அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா,என் வயது, 21; கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் அப்பா மிகவும் கோபக்காரர். சின்ன பிரச்னை என்றால் கூட, தகாத வார்த்தைகளால் திட்டி, அடிப்பார். என் அம்மா, மிக அமைதியானவர்; திருமணம் செய்த நாள் முதல், இன்று வரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வருகிறார். எங்களுக்காக தான், எல்லா கஷ்டங்களையும் பொறுத்து வருகிறார். எனக்கு, ஒரு அக்கா உள்ளார். அவளும் அப்பாவை போலவே, அடிக்கடி கோபப்படுவாள்; இன்னும் திருமணம் ஆகவில்லை. என் அப்பாவை பொறுத்தவரை, அவர் பேசுவது மட்டுமே சரி; மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை காது கொடுத்து கேட்க மாட்டார்.அம்மா, நாங்கள் பாத்திரக்கடை நடத்தி வருகிறோம். என் அப்பா எப்போதாவது குடிப்பார் என்றாலும், பத்து, இருபது நாட்கள் கூட தொடர்ந்து குடிப்பார். இவர் வசதிக்காக, நான் விருப்பப்படாத படிப்பை, வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரியில் படிக்கச் சொல்லி விட்டார். ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருந்தும், எங்களுக்கு செலவு செய்ய மாட்டார். நல்ல உடை கூட எங்களிடம் இல்லை.நினைத்த படிப்பு கிடைக்கவில்லை என்றாலும், எடுத்த படிப்பை நல்லவிதமாக படித்து வருகிறேன். அப்பா மிக சந்தேக குணம் உடையவர். அதனால், நான் படிப்பது பெண்கள் கல்லூரியில் தான். கட்டுக்கோப்பாக வளர்க்கிறேன் என்ற பெயரில், அடிமை போல் நடத்தினார்; அதனால், அன்பிற்காக ஏங்கினேன்.இந்நிலையில், ஒருவரை நேசித்தேன். நான், நேசிக்கும் விஷயத்தை அவரிடம் சொன்னபோது, 'வீட்டிற்கு வா... முத்தம் தா, நீ தரும் முத்தத்தின் வலிமையை வைத்து, உன் காதலை உணர்வேன்...' என்றார். அவ்வாறே செய்தேன். பின், கொஞ்ச நாளில் என்ன காரணத்தாலோ என்னிடம் அவர் பேசவில்லை. என்னை விட்டு விலகுவதுபோல் தோன்றியது. அதனால், அவரை விட்டு விலகினேன். அப்போது, என் தோழியின் அண்ணன், தானும் காதல் தோல்வியில் இருப்பதாய் கூறி, என்னிடம் அன்பாய் பேசினார். பின், என்னை மயக்கி முழுமையாய் அடைந்தார்.அவரையே, திருமணம் செய்யலாம் என நினைத்தேன். அப்போதுதான், அவன் மோசமானவன் என்பதை, அவன் நண்பன் மூலம் அறிந்தேன். பின், அந்த நண்பனும் என்னைக் காதலிப்பதாக கூற, என்னை தந்தேன். ஆனால், அவன், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், கூப்பிடும்போதெல்லாம் படுக்கைக்கு வரவேண்டும் என்றான். அதனால், அவனை விட்டு விலகினேன். இப்படியாக பல ஆண்களிடம் என்னை இழந்தேன். இது, தவறு என்று ஒரு நாள் உணர்ந்தேன்.இந்த ஒரு விஷயத்தை தவிர, மற்ற அனைத்திலும் அனைவரிடமும் நல்லவள் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளேன். இதன் பின், ஒரு நாள், மொபைல் போன் மூலம் ஒருவர் பழக்கமானார். ஓராண்டிற்கு முன் தான், இவரிடம் பழக்கம் ஏற்பட்டது. மொபைல் மூலம் பழக்கம் ஆனதால், இவரை பார்த்ததில்லை. பார்க்காமலேயே, அவரின் குணத்தை நேசிக்க ஆரம்பித்தேன். மிக நல்ல மனிதராய் தோன்றினார். உங்களை, எப்படி நம்புவது எனக் கேட்ட போது, 'உன் அம்மா, அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தால், எந்த நம்பிக்கையில் அவரை மணந்து கொள்வாய்? அந்த நம்பிக்கையை என் மீது வை...' என்பார். நான் சந்தேகப்பட்டால், 'நீ நம்ப நான் என்ன செய்ய வேண்டும் சொல்...' என்பார். இந்த ஒரு ஆண்டில், ஒரு முறை மட்டுமே என்னை சந்திக்க வந்தார்.இந்த ஒரு ஆண்டில், எனக்காக எதுவுமே வாங்கித் தந்தது இல்லை; நான் கேட்ட உதவிகளையும் செய்தது இல்லை. ஆனால், வீட்டில் வாங்கி வைத்திருப்பதாகவும் கொண்டு வர நேரமில்லை என்பார். ஒவ்வொரு முறையும் உதவி கேட்டு வரச் சொன்ன போது எல்லாம், வராமல் இருக்க எத்தனையோ காரணங்கள் கூறினார். அதனால், என் தோழிகள், 'நீ கேட்டு எதையுமே செய்யவில்லை; அவன், உன்னை ஏமாற்றி விடுவான். காதலிக்காக, இன்று வரை ஒரு பொருளாவது வாங்கித் தந்திருக்கிறானா? கேட்டால் காரணம் சொல்கிறான், நம்பாதே...' என்கின்றனர்.அம்மா, இதுவரை அவர் என் மீதான காதலை வெளிப்படுத்துவது போல் எனக்காக, எந்த சிறு உதவியோ, பொருளோ வாங்கித் தந்தது இல்லை. இது, என் மனதிற்கு உறுத்தலாக உள்ளது. இது பற்றி கூறினால், 'இப்போது வேண்டுமானாலும் வா... திருமணம் செய்து கொள்ளலாம்...' என்கிறார். அவரின் தம்பி, தங்கை, அக்கா அனைவரும், அவர் என்னை மிகவும் நேசிப்பதாய் கூறுவர்.அம்மா, இப்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். திரும்பி வர, ஒரு ஆண்டு ஆகும். திரும்பி வந்ததும், வீட்டில் பேசி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த ஒரு ஆண்டில், இதுவரை எனக்கு ஒரு முத்தமோ, இல்லை ஆபாச பேச்சுக்களோ பேசியது இல்லை. 'திருமணத்திற்கு முன், உன்னை தொட மாட்டேன். திருமணம் ஆனதும், உரிமையுடன் உன்னை என் அன்பு மனைவியாய் ஆராதிப்பேன்...' என்பார். நான் முதல் முறை என் தோழியின் அண்ணனிடம் என்னை இழந்தது பற்றி கூறிய போது, 'பரவாயில்லை, அதை மறந்துவிடு...' என்றார். இன்று வரை, அந்த விஷயத்தை பற்றி என்னிடம் பேசியது இல்லை.இந்நிலையில், என் முதல் காதலன் என்னிடம் வந்து, 'இப்போதும் உன்னைத் தான் நேசிக்கிறேன். எனக்கு நீ வேண்டும், நாம் திருமணம் செய்து கொள்வோம். பழையபடி பேசு, பழகு...' என்கிறான். இவனுடைய பேச்சுக்கள் எப்போதும் ஆபாசமாகவே இருக்கும். இதுபற்றி கேட்டால், 'ஆம்பிளைக்கு ஆசை அதிகம்; நான் நேசித்த முதல் பெண் நீ, உன்னை ஏமாற்ற மாட்டேன்; திருமணம் செய்வேன். அதனால் தான், எல்லை மீறி நடக்கிறேன்...' என்கிறான்.அம்மா... இப்போது நான் என்ன செய்வது? என் முதல் காதலன் நான் இல்லையெனில் செத்து விடுவேன் என்கிறான். தற்போதைய காதலனோ நான் வரும் வரை காத்திரு என்று கூறி சென்றுள்ளான். நான் யாரை நம்புவது, யாருடன் என் வாழ்க்கை நன்றாக அமையும்? என் மனக் குழப்பத்திற்கு தீர்வு காண முடியவில்லை; தயவு செய்து பதில் கூறுங்கள்.இப்படிக்குஉங்கள் மகள்,குறிப்பு: நான் மிக நன்றாக படிப்பேன். எந்த காரணத்திற்காகவும் என் படிப்பை கோட்டை விடவில்லை. பள்ளி, கல்லூரி இரண்டிலும் முதல் மூன்று இடங்களில், ஒன்றை இன்று வரை பெற்று வருகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துள்ளேன்.அன்பு மகளுக்கு,பல ஆண்களுடன், உனக்கு தொடர்பு ஏற்பட்டதற்கு, உன் தந்தையின் துர்நடத்தைதான் காரணம் என, நீ கூறுவது ஒரு வடிகட்டின பொய். உன் தந்தை அன்பான, பெருந்தன்மை யானவராக இருந்திருந்தால் கூட, இதே தவறைதான் நீ செய்திருப்பாய். நீ இளமையின் மயக்கத்தில் தத்தளிக்கிறாய்.உன்னுடைய காதல்கள் எதுவுமே உண்மையான வையோ, ஆத்மார்த்த மானவையோ அல்ல. எல்லாமே உன் உடல் மற்றும் ஆடம்பர தேவைக்காக உண்டானவை.காதலிக்கும் ஆண், காதலிப்பவளை ஓட்டலுக்கும், சினிமாவுக்கும் கூட்டிப் போக வேண்டும்; மொபைல் போனை வாங்கித் தந்து அதற்கு, 'டாப் அப்' செய்து தர வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவள் நீ. உன் ராங்கால் நண்பர், ஒரு கஞ்சனாகவோ அல்லது காதலிக்கும் பெண்ணுக்கு செலவு செய்துதான், காதலை நிரூபிக்க வேண்டும் என்கிற எண்ணமோ இல்லாதவனாக இருக்கக்கூடும்.உன்னுடைய மற்ற ஆண் நண்பர்களை விட, இந்த போன் நண்பர் நேர்மையானவர்; அதிகம் படித்தவர்; திருமணத்திற்கு முன், உன்னுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பாதவர். காதலியிடம் ஆபாசமாக பேசும் கெட்ட பழக்கமும் இல்லை.நீ இல்லை என்றால், செத்து விடுவேன் என, உன் பழைய காதலன் உன்னை எமோஷனல், 'பிளாக்மெயில்' செய்கிறான். அவன் கண்டிப்பாக சாக மாட்டான். அப்படியே செத்தால் சாகட்டும் விடு; தொல்லை ஒழிந்தது என தலைமுழுகிவிடு.அமெரிக்கா சென்றிருக்கும் நண்பர், ஊர் திரும்பும் வரை காத்திரு. இப்போது, உனக்கு வயது, 21தான் ஆகிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டு கூட, அவருக்காக நீ காத்திருக்கலாம். காத்திருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில், புது காதல் திருவிளையாடல்களில் ஈடுபட்டுவிடாதே. பழைய காதலன் எவனுடனும் பேசுவதோ, தொலை தொடர்போ வைத்துக்கொள்ளாதே. மூன்று ஆண்டு இடைவெளியில், இளம் முனைவர் பட்டம் பெற்று வேலைக்கு போ.காதல் பற்றியும், திருமணம் பற்றியும், உனக்கிருக்கும் குறுகிய எண்ணங்களை தூக்கி சாக்கடையில் வீசு. எத்தனை கெட்ட குணங்கள் கொண்டிருந்தாலும், அப்பா அப்பாதான். அவரை தூரத்தில் நின்று, குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அன்பான வார்த்தைகளால் நல்வழிப்படுத்து. அப்பாவின் கைகளையோ, காதலர்கள் கைகளையோ நம்பியிராமல் சொந்த சம்பாத்தியத்தில், புத்தாடை வாங்கி உடுத்து. அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்து, உடுத்த சொல். அப்பாவுக்கு வாங்கிக்கொடுத்து, இனிமையாக பழிவாங்கு.இரண்டு, மூன்று ஆண்டு காத்திருப்புக்கு பின்னும், போன் நண்பர் உன்னை மணம் முடிக்க வரவில்லை என்றால், தோல்வியில் துவண்டு போகாதே.உன்னுடைய மனக்குழப்பத்துக்கும், தற்கொலை எண்ணத்திற்கும் அடிப்படை காரணம் மனப்பக்குவமின்மையே! போன் நண்பர் மணமுடிக்க வரவில்லை என்றால், புதிய காதலில் ஈடுபடாமல், பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை மணம் முடித்து, வாழ்க்கையில் செட்டில் ஆக பார்.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்