உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'நடிகமணி டி.வி.நாராயணசாமி' நூலிலிருந்து, நாராயணசாமி எழுதியது: மதுரையில், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்புகளை முறியடித்து, வீதிதோறும் கழகக் கொடிகளை பறக்க விட்டார் மதுரை முத்து. தி.க.,விலிருந்து, தி.மு.க., துவங்கப்பட்டதும், மதுரை நகரச் செயலரானார், முத்து.இந்நிலையில், கழக நாளேடான, 'நம்நாடு' இதழின் விற்பனை உரிமையை, தனக்கு தர வேண்டும் எனக் கோரினார் முத்து; ஆனால், தலைமைக் கழகம் அந்த உரிமையை வேறொருவருக்கு வழங்கியது. வேதனை அடைந்த முத்து, என்னிடம் வந்து, 'நீங்கள் தான் அண்ணாதுரையிடம் எடுத்துச் சொல்லி, கட்சிக்காக பாடுபடும் எனக்கு, 'நம் நாடு' பத்திரிகை விற்பனை உரிமையை, வாங்கிக் கொடுக்க வேண்டும். மதுரையில், நான் மானத்தோடு வாழ வேண்டுமானால், நீங்கள் அண்ணாதுரையிடம் எனக்காகப் பேச வேண்டும். 150 ரூபாய் கொண்டு வந்துள்ளேன். விற்பனை உரிமை பெற, 500 ரூபாய் கட்ட வேண்டும். மீதிப் பணத்தை நீங்கள் ஏற்பாடு செய்து, எனக்கு உதவ வேண்டும்...' என்று வேண்டிக் கொண்டார்.முத்து மீது எனக்கு பரிவு ஏற்பட்டது. மிரட்டலுக்கு அஞ்சாமல், வெட்டு, குத்துகளுக்கு மத்தியில், மாற்றாரை மருட்சியடையச் செய்து, மதுரை நகர் முச்சந்திகளிலே கழக கொடியை கம்பீரமாகப் பறக்க விட்ட வீரனான முத்துவை பற்றி ஒரு கணம் சிந்தித்து, அண்ணாதுரையை சந்திக்க சென்னை சென்றேன்.பொதுவான நல விசாரிப்புக்கு பின், அண்ணாதுரையிடம், 'நம்ம மதுரை முத்துவுக்கு, 'நம் நாடு' ஏஜன்சிய கொடுக்கலயாம். அதை வேறு யாருக்கோ கொடுத்திருக்கீங்களாம். முத்துவுக்கு, மதுரை விற்பனை உரிமை தரணும்ன்னு சொல்றதுகாகத்தான் வந்தேன்...' என்றேன்.'முத்து பண விஷயத்தில் சரியாக இருக்க மாட்டாரே நாராயணசாமி...' என்றார் அண்ணாதுரை.'இருக்கலாம்... ஆனா, நமக்கு தெற்கே யாருமில்லயே...' என்ற என் யதார்த்தமான வார்த்தைகள், அண்ணாதுரை மனதை தொட்டு விட்டது.தெற்கே எங்கள் ஆதரவாளர்களில் பட்டிவீரன் பட்டி சவுந்திரபாண்டியன் ஒதுங்கி விட்டார். பி.டி.ராஜன் கருத்து வேறுபாட்டுடன் இருந்தார்.'சரி... பொன்னம்பலனாரிடத்தில் சொல்...' என்றார்.'முன்பணம், 500 ரூபாய் கட்டணுமாம்; முத்து, 150 ரூபாயும், என் பணம், 150 ரூபாயும் சேர்த்து, 300 ரூபாய் தான் கொண்டு வந்துள்ளேன்...' என்றேன்.'பரவாயில்ல... கொடுத்துட்டுப் போ...' என்றார் அண்ணாதுரை.ஏஜன்சி உரிமை, முத்துவுக்கே கிடைத்தது.சங்கீத விமர்சகர், மறைந்த சுப்புடு எழுதியது: இப்போது, பரதநாட்டியத்திற்கு உலகெங்கும் மவுசு; 30 ஆண்டுகளுக்கு முன், ஒரு குறிப்பிட்ட குலத்தினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த பரதம், இன்று, வைதீக சிகாமணிகள் இல்லங்களிலும், புகுந்து விளையாடுகிறது.இது, உண்மையில் முன்னேற்றம் தானா என்று எண்ணும் போது, பயங்கர உண்மை வெளிப்படுகிறது.முக்கால்வாசி பதங்கள், சிருங்கார ரசத்தையே அடிப்படையாகக் கொண்டு, கவனம் செய்யப்பட்டுள்ளன. நற்குடும்பங்களில் பிறந்து, இல்லற வாழ்வை மேற்கொள்ள வேண்டிய இளம் நடனமணிகளின் உள்ளங்களில் உறங்கிக் கிடக்கும் இயற்கை ரகசியங்களை, ஓயாமல் தூண்டி விடுவதன் விளைவை யோசித்துப் பாருங்கள்.படுக்கை சுடுதடிகிடக்க வழியில்லைமடக்க ஆளில்லைதுடுக்கு பேசாதேடீ- என்பது போன்று அமையும் சிருங்காரப் பதங்களுக்கு, அபிநயம் பிடிக்க முயல்வதன் முடிவை நினைத்துப் பாருங்கள். லாபகரமாக அமைந்து விட்ட இக்கலையில், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றாகி விட்டது.கழுத்து வரை முடி வளர்ந்தவுடன், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டிட்டு, கடுக்கண் அணிந்து தயாராகி விடுகிறார், நட்டுவனார்.'கண்மணி' என்ற சொல்லுக்கு, கண் முத்திரை காட்டி, மணி அடித்துக் காட்டும் மலையாள நட்டுவனாரை எனக்கு தெரியும்.இன்று, கலாஷேத்திரத்திற்கு யார் போகின்றனர். ஐந்து ஆண்டுகள் பயிற்சி; மூன்று பாஷைகள் கற்க வேண்டும்; பரீட்சை உண்டு. இந்த உபத்திரவம் எல்லாம் எதற்கு?இதோ, தமுக்கடியா பிள்ளை இருக்கிறார். ஆறே மாதத்தில் அரங்கேற்றம்; அதன்பின், குரங்கேற்றம் தான். ஏனெனில், நட்டுவனாரின், 'கோல்' இல்லாவிட்டால், இந்த, குரங்கு ஆட முடியாது.'அயல்நாட்டு நகைச்சுவை' நூலிலிருந்து: முதலமைச்சர்: நம்முடைய உணவு நிலைமை எப்படி உள்ளது?உணவு மந்திரி: கவலைப்படக் கூடிய நிலையில் இல்லை.முதலமைச்சர்: அப்படியா... கையில் எவ்வளவு அரிசி உள்ளது?உணவு மந்திரி: ஐந்தாண்டுகளுக்கு போதுமான இருப்பு உள்ளது.முதலமைச்சர்: கோதுமை...உணவு மந்திரி: நான்கு ஆண்டுகளுக்கு தாராளமாக வரும்.முதலமைச்சர்: சர்க்கரை...உணவு மந்திரி: மூன்றாண்டுகளுக்கு கவலையே இல்லை.முதலமைச்சர்: எண்ணெய் வகையறாக்கள்...உணவு மந்திரி: இரண்டு ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.முதலமைச்சர்: பின் ஏன், எதிர்க்கட்சிகள் உணவுப் பஞ்சத்தை பற்றி பெரிதுபடுத்தி பேசுகின்றனர்?உணவு மந்திரி: மன்னிக்கவும்... மக்களின் உணவு நிலைமை பற்றியா கேட்டீர்கள்... நான், நம் இரு குடும்பத்திற்கான கையிருப்பை பற்றி கேட்பதாக அல்லவா நினைத்துக் கொண்டேன்!(போலந்து நாட்டு சிரிப்பு) நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !