பாசக்கார குதிரைக்காரர்!
செல்லப் பிராணிகள் என்றால், ஒரு சிலருக்கு கொள்ளைப் பிரியம். தங்களின் குழந்தையைப் போல், தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது, பாசத்தை பொழிவர். பிரிட்டனிலும், இப்படி ஒரு பாசக்கார குதிரைக்காரர் இருக்கிறார். பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் <உள்ள வெர்க்ஸ்ஹாம் என்ற சிறிய நகரம் தான், இவரது சொந்த ஊர்.இவர், ஒரு குதிரையை வளர்த்து வருகிறார். அந்த குதிரை மீது, இவருக்கு அதிக பாசம். எங்கு சென்றாலும், குதிரையையும் உடன் அழைத்துச் செல்வதை பழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நாள், வெளியூர் செல்வதற்காக, அங்குள்ள ரயில் நிலையத்துக்கு வந்தார். வழக்கம் போல், தன் குதிரையையும் அழைத்து வந்தார்.அந்த ரயில் நிலையத்தில், பயணிகள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. நேராக, டிக்கெட் கொடுக்கும் இடத்துக்கு சென்ற அவர், 'எனக்கு ஒரு டிக்கெட், என் குதிரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்...' எனக் கேட்டார். 'குதிரையை எல்லாம் ரயிலில் ஏற்றிச் செல்ல முடியாது...' என, டிக்கெட் கொடுப்பவர், கண்டிப்புடன் கூறினார்; ஆனால், அதை அவர் பொருட்படுத்தவில்லை.அது, மேம்பால ரயில் நிலையம் என்பதால், அங்குள்ள லிப்டில் ஏறித்தான், ரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு செல்ல முடியும். எனவே, தன் குதிரையை அழைத்துக் கொண்டு, ஜோராக லிப்ட்டுக்குள் நுழைந்தார்.வெற்றிகரமாக, பிளாட்பாரத்துக்கும், குதிரையுடன் வந்து விட்டார். பிளாட்பாரம் வெறிச்சோடி கிடந்தது. அந்த நேரம் பார்த்து, ஒரு ரயில் வந்தது. வேகமாக, குதிரையை அழைத்துக் கொண்டு, ரயில் பெட்டிக்குள் ஏற முயன்றார், அந்த நபர்.இந்த காட்சிகளை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள், பதறிப் போய், பிளாட்பாரத்துக்கு வந்தனர். ரயில் கிளம்புவதற்குள், அங்கு வந்த அதிகாரிகள், குதிரையையும், அந்த நபரையும், அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.அந்த பாசக்கார குதிரைக்காரரோ, ரயில்வே அதிகாரிகளை வாய்விட்டு, திட்டித் தீர்த்து விட்டுத்தான், அங்கிருந்து சென்றார். தன் குதிரை மீது தான், அவருக்கு எத்தனை பாசம்.***கே. ரஷீக்லால்