அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 48; என் கணவரின் வயது, 52. நான் அரசு பள்ளியில், முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிகிறேன். கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், பிளஸ்2 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது எங்கள் திருமணம். எனக்கு திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. நான் கை நிறைய சம்பளம் வாங்கினாலும், மனதில் நிம்மதி இல்லை. காரணம், என் கணவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய என் கணவர், எங்குமே தொடர்ந்து பணி புரிய மாட்டார். இதுவரை ஏழு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது, ஐந்து ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்வதில்லை.பிள்ளைகளின் படிப்புச் செலவுகள், மளிகை மற்றும் இதர செலவுகள் அனைத்தும், என் சம்பளத்தில் தான், நடக்கிறது.நான் வசதியான வீட்டுப் பெண்; என் பெற்றோர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்; என் உடன் பிறந்தவர்கள் நல்ல வசதியுடன், அரசு வேலையில் உள்ளனர். என் பெற்றோர் திருமணத்தின் போது, 50 சவரன் நகை போட்டனர்.என் கணவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் போது, அவரின் அப்பா இறந்ததால், படிப்பு முடித்தவுடனே, ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். தற்போது, என் மாமியார், தன் மூத்த மகள் வீட்டில் உள்ளார்.என் பிரச்னை என்னவென்றால், என் கணவர், என்னிடம் கேட்காமலேயே, வீட்டில் உள்ள நகைகளை எடுத்து, அடகு வைத்து விடுவார். பீரோவில் எங்கு மறைத்து வைத்திருந்தாலும், திருடி விடுகிறார். உறவினர் வீட்டு விசேஷங்கள் மற்றும் பள்ளியில் நடக்கும் விழாக்கள் என, ஏதேனும் விசேஷத்திற்கு செல்லும்போது அணிவதற்காக நகைப் பெட்டியைப் பார்த்தால், அதில் சில நகைகள், காணாமல் போயிருக்கும். என் கணவரிடம் கேட்டால், 'ஆமாம்... நான் தான் எடுத்து அடகு வைத்துள்ளேன்...' என்று கூறுவார். இதனாலேயே எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. பல முறை என்னை அடித்தும் உள்ளார். 'இனிமேல் என்னை கேட்காமல், எந்த நகையும் எடுக்கக் கூடாது...' என, பலமுறை கூறி விட்டேன்; ஆனாலும் கேட்பதாக இல்லை.சமீபத்தில், என் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த, 10 சவரன் ஆரத்தை திருடி, அடகு வைத்துள்ளார். இவரின் ஊதாரித்தனமான செயலால், மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இதைப் பற்றி, என் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள், என் வாழ்க்கை, இப்படி ஆனதற்கு தாங்கள் தான் காரணம் என நினைத்து அழுகின்றனர். இதனால், இப்போதெல்லாம் அவர்களிடம் எதுவும் கூறுவதில்லை.கடந்த, ஐந்து ஆண்டுகளாக, எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. என் மகன் மற்றும் மகள் படிப்பு வீணாகிவிடுமோ என நினைத்து தான், சகித்துக் கொள்கிறேன்.என் கணவர், நல்லவர், அன்பானவர் தான்; ஏழை எளியவர்க்கு உதவும் குணமுடையவர். ஆனால், வீட்டில் உள்ள நகைகளை திருடி, அடகு வைக்கும் குணம் மட்டும் அவரிடம் இருந்து போகமாட்டேங்குது. இதுவரை, 40 சவரன் நகைகளை அடகு வைத்துள்ளார். அடமான நகைக்கு வட்டியும் கட்டுவது இல்லை; சில நகைகள் மூழ்கிப் போய்விட்டன.மேலும், பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால், பல லட்சம் ரூபாய் கடனும் உள்ளது.என் சம்பளத்தில் அனைத்து செலவுகளையும் பார்த்து, நகைகளை மீட்பது முடியாதது. மகள் மேற்படிப்பு மற்றும் திருமணச் செலவுகள் பற்றியெல்லாம், அவருக்கு சிறிதும் கவலை இல்லை. என் கணவரின் செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை. என்னை மதிப்பதோ, என் பேச்சை கேட்பதோ இல்லை. அவர் விருப்பத்திற்கு நடக்கிறார்.நான் பணி ஓய்வு பெறுவதற்குள், என் மகளுக்கு படிப்பு, வேலை, மற்றும் திருமணம் செய்ய வேண்டும். என் கணவரின் திருட்டு செயலால், மன நிம்மதியை இழந்துள்ளேன். அம்மா... என் கணவர் திருந்த, நல்வழிபடுத்த, ஆலோசனை கூறுங்கள்; உங்களின் பதிலில் தான், என் வாழ்க்கை உள்ளது.— இப்படிக்கு,பெயர் சொல்ல விரும்பாத வாசகி.அன்பு சகோதரிக்கு —தாலி கட்டிய பின், மனைவியின் உடல், மனம், சம்பாத்தியம், நகை மற்றும் மனைவியின் பெற்றோர் வழி சொத்து எல்லாம் தனக்கே சொந்தம் என்கிற பாவனை, பல கணவன்மார்களுக்கு உண்டு. இந்த எண்ணத்தாலேயே உன் நகைகளை, தன் சொந்த நகையை போன்று உரிமையாய் அடகு வைப்பதாக நினைக்கிறார், உன் கணவர்.பொதுவாகவே, திருமணமான ஆண்களுக்கு பணத்தேவை என்றால், முதலில், அவர்களின் கண்களில் படுவது, மனைவியின் நகைகள் தான். நகைகள் அடகில் மூழ்கிப் போனாலோ, அவற்றை விற்று விட்டாலோ, அடுத்து, அவர்கள் சொல்வது, 'உன் பெற்றோரிடம் போய் பணம் வாங்கி வா...' என்பது தான். மறுத்தால் சில கணவன்மார்கள் திட்டுவதுடன், அடி, உதையும் கொடுக்கின்றனர்.எனக்கு தெரிந்த சில கணவர்மார், மனைவியின் நகைகளை அடகு வைத்தோ, விற்றோ தொழில் துவங்கி, தொழிலில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அடகு வைத்த நகைகளுக்கு இரட்டிப்பாய் புது நகைகள் வாங்கி, மனைவியின் கழுத்தில், காதில், கையில் பூட்டி, அழகு பார்க்கும் கணவர்மார்களும் இருக்கின்றனர். மனைவியின் நகைகள், குடும்பத்தின் எதிர்காலத்திற்கான சேமிப்பு; எனக்கு தெரிந்த பல பெண்கள், தங்களது திருமணத்திற்கு போட்ட நகைகளை பாதுகாத்து, புதுப்பித்து, மகள் திருமணத்திற்கு போடுகின்றனர்.நாடோடி மனோபாவம் உள்ளவர் உன் கணவர்; இத்தகைய மனோபாவம் உள்ளவர்கள், எந்த வேலையிலும், நீண்ட நாட்கள் நிலைக்க மாட்டார்கள். அவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய, எந்த திட்டமிடலும் இருக்காது. தான், தன் சுகமே பிரதானம். 90 சதவீத ஆண்கள், மனைவியின் சம்பாத்தியத்தில், உட்கார்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள்; ஆனால், சிலர், அதை வக்கணையாக செய்வர். உத்தியோகம் புருஷ லட்சணம் என்பர்; இது, உன் கணவருக்கு பிடிக்காத பழமொழியாக இருக்கிறது. உன் கணவர், நகைகளை அடகு வைத்து வரும் பணத்தில் குடிக்கிறாரா, சூதாடுகிறாரா என்பதை நீ தெரிவிக்கவில்லை. இருப்பினும், அடகிலுள்ள, 40 சவரன் நகைகளில் பாதி நகைகளையாவது, சாமர்த்தியமாக மீட்டெடு. மீட்ட நகைகளை வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் பத்திரமாக வை!'வேலைக்கு செல்லாமல், வீட்டில் ஒரு நிமிடம் கூட தங்கக் கூடாது; ஏதாவது ஒரு வேலைக்கு போ...' என, கணவரை கடிந்து விரட்டு. மாலை நேரத்தில், 'டியூஷன்' நடத்தி, உபரி வருமானம் பார். மகளின் படிப்பு, வேலை மற்றும் திருமணம் பற்றி ஐந்தாண்டு திட்டம் போடு. மன அழுத்தம் போக்க, இனிமையான பாடல்களை கேள். நகைச்சுவை சேனலில், நகைச்சுவை காட்சிகள் பார். மகன் மற்றும் மகளுடன், மனம் விட்டு பேசு.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.