கவிதைச்சோலை!
புதிய விடியல்! ஓ மானிடனே... இந்நாள் வரை...பூமிப்பந்தின் வயிற்றுக்குள் நச்சுக் காற்றை புகுத்திநதித் தாயின் உடலில் சாயக் கழிவுகள் பூசி அழகு மரங்களை கொள்ளை அடித்து பச்சை வயல் பரப்பினில் மிச்சமின்றி கட்டடம் எழுப்பி இயற்கையின் ஈரத்தை மலடாக்கி செயற்கையில் அக மகிழ்ந்தோம்! பள்ளி செல்லும் பிள்ளைகள்துள்ளி மகிழும் காலம் பறித்துமுதியோர் புரிதல் புறந்தள்ளி அவசர கதியில் வாழ்வு நகர்த்தி பரவச கணங்களைப் பறி கொடுத்தோம்! துரித உணவில் நாட்டம் கொண்டுஅரிய உடல் நலம் நட்டம் அடைந்துலஞ்சம் ஈந்து நெஞ்சம் நிமிர்ந்து இலவசத்தின் பிடியில் உழைப்பு துறந்து'இன்னா' என அறிந்தும் 'இன்ன பல' இன்னமும் செய்து கொண்டிருக்கிறோம்! ஓ மானிடனே...புத்தாண்டு பிறக்கும் இத்தருணம்சத்தான கருத்துக்களைஆபரணமாய் அணிவோம்! பாலியல் பலாத்காரம் பாடை ஏறபோதை மது வாதையாகிப் போகவன்முறைக் கலாசாரம் வெளிநடப்பு செய்ய பண்பின் விலாசம் விசாலமாய் உள் நுழைந்து ஆட்சி செய்ய கலாபம் விரித்து வரவேற்பு அளிப்போம்! சூறாவளி புரட்டிப் போட்ட சுவடுகளைமாறாக் கருணையால் ஒத்தி எடுத்துவயோதிக தலைமுறை வருத்தம் துடைத்து இளைய தலைமுறை நெருக்கம் கொள்ள உழைத்துப் பிழைக்கும் உன்னத மாண்பு தழைத்து ஓங்க தயார் செய்வோம்! வறுமைப் பிடியில் சுருங்கும் மனதைவிரியும் வண்ணம் நம்பிக்கை விதைத்துஜாதி, சமய, நெருப்புக் கொழுந்தை அன்பின் திவலையால் அணைய செய்வோம்! மண்ணின் வரங்கள் மரங்கள் நட்டு நதியின் கற்பு நயம்பட காத்து உணவே மருந்தென காடுகழனி பேணி மிளிரும் இயற்கை வனப்பு மேனி ஒளிரும் வண்ணம் ஒப்பனை சேர்ப்போம்! நேயப்பூக்கள் சாயமின்றி பூத்துக் குலுங்க பாயும் வெள்ளம் மேவிய வண்ணம் பாய்ந்தோட ஒற்றுமையின் ஊற்றுக்கண் ஊன்று கோலாகி நாட்டின் வளர்ச்சிக்கு நல்ஏணியாகி புத்தாண்டில் புது விடியல் படைக்க தித்திக்கும் உள்ளமுடன் சபதம் ஏற்போம்! — மலர்மகள், மதுரை.