திண்ணை!
இ.ஆர்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:கோபாலகிருஷ்ண கோகலே, மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத வேண்டிய சமயம், '15 வயதுக்கு மேற்பட்டோர் தான், மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதலாம்...' என்ற சட்டம் இருந்தது. கோகலேயின் வயது, 14. எப்படியும் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆவல். ஆனால், குழந்தைக்கு வயதாகவில்லை என, அவ்வளவாக அக்கறை காட்டவில்லை, பெற்றோர். நேராக தலைமை ஆசிரியரின் வீட்டுக்கு சென்றார், கோகலே.'ஐயா, நான் மிகவும் ஏழை. ஒரு ஆண்டை வீணாக்கி, அடுத்த ஆண்டு தேர்வு எழுதுவது என்னால் இயலாது. தயவுசெய்து, இந்த ஆண்டே, தேர்வு எழுத, தாங்கள் உதவ வேண்டும்...' என்றார்.'சட்டத்தை மீறி நான் எதுவும் செய்ய இயலாது...' எனக் கூறி, வீட்டினுள் சென்று விட்டார், தலைமை ஆசிரியர்.மறுநாள் காலை, வெளியே வந்த ஆசிரியர், வாசற்படியிலேயே, கோகலே இருந்ததை பார்த்தவர், 'இரவு முழுதும் இங்கேயே இருந்தாயா...' என, ஆச்சரியத்துடன் கேட்டார்.'கோடி வீட்டு மக்கு பையனை தேர்வு எழுத அனுமதிக்கும்போது, படிப்பில் ஆர்வம் காட்டும், இப்பையனை அனுமதிக்க கூடாதா...' என, பரிந்துரைத்தார், ஆசிரியரின் மனைவி.'தேர்வுக்கு படிக்க வேண்டிய தேக பலம் வரவேண்டாமா... அதற்காக தான், 15 வயது என, வைத்துள்ளனர்...' என்றார், தலைமை ஆசிரியர்.தலைமை ஆசிரியரின் வார்த்தைகளை கேட்ட, கோகலே, 'எனக்கா தேக பலம் இல்லை. எத்தனையோ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று, பல பதக்கங்களும், கோப்பைகளும் வாங்கி உள்ளேன். உங்களுக்கு காட்டுகிறேன்...' என கூறி, வீட்டிற்கு ஓடிச்சென்றார். பரிசு பொருட்களை எடுத்து வந்து, ஆசிரியரிடம் காண்பித்தார்.இப்பையனின் விடா முயற்சியையும், ஆர்வத்தையும், திறமையையும் கண்டு, '14 வயதில், இவன், தேர்வு எழுத தகுதியுடையவன்...' என, பரிந்துரை செய்து, அனுமதி வாங்கி, தேர்வு எழுத வைத்தார், தலைமை ஆசிரியர்.கோகலேவின் எண்ணமும் நிறைவேறியது.பொறியாளரின் தந்தை என போற்றப்படும், மறைந்த, எம்.விஸ்வேஸ்வரய்யாவிற்கு, 'பாரத ரத்னா' பட்டம் கொடுக்க, 1955ல் முடிவு எடுத்தது, இந்திய அரசு. அப்போது, அவருக்கு வயது, 94.'பாரத ரத்னா' பட்டம் பெற்றுக்கொள்ள, டில்லி சென்றவர், அப்போதைய ஜனாதிபதி, டாக்டர் ராஜேந்திரபிரசாத் விருப்பப்படி, குடியரசு மாளிகையில், மூன்று நாள் தங்கியிருந்தார். நான்காவது நாள், குடியரசு மாளிகையை காலி செய்து, வேறு விடுதிக்கு போக, ஜனாதிபதியிடம் அனுமதி கேட்டார், விஸ்வேஸ்வரய்யா.'தாங்கள், அந்த பட்டம் பெறும் நாள் வரை, இங்கேயே தங்கலாம்...' என்றார், ஜனாதிபதி.'மூன்று நாட்களுக்கு மேல், எந்த விருந்தினரும், குடியரசு தலைவர் மாளிகையில் தங்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறதே...' என்றார், விஸ்வேஸ்வரய்யா.'தங்களை போன்ற வயோதிகர்கள், அந்த விதிமுறைப்படி நடக்க வேண்டியதில்லை...' என்றார், ஜனாதிபதி.'என்னை போன்றவர்களை, நீங்கள் வயோதிகர்களாக மதிப்பதால் தான், நான் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்...' என்று சொல்லி, குடியரசு மாளிகையை காலி செய்து, வேறு விடுதிக்கு சென்றார்.நடுத்தெரு நாராயணன்