உள்ளூர் செய்திகள்

திண்ணை!

ஜூன் 24, கண்ணதாசன் பிறந்த தினம்கண்ணதாசன் பதிப்பக வெளியீடான, 'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து: ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாக கூறினர். அப்போது, நான் சில விளக்கங்கள் கொடுத்தேன். நாட்டில் உள்ள நஞ்சை நிலப்பரப்பு எவ்வளவு, ஜனத்தொகை எவ்வளவு, விளைச்சல் எவ்வளவு, உழவுக்கு என்னவாகும். இது, விவசாயிகளுக்கு எப்படி கட்டுப்படியாகும் என்று கணக்கு சொன்னேன்.அந்த கணக்கை மக்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. 'அவன் கொடுக்கிறேன் என்கிறான். கொடுக்கட்டுமே...' என்று தான் கூறினர். கார்ப்பரேஷன் தேர்தலின் போது, கவுன்சிலர்கள், நர்சுகளை வைப்பாட்டியாக, வாத்தியார்களை, பெண்டாட்டியாக வைத்துக் கொண்டுள்ள சம்பவங்களை சொன்னபோது, என்ன கூறினர்?'அவன் உடம்பில் ரத்தம் இருக்கிறது, வச்சுக்கிறான். இவனும்தான் வச்சுக் கொள்ளட்டுமே... மற்றவர்களைப் பற்றி என்ன கவலை?' என்றனர், மக்கள்.'லஞ்சம், ஊழல் அதிகமாகி விட்டதே...' என்றால், 'அதிலே என்ன தப்பு? இருக்கிறவன் கொடுக்கிறான். இல்லாதவன் வாங்கிக்கிறான்...' என்கின்றனர்.எது பேசினாலும், நம் ஜனங்களிடம், 'மொராலிடி, லாஜிக்' எதுவும் எடுபடவில்லை. வெறும் வாக்குறுதிகளுக்கும், 'இதோ செய்து விடுகிறேன். அதோ செய்து விடுகிறேன்...' என்கிற போக்குக்கும் தான், மரியாதை இருக்கிறது.அன்னையர் தினத்துக்கு உள்ள மதிப்பு, தந்தையர் தினத்துக்கு கிடைக்கவே இல்லை என, எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதிய, 'நாலு மூலை' என்ற நுாலிலிருந்து:மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், அய்யாசாமி. அவருக்கு ஒரே பிள்ளை, பாலகுரு. அவனை நன்கு படிக்க வைத்து, வங்கியில் வேலை வாங்கிக் கொடுத்து, திருமணமும் செய்து வைத்தார்.பாலகுருவுக்கு பெண் ஒன்று, ஆண் ஒன்று என, இரு குழந்தைகள்.அய்யாசாமியின் மனைவி இருந்தவரை சிக்கலின்றி சென்ற குடும்ப சூழ்நிலை, அவர் நோய் வாய்ப்பட்டு இறந்தது முதல், பிரச்னை தலை துாக்கியது. மரியாதையை காப்பாற்றிக்கொள்ள, முதியோர் இல்லத்தில் சேர்ந்தார், அய்யாசாமி.ஒருநாள், பைக்கில் அலுவலகத்துக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தான், பாலகுரு. உடல் செயலற்றுப் போனது. இனி, வாழ்க்கை மொத்தமும் சக்கர நாற்காலி என்று ஆகிவிட்டது. வங்கி வேலையை இழந்தான்.துடித்துப் போனார், அய்யாசாமி. அவன் வீட்டுக்கு போவதும், தங்குவதுமாக இருந்தார். இதுதான் பிடிக்கவில்லையோ அல்லது வேறு காரணமோ, வீட்டையும், கணவனையும், இரண்டு குழந்தைகளையும் அம்போ என்று விட்டு போய் விட்டாள், பாலகுருவின் மனைவி.மகனுடனேயே போய் தங்கி விடலாம் என்று, முதலில் நினைத்தார், அய்யாசாமி. ஆனால், முதியோர் இல்லத்தில், சில பொறுப்புகளையும் கவனித்து வந்ததால், ஒரேயடியாக போக முடியவில்லை. தினமும், இரவு மட்டும் முதியோர் இல்லத்தில் படுக்க வருவதாக ஏற்பாடு செய்து கொண்டார். காலையில் மகன் வீட்டிற்கு போய், அவனுடைய ஒவ்வொரு தேவையையும் கவனித்துக் கொண்டார். பேரக் குழந்தைகளையும், சமையலையும் கவனித்துக் கொள்ள, வேலைக்காரியை போட்டிருந்தார். மற்றபடி, மகனை பார்த்துக் கொள்வது, அவர் தான்.சில நாட்களுக்கு முன், அவரை சந்தித்த போது, ஒரு விஷயத்தை கவனித்தேன். முதியோர் இல்லத்தில் சேர்ந்த புதிதில், வற்றலும் தொற்றலுமாக, அரை நோயாளி களையுடன் இருந்தார். இப்போது, தோற்றம் மற்றும் முகத்தில் பிரகாசமும், நடவடிக்கைகளில் சுறுசுறுப்பும் காணப்பட்டது.'அன்று, மகன் என்னை கவனிக்காமல் விட்டான் என்பதற்காக, இன்று நான், அவனை விட முடியுமா...' என்றவர், கனத்த இதயத்துடன் ஒரு வார்த்தை சொன்னார்...'கடவுளிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்று தான். எனக்கு முன் அவன் போய் விட வேண்டும். இல்லாவிட்டால் அவன்... அவன்...'மேலே பேச முடியாமல் குரல் தழுதழுத்தது. பிள்ளை மீது எவ்வளவு பிரியம் இருந்தால், இப்படியொரு குரூரமான பிரார்த்தனையை முன் வைத்திருப்பார்.ஏராளமான அப்பாக்கள் இவரைப் போல்தான் இருக்கின்றனர். ஆனாலும் என்னவோ, அன்னையர் தினத்துக்கு உள்ள மவுசு, தந்தையர் தினத்துக்கு இல்லை. நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !