திண்ணை!
க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: பிரிட்டிஷ் பிரதமராக இருந்த, சர் வின்ஸ்டன் சர்ச்சில், பேச்சு திறமையில் வல்லவர். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக ஏழ்மையில் பிறந்து, உயர் பதவியை அடைந்தவர்.ஒரு சமயம், தம் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களையும், சோதனைகளையும் பற்றி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை மடக்க நினைத்த ஒருவன், 'அனுபவம், மூடர்களுக்கு தான் பாடம் கற்பிக்கும்...' என்றான்.உடனே, 'என் நண்பனே... இதை, நான் ஒப்புக்கொள்கிறேன். எனவே தான், என் அனுபவம், உனக்கு பயனாக அமையும் என்று கருதுகிறேன்...' என்றார், சர்ச்சில்.மடக்கியவன், 'கப்சிப்' ஆனான்.ஒரு நிகழ்ச்சியில், 'அரசியல்வாதிக்கு தேவையான தகுதிகள் யாவை...' என, சர்ச்சிலிடம் கேட்டான், ஒருவன்.மழுப்பாமல், தைரியமாகவும், தெளிவாகவும், 'நாளை நடப்பதையும், அடுத்த மாதம். அடுத்த ஆண்டு நடக்கப் போவதையும், முன்கூட்டியே சொல்லக் கூடிய சாமர்த்தியம், அரசியல்வாதிக்கு மிக மிக அவசியமானது.'ஒருவேளை, அவன் சொன்ன அரசியல் ஆரூடம் பலிக்கவில்லை என்றால், அதை சமாளிப்பதற்குரிய திறமையும், தெளிவான காரணங்களை காட்டி பேசக்கூடிய வலிமையும் வேண்டும். அப்போது தான், அரசியலில், எந்த ஒரு அரசியல்வாதியும், அந்தஸ்தையும், அதிகாரத்தையும் பெற முடியும்...' என்றார்.அன்று, அவர் சொல்லிய அரசியலின் தகுதி, என்றும் பொருந்தும் என்பதை, இன்றும் உணர்கின்றனர், மக்கள். வக்கீலாக வேலை பார்த்த, ஆப்ரகாம் லிங்கன், கட்சிக்காரர்களிடம், 'இவ்வளவு கொடுங்கள்...' என, கேட்க மாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.இதை பார்த்த அவர் மனைவி, 'நீங்கள், எதற்காக வக்கீல் தொழில் செய்கிறீர்கள்...' என்று கேட்டார்.'புகழுக்காக... அந்த புகழால் கிடைக்கும் மன அமைதிக்காக...' என்றார், லிங்கன்.'வெறும் புகழ் மட்டும், மனிதனுடைய வயிற்றை நிரப்பி விடாதே. வாழத் தெரியாத வக்கீலாக உள்ளீரே...' என்றார்.'இந்த ஒரு சாண் வயிறு நிரம்புவதை பற்றியா, நான் அதிகம் கவலைப்பட வேண்டும். எந்த மிருகமும், பறவையும் கவலைப்படாத ஒரு விஷயத்தை பற்றி, மனிதன் ஏன் மூளையை குழப்பிக் கொள்ள வேண்டும்...' என்றார்.இந்த சமாதானம், அவர் மனைவியை திருப்திபடுத்தவில்லை.'மற்ற வக்கீல்கள், நிறைய சம்பாதிக்கின்றனர்; வசதிகளை பெருக்கிக் கொள்கின்றனர். நீங்கள், இதற்கு மாறாக நடப்பதில் என்ன லாபம்...' என்றார்.'லாபம் சம்பாதிக்க, மூளை தேவையில்லையே... ஒரே ஒரு கைத்துப்பாக்கியை வைத்து, ஊரை மிரட்டினால் கூட பணம் குவிந்து விடும். நானும், அப்படி மாற வேண்டுமா...' என்று கேட்டதும், அவர் மனைவியிடமிருந்து பதில் இல்லை.ஆண்டுகள் பல கடந்து, உழைப்பால், முயற்சியால், அமெரிக்க ஜனாதிபதியானார், ஆப்ரகாம் லிங்கன். ஒருநாள், அவர் மனைவி, 'ஒரு காலத்தில், உங்களை, பணம் சம்பாதிக்கும்படி வற்புறுத்தினேன். இப்போது தான் அந்த உண்மை எனக்கு புரிகிறது...' என்றார்.'அது என்ன...' என, கேட்டார், லிங்கன்.'பணம் சம்பாதித்த, வக்கீல்கள் யாரும், ஜனாதிபதியாக வரவில்லை. புகழ் தேடிய தாங்கள், ஜனாதிபதியாகி விட்டீர்...' என்றார். மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருப்பவர் மட்டும், பிறகு அதைவிட உயர்ந்த பதவிக்கு போய் விடுவர். அந்த இலாகாவின் ராசி அப்படி.இந்த இலாகா அமைச்சராக இருந்த, ஆர்.ஆர்.திவாகர், பீகார் கவர்னர் ஆனார். பின், அந்த இலாகா அமைச்சரான, கோபால ரெட்டிக்கு, உ.பி., கவர்னராகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், அந்த இலாகாவின் அமைச்சரான, சத்தியநாராயண சின்ஹாவும் கவர்னரானார். பிறகு, இந்த இலாகாவின் அமைச்சரான, கே.கே.ஷா, தமிழக கவர்னராகவும், இன்னொரு அமைச்சரான, நந்தினி சத்பதி, ஒடிசா மாநில முதல்வராகவும் ஆயினர்.இதே இலாகாவின் அமைச்சராக இருந்த, இந்திரா, பிறகு, பிரதமர் ஆனார். இந்திராவிடம் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த, ஐ.கே.குஜ்ராலும், ஜனதா ஆட்சியில், ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த, எல்.கே.அத்வானியும் பின்னர், துணை பிரதமர் ஆயினர். நடுத்தெரு நாராயணன்