உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அக்கா —நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரணமாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார். இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்தபின் தான் தெரிந்தது அவருக்கும், அவரது அண்ணிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று.இவ்வளவு படித்துப் பெரிய பதவியில் உள்ளவர் இப்படி செய்கிறாரே என்று வேதனைப்படுவேன். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானேன். குழந்தை பிறந்ததிலிருந்து எங்களுக்குள் தாம்பத்திய உறவே கிடையாது.என் அப்பா மிகப்பெரிய செல்வந்தர். நான் அழகுடன் கூடிய புத்திசாலிப் பெண். இதனால், அவருக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். எனக்கோ என் மேல் சந்தேகப்படுவதால் அவர்மீது தாளாத கோபம். ஆனால், குழந்தைகள் மீது இருவருமே மிகவும் அன்பு செலுத்துவோம்.குழந்தைகளுக்கும், வெளியில் இருப்பவர் களுக்கும் எங்கள் பிரச்னை தெரியாது. நான் மிகவும் வசதியான சூழலில் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டதால், செக்ஸ் இல்லாதது எனக்கு பெரிய குறையாகத் தெரியவில்லை.இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன், நான் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும் ஒரு அரசு அதிகாரி. அவருடன் அடிக்கடி போனில் பேச வேண்டி வந்தது. மனம் விட்டு பேசிய பின் தான் தெரிந்தது, அவர் வாழ்வும் என்னுடையதைப் போல் சோகம் நிறைந்தது என்று. போனில் பேசினோமே தவிர, நேரில் அடிக்கடி பார்க்க முடியாது.அவருடைய டிரைவருக்குத் தெரியாமல் அவரோ அல்லது என்னுடைய டிரைவருக்குத் தெரியாமல் நானோ சென்று பார்க்க முடியாது. எப்போதாவது தாங்க முடியாமல் அவர் என்னைப் பார்க்க வந்தால், அவர் நடுங்கிக் கொண்டிருப்பார். என் நிலைமையும் இதுவே.என் மீது உயிரையே வைத்திருக்கிறார். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல் என்னைக் கொஞ்சுவார். ஒரு கணவரின் அன்பு என்பது என்னவென்றே தெரியாத எனக்கு இது புதிது. ஆறு மாதங்களுக்கு முன் அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்று விட்டார். அன்று நான் அழுதது போல் என் வாழ்க்கையில் என்றுமே நான் அழுததில்லை. தினமும் ஒருமுறை என்னுடன் போனில் பேசி விடுவார். சில நாட்கள் இரண்டு, மூன்று முறை கூட பேசி விடுவார்.இந்த ஆறு மாதத்தில் இரண்டு முறை என்னைப் பார்க்க வந்தார். என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்னிடம் கேட்பது, 'இவ்வளவு அழகாகவும், இன்டலிஜென்ட்டாகவும் இருக்கும் நீ, எப்படிடா இப்படியொரு வாழ்க்கை வாழ்ற?' என்பதுதான்.அக்கா, என் வாழ்க்கையில் இப்படியொரு குழப்பம் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. முன்பெல்லாம் எனக்கு துரோகம் செய்யும் கணவருக்கு, பதிலுக்கு நானும் துரோகம் செய்ய வேண்டுமென நினைத்திருக்கிறேன். ஆனால், நிஜமாகவே நடக்கும் போது குற்ற உணர்வில் துடிக்கிறேன்.நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று இருவருக்குமே தெரியும். ஆனாலும், அவருடன் பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை. அவருக்கோ நான்தான் உலகம். என் கையில் ஒரு சிறு காயம் ஏற்பட்டாலும், அடுத்த முறை போன் செய்யும்போது மறக்காமல் விசாரிப்பார்.அன்பேயில்லாத கணவர், அன்பே உருவான என்னவர்... இருவருக்குமிடையே சிக்கித் தவிக்கிறேன். அக்கா நான் என்ன செய்ய வேண்டுமென தயவு செய்து சொல்லுங்கள். அவரை மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதீர்கள். அதற்குப் பதில், செத்து விடு என்று சொல்லுங்கள், சந்தோஷமாக செத்து விடுகிறேன். என் குழந்தை களை என் அம்மா வளர்த்து விடுவார்.எங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது! 'விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவு அது!'ஒரு வருடமாக என் இதயத்தில் பூட்டி வைத்துள்ள எனது உணர்வுகளை இன்று உங்களிடம் கொட்டி விட்டேன். எனக்குத் தயவு செய்து உங்கள் ஆலோசனைகளைக் கூறவும்.— இப்படிக்கு,உங்கள் அன்புச் சகோதரி.அன்பு சகோதரி —மிக நீளமானக் கடிதத்தையும் எழுதி, 'அவரை மறந்து விடு' என்று மட்டும் சொல்லாதீர் எனக் கட்டளையும் போட்டிருக்கிறாய்... சரி, இப்போது நீ இருக்கும் நிலையில் நான் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்கு வம் உனக்கில்லை. நிதானமாக யோசித்துப் பார்; புரியும்.'சில வீணான வதந்திகள் காரணமாக முதல் நாளிலிருந்தே என் கணவருக்கு என் மீது சந்தேகம்' என்று கடிதத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாய்...அது என்ன சந்தேகம்? அப்படியொரு சந்தேகத்தை வளர விட்டிருக்கலாமா நீ? இரண்டு வருடங்கள், அவர் அழைக்கவில்லை என்று நீ பிறந்த வீட்டில் உட்கார்ந்து விட்டதன் பலன் - அவருக்கும், அவரது அண்ணிக்கும் அங்கே உறவு பலப்பட்டு விட்டது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பெண்கள் விட்டுக் கொடுக்கவே கூடாது. 'புருஷன் வந்து கூப்பிடட்டும். அப்புறம் உன்னை அனுப்பி வைக்கிறேன்' என்று உன்னைப் பெற்றவரே சொன்னாலும் நீ கேட்டிருக்க கூடாது. 'இதுதான் என் வீடு... இங்கிருந்து என்னை யாரும் துரத்த முடியாது' என்று அழுத்தமாய் உட் கார்ந்திருக்க வேண்டும்!உனக்கு, 'செக்ஸ்' தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், உன் குழந்தைகளுக்கு அப்பாவின் அன்பு வேண்டும். அதை வேறு எந்த ஆண்மகனாலும் தர முடியாது; தந்தாலும் குழந்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.'அந்த அரசு அதிகாரியிடம் மனம் விட்டுப் பேசின பிறகுதான் தெரிந்தது... அவர் வாழ்வும் என்னுடையதைப் போல சோகம் நிறைந்தது...'- நீ எழுதிய வரிகள் தான் இது...யாருடைய வாழ்க்கையில் தான் சோகம் இல்லை தங்கச்சி? உன்னைப் பற்றி யாரோ எதையோ சொன்னதைக் கேட்ட உன் கணவரின் மனதிலிருந்த சோகம், அண்ணியிடம் போய் விழ வைத்தது...கொஞ்சம் யோசித்துப் பாரம்மா...அப்படியாவது நீ ஆசைப்படும் மனிதர் - அவரை, நீ, 'என்னவர்' என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாய் - அவர் எப்படி, 'உன்னவர்' ஆவார் தங்கச்சி? ஒரு சில முத்தங்களுக்காகவும், அன்பான வார்த்தை களுக்காகவும், இன்னொருத்தியின் சொத்துக்கு நீ ஆசைப்படலாமா?ஒரு பெண்ணுக்கு நல்ல, அன்பான புருஷன் தேவைதான். ஆனால், இறைவன் - அப்படிப் பொருத்தம் பார்த்து ஜோடி சேர்த்து விடுவதில்லை.கணவன் நடத்தை கெட்டவராகவோ, திருத்தவே முடியாத சமூக விரோதியாய் இருந்தாலோ, 'அவனுடைய சகவாசமே உனக்கு வேண்டாம்; விவாகரத்து வாங்கு' என்று நானே உனக்கு சொல்லிக் கொடுப்பேன்.ஆனால், உன் கணவரைப் போல மனதால் வக்கரித்துப் போய் பிறன் மனை விழைகிறவனுக்கும், குடிகாரனுக்கும் திருந்துவதற்கு ஓரிரு சந்தர்ப்பங்கள் கொடுத்துப் பார்க்கலாம். உனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன், என்னை நீ கேட்டிருந்தால் கூட - 'வேண்டாம் இந்த உறவு; வெட்டிக் கொண்டு வா' என்று சொல்லியிருப்பேன். இப்போது நீ அவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டாமா?கண்டிப்பாய் காதலனுடன் போக முடியாது என்ற பட்சத்தில், அவனுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்வது கேவலமில்லையா சகோதரி? நாளை, இந்த இரட்டை வாழ்க்கையின் பொறி - உன் குழந்தைகளுக்குத் தெரிய வந்தால் - அவர்கள் குன்றிப்போய் விட மாட்டார்களா? எப்போதுமே - அப்பா சரி இல்லை என்றாலும் பிள்ளைகள் சகித்துக் கொள்வர். காரணம், 'அம்மா' என்கிற மகத்தான சக்தி அவர்களுடன் இருப்பதால். ஆனால், அம்மாவுக்கு வேறொரு துணை இருக்க முடியும் என்பதை விவரம் புரியாத வயதில் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது...ஒருவேளை - குழந்தைகள் பெரியவர்களாகி, 'பாசமில்லாத அப்பாவுடன் வாழ்ந்த அம்மா - இன்னொருவரை விரும்பியதில் என்ன தவறு' என்று நினைக்கலாம். மிகவும் அபூர்வமாய் அப்படி நினைக்கிற குழந்தைகளும் இருக்கின்றனர். ஆனால், படிக்கிற வயசில் - இதெல்லாம் அந்த சின்னஞ்சிறு இதயங்களில் மிகப் பெரிய பாதிப்பை உண்டு பண்ணும். படிப்பு, கேரக்டர், மன வளர்ச்சி எல்லாமே பாதிக்கப்படும்...வாழ்க்கையில் 35, 38 வயசு வரைக்கும் தான் பெண்கள், புருஷனின் அன்பையும், அரவணைப்பையும் வேண்டி ஏங்குவர்.அதன் பிறகு - அவள் நிமிர்ந்து நின்று விடுவாள். கணவருக்கே பக்க பலமாகி விடுவாள். கம்பீரமாய், லட்சுமிகரமாய், உயர்ந்து ஓங்காரமாய் நிற்கும் அவளைப் பார்க்கையிலேயே - பார்க்கிறவர்களின் மனசிலுள்ள மாசெல்லாம் பொசுங்கி விடும். அது ஓர் உன்னதமான நிலை. அந்த நிலைக்கு வெகு சமீபத்தில் நீ நிற்கிறாய். உன் குழந்தைகளின் நினைவில் நீ என்றென்றும் தூய்மையான தாயாக இருக்கப் போகிறாய்...உன் காலத்துக்குப் பிறகு, உன் வம்சம் உன்னை தெய்வமாக்கி கும்பிட வேண்டும்; அதற்கேற்ற முயற்சிகளில் இறங்கப்பார்; மற்றவை உன் காலடி தூசு என நினை!அன்புடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !