உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பேராசிரியர் ரா.மோகன் எழுதிய, 'நகைச்சுவை நாயகர்கள்' நுாலிலிருந்து: கிருபானந்த வாரியார், எதையும் நகைச்சுவையாக சொல்வதில் வல்லவர்.முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது என கூறுகையில், 'முருகன், நாம் கேட்டதை எல்லாம் தரும் வள்ளல். வள்ளல் என்பது ஆண் பால். அதன் பெண் பால் தான், வள்ளி. ஆக, முருகனின் மனைவி, அதாவது, வள்ளலின் மனைவி, வள்ளியானார்...'அதேபோல், இல்லாள்... இல்லத்தை ஆள்பவள். பெண் பாலாகத்தான் குறிப்பிடுகிறோம். இதையே ஆண் பாலாக குறிப்பிட முடியுமா... அப்படி குறிப்பிட்டால், 'இல்லான்' ஆகி விடுவார். பொருள்: எதுவுமே இல்லாதவன் என்பதாகும்.'இதனால், மனைவி, இல்லத்தை ஆள்பவள் என்பதை உணர்ந்து தான், பிச்சைக்காரன் கூட, 'அம்மா... பிச்சை...' என்று கேட்கிறான். 'அய்யா... பிச்சை...' என, கேட்பதில்லை...'நம் புராணங்களில், மன்மதன் உண்டு; அவனை, காமன் என, அழைப்பர். இவன், காதல் மன்னன். இவனுடைய அருள் இருந்தால் தான், மனிதர்களுக்கு சிருங்கார உணர்வே வரும். இவனுக்கு ஏன், காமன் என பெயர் தெரியுமா... எல்லா மதங்களிலும், நாடுகளிலும் காதல் தேவன் உண்டு. ஆக, அவன் பொது. இதை ஆங்கிலத்தில், 'Common' என, அழைப்பர். தமிழிலும், காமன். புரிந்ததா?' என்றார்.எழுத்தாளர் ரெ.சண்முக வடிவேல் எழுதிய, 'தமிழ் வளர்த்த சான்றோர்கள்' நுாலிலிருந்து: சாலமன் பாப்பையா தலைமையேற்று நடத்திய, ஒரு பட்டிமன்றத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி:ஒருமுறை, ஒரு அம்மையார் தொடர்பே இல்லாமல், அவருக்கு தெரியும் என்பதற்காக, பாட்டு பாடினார். சாலமன் பாப்பையா, பட்டி மன்றங்களில் இப்படி பாட்டு கேட்பது அரிது. அவர் அதை தவிர்ப்பார். இருந்தும், இந்த அம்மையார், 'சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா... என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலே...' என்ற பாடலை, பாடினார்.உடனே, பாப்பையா குறுக்கிட்டு, 'புண்ணியவான் குடுத்து வச்சவன்; ஓடிப்போயிட்டான்...' எனக் கூற, சபையே சிரிப்பால் அதிர்ந்தது.முல்லை பி.எல்.முத்தையா எழுதிய, 'அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து: ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மாட்டினால், உடனே, அவரை பணியிடம் மாற்றுவர். அவரோ, புதிய இடத்திலும் ஊழல் செய்வார்.ஒரு அதிகாரி, மண் ஊழலில் ஈடுபடுவது தெரிய வர, அவரை, கடற்கரை பகுதிக்கு மாற்றினர். அவரோ, கடல் மண்ணை விற்க ஆரம்பித்து, தொடர்ந்து, 'கல்லா' கட்டினார்.தமிழகத்தின் முதல்வராக, ராஜாஜி இருந்தபோது, குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள, ஆட்சித் தலைவர் வாங்கும் லஞ்சத்தை எல்லாம் குறிப்பிட்டு, அவரை மாற்ற வேண்டும் என, நண்பர் ஒருவர், கடிதம் எழுதினார்.'அந்த ஆட்சித் தலைவரை மாற்ற முடியாது. ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற, நான் விரும்பவில்லை. அந்த ஆட்சித் தலைவர் மீதுள்ள ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை அனுப்புங்கள். நான், அவரை, ஜெயிலுக்கு அனுப்புகிறேன்...' என்று, அவருக்கு பதில் எழுதினார், ராஜாஜி.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !