப்படி முற்போக்காக சிந்தித்திருக்கிறார் சத்தியமூர்த்தி.தியடோர் பாஸ்கரன் தொகுத்த, 'சித்திரம் பேசுதடி' நூலில், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய கட்டுரையிலிருந்து: சென்னை, தமிழ் நடிகர் சங்கத்தின் சார்பாக, 'லீலாவதி - சுலோசனா' நாடகத்தை, ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகி, அந்நாடகத்தை, திரைப்படமாக, இயக்கி தரக் கேட்டுக் கொண்டார். 'நடிகர்களை நடிக்க வைக்கும் விஷயத்திற்கு தான் என்னால் பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, படம் பிடிப்பது, ஒலிப்பதிவு போன்ற விஷயங்களில் எனக்கு உதவியாக, ஒரு டெக்னிக்கல் டைரக்டர் இருந்தாலொழிய என்னால் சாத்தியப்படாது...' என்று தெரிவித்தேன்.அவரும் ஒப்புக் கொண்டு, அதற்காக ஜெர்மானியர் ஒருவரை நியமித்தார். அவரிடம் காட்சியை ஆங்கிலத்தில் விளக்குவேன்; அவர் படம் பிடிப்பார். அனுமார், இந்திரஜித் வளர்க்கும் யாக குண்டத்தில் குதித்து, யாகத்தை அழிக்கும் காட்சிக்காக, நான்கடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அக்குழியில், அனுமார் வேடம் பூண்டவரை குதிக்கச் சொன்னேன். அவர் பயந்தார்; எவ்வளவு சொல்லியும், குதிக்க மறுத்து விட்டார். யாராவது இவருக்கு குதித்துக் காட்டுங்கள் என்றால், அங்கிருந்த ஒரு நடிகனும், அதைச் செய்ய துணியவில்லை. என்ன செய்வது... கடைசியில் நானே குதித்துக் காட்டினேன். அப்போது, என் வயது, 61; குதிக்க பயந்தவனுக்கோ என்னில் பாதி வயது!ஹிட்லரின் சுயசரிதையான, 'மெயின் காம்ப்' நூலிலிருந்து: தன் நாட்டு மக்கள் புத்துயிர் பெற்று எழ வேண்டும் என்பதற்காக, ஜெர்மனியில், மியூனிச் நகரத்தில் உள்ள பழைய யுத்த அமைச்சகத்தின் எதிரில், நவ., 9, 1923ல், மதியம், 12:30 மணி அளவில், என் தோழர்களில் பலர், எதிரிகளால் தாக்கப்பட்டு, மடிந்தனர். மாண்ட அவ்வீரர்களை, பொதுவான முறையில் அடக்கம் செய்யக் கூட, அனுமதி மறுத்து விட்டனர், 'தேசிய' அரசு அதிகாரிகள். எனவே, அவ்வீரர்களுடைய நினைவாக, என் வாழ்க்கை வரலாற்றின் முதல் பாகத்தை, அவர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். அந்த வீரத் தியாகிகளின் நினைவுகள், நம் இயக்கத்தினருக்கு என்றும் வழிகாட்டும் தீபமாக இருக்க வேண்டும். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !