உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்

அன்புள்ள சகோதரிக்கு —நான், 37 வயது பெண்; என் கணவரின் வயது, 60. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகனும், மகளும் உள்ளனர். கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்த போது, வகுப்புக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால், கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டான், என் மகன். மகள், பிளஸ் 2 படிக்கிறாள்.என் கணவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்; முதல் மனைவியை விவாகரத்து செய்து, அதை மறைத்து, ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்டார். வாகன ஓட்டியான அவர், மிகப் பெரிய குடிகாரர். திருமணமான நாள் முதல், அடியும், உதையும் வாங்குகிறேன். வீட்டுச் செலவுக்கு பணம் தராமல், சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்து விட்டு வெறும் ஆளாகத்தான் வீட்டுக்கு வருவார். அதையெல்லாம் சகித்துக் கொண்டு, வீட்டு வேலை செய்து, நான் தான் என் இரு பிள்ளைகளையும் காப்பாற்றி, படிக்க வைக்கிறேன்.ஆனால், தற்போது, என் கணவர், என் பிள்ளைகளின் மனதைக் கெடுத்து, என் பேச்சை கேட்காதவாறு மாற்றி விட்டார். காலையில் வெளியே சென்றால், இரவு, 10:00 மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறான் என் மகன். 'எங்கே சென்றாய்?' எனக் கேட்டால், சண்டை போடுகிறான். என் மகளோ ரொம்ப சோம்பேறி; வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. எப்போது பார்த்தாலும் மொபைலில் விளையாடியபடியும், பாட்டு கேட்டுக் கொண்டும் இருக்கிறாள் இல்லையென்றால், 'டிவி'யே கதியென கிடக்கிறாள். ஏதாவது வேலை சொன்னால், 'என் பிரண்ட் வீட்டுக்கு போகப் போறேன்...' என்று கூறி, சென்று விடுகிறாள்.வீட்டு வேலைக்கும் சென்று, என் வீட்டிலும் நானே எல்லா வேலைகளையும் செய்கிறேன். சில சமயம் என்னால் வேலை செய்ய முடிவதில்லை. நான் வேலைக்கு செல்லாவிட்டால், என் குடும்பத்தை காப்பாற்ற முடியாது. அதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை; மூவரும் சேர்ந்து என்னை, கொடுமைபடுத்துகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன், இவர்களின் தொல்லை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறி, வேலை செய்யும் இடத்திலேயே, பத்து நாட்கள் தங்கி விட்டேன். அப்புறம், மனம் கேளாமல் வீட்டிற்கு வந்தேன். ஆனால், இப்போதும் வீட்டில் அதே சூழல் தான் உள்ளது.இச்சூழலில், நான் வாழ்வதா, இறப்பதா என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல தெளிவான முடிவை கூறுங்கள் சகோதரி!— இப்படிக்கு,உங்கள் அன்புள்ள சகோதரி.அன்புள்ள சகோதரிக்கு —உன் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு நீ ஒரு இளிச்சவாயாக தெரிகிறாய். எப்படியும் தங்கள் வயிற்றை வாட விடாமல், பத்து பாத்திரங்களை தேய்த்தாவது, நம்மை காப்பாற்றி விடுவாள் என்கிற அசட்டு தைரியம் அவர்களுக்கு!பொதுவாக, குழந்தைகளுக்கு கண்டிப்பான அம்மாவை விட, பொறுப்பற்ற அப்பாவை தான் பிடிக்கும். உன் மகனுக்கு உன்னுடைய கஷ்டத்தை உருக்கமாக கூறி, அவனை வேறொரு கல்லுாரியில் சேர்த்து விடு. அதேபோன்று, மகளிடம், 'தினம் ஒரு மணி நேரத்துக்கு மேல், 'டிவி' பார்க்கக் கூடாது...' என, தடை உத்தரவு போடு. கணவன், மகன் மற்றும் மகளை ஒரு சேர உட்கார வைத்து, 'இனி, நான் வீட்டு வேலைக்கு போக மாட்டேன்; குடும்பச் செலவுக்கு, இனிமேல் நீங்கள் தான் பணம் தர வேண்டும். உங்கள் ஒழுங்கீனங்களை திருத்திக் கொள்ளாவிட்டால், நிரந்தரமாக வீட்டை விட்டு வெளியேறி விடுவேன்...' என மிரட்டு.கணவனும், குழந்தைகளும் திருந்த, கால அவகாசம் கொடு; அதற்குள் அவர்கள் திருந்தாவிட்டால், வீட்டை விட்டு வெளியேறு. சுயமாய் சம்பாதித்து, சொந்தக்காலில் நில். உன் பெற்றோர் உயிருடன் இருந்தால், அவர்களுடன் போய் தங்கு. 20ஆண்டுகள், பிறருக்காக உழைத்தாய். இனியாவது உன் தேவை மற்றும் சந்தோஷங்களுக்கு சம்பாதி.உன் மகன் மற்றும் மகளிடம், 'உங்கள் அப்பாவை உதறி, என்னுடன் வர தயாரா... சம்மதம் என்றால், மகனே, நீ ஊர் சுற்றாமல் நன்கு படிக்க வேண்டும்; மகளே... உன் சோம்பேறி தனத்தை உதறி, வீட்டு வேலைகள் செய்வதுடன், நன்கு படிக்கவும் வேண்டும். சேற்றில் புரளும் பன்றியாக இருக்கப் போகிறீர்களா, தமிழகத்தின் விடிவெள்ளியாக திகழப் போகிறீர்களா...' எனக் கேள்!வந்தால் அவர்களுக்கு நல்லது; வராவிட்டால் உனக்கு பாரம் குறையும்.அர்த்தமற்ற தியாகங்களை செய்து, பிறர் உப்பு மூட்டை ஏற முதுகை காட்டக் கூடாது, பெண்கள். உறவுகளிடம் இளப்பமாகாமல், சுயகவுரவத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !