திண்ணை!
இந்திய நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம், அது. குதிராம் போஸ் என்ற சிறுவன், தன் சித்தியுடன் சந்தைக்கு சென்றான். ஆங்கிலேயர்கள் வசிக்கும் வீதியை கடந்து தான், அவர்கள் செல்ல வேண்டும். அத்தெருவில், மனிதர்களை போல சாதாரணமாக நடந்து செல்ல முடியாது. விலங்குகளை போல, முட்டிப் போட்டு தவழ்ந்து தான் அந்தப் பகுதியை கடந்து செல்ல வேண்டும்.கர்ப்பிணி சித்தியும் அதுபோல சென்றதைக் கண்ட, குதிராம் போஸ், அதற்கு எதிராக மேடை போட்டு முழங்கினான். அரசுக்கு எதிராக சதி செய்ததாக கூறி, அவனுக்கு துாக்கு தண்டனை விதித்தது, ஆங்கிலேய அரசு.துாக்கு மேடையிலிருந்தபோது, தன் சித்திக்கு, கடைசியாக ஒரு கடிதம் எழுதினான், போஸ்.அதில், 'உனக்கு பிறக்கும் குழந்தையின் கழுத்தை தடவிப்பார். கழுத்தில் துாக்கு கயிற்றின் தழும்பு இருக்கும். மீண்டும் நான் பிறப்பேன்; மறுபடியும் விடுதலைக்காக போராடுவேன்...' என்று, எழுதி இருந்தான். அப்போது, குதிராம் போஸின் வயது, 16.'டெக்கான் ஹெரால்டு' நாளிதழில் வந்த கட்டுரை:ஒரு மன்னருக்கு, விழாக்களை வித்தியாசமாய் கொண்டாட ஆசை. பண்டிகையின் போது, ஒரு போட்டி வைத்தார்.'மக்கள், தங்களிடம் உள்ள மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வரவேண்டும். அதில், மிக மதிப்புமிக்கதாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பரிசு உண்டு...' என அறிவித்தார்.தங்களிடமிருந்த அதிக மதிப்புமிக்க பொருட்களை எடுத்து வந்து, பார்வைக்கு வைத்தனர், மக்கள்.அவற்றை பார்த்தபடியே வந்தபோது, ஒரு தாய், ஐந்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது போன்ற ஒரு புகைப்படம் இருந்தது. அதை பார்த்து திகைத்தவர், 'யார் இந்த புகைப்படத்தை வைத்தது...' எனக் கேட்டார், மன்னர்.'நான் தான் வைத்தேன்...' என்றார், ஒரு இளம்பெண்.'இந்த படத்தை ஏன் வைத்தாய்?''உலகில், ஒரு தாயை விட மதிப்புமிக்கது எதுவும் இல்லை. அதனால் தான் வைத்தேன்...' என்றாள்.திகைத்தவர், 'ஆமாம்... ஒரு தாயை விட மதிப்புமிக்கது எதுவும் இல்லை...' எனக் கூறி, அதற்கே பரிசளித்தார்.சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஒரு போட்டி அறிவித்தார், மன்னர்.'இனி பயன்படாது என, கருதுபவைகளை எடுத்து வந்து வையுங்கள். அதில், என்னை பாதித்ததற்கு பரிசு தருகிறேன்...' என, கூறியிருந்தார்.மக்கள் போட்டி போட்டு, பொருட்களை எடுத்து வந்து வைத்தனர்.அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தார், மன்னர். அப்போது, அங்கிருந்த ஒரு புகைப்படம் அவரை திகைக்க வைத்தது.'யார் இதை இங்கே வைத்தது...' என, குரல் கொடுத்தார்.கடந்த ஆண்டு பரிசு பெற்ற அதே இளம்பெண் மீண்டும் வந்தாள்.'ஒரு தாய் பிச்சையெடுப்பது போல் புகைப்படம் வைத்திருக்கிறாயே, ஏன்...' என கேட்டார், மன்னர். 'அதுவா, இவருடைய மகன்கள், தாய் இனி பயன்பட மாட்டாள் என தீர்மானித்து, உணவளிக்காமல் விரட்டி விட்டனர். அதனால், உணவுக்காக, பிச்சை எடுக்கிறாள்...' என்று கூறினாள்.திகைத்தவர், 'மனதை நெருடினாலும், இதுவே இந்த ஆண்டின் மிக பாதித்த, பயன்படாதது...' என கூறி, பரிசளித்தார், மன்னர்.- நடுத்தெரு நாராயணன்