உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

நான், 28 வயது பெண்; திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நானும், என் கணவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறோம். என் கணவரோடு உடன் பிறந்தோர், இரு அண்ணன்கள். எல்லாரும் கூட்டு குடும்பமாக இருக்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக, சிறிது தொலைவில், நாங்கள் தனியாக ப்ளாட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம்.வேலைக்கு செல்லும் போது, குழந்தையை மாமியார் வீட்டில் விட்டு, மாலையில் அழைத்து வருவோம்.என் சிறுவயதிலேயே இறந்து விட்டார், என் அம்மா. இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், என் தந்தை. என் சித்திக்கு ஒரு ஆண், ஒரு பெண் என, இரு குழந்தைகள் உள்ளனர். என்னையும் நன்றாகத்தான் கவனித்து கொண்டார். சித்தியின் ஆலோசனை படி, நான் விரும்பிய படிப்பு படிக்க வைத்து, நல்ல வேலையில் சேர்த்து விட்டார், என் தந்தை.நான் சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து சித்தியிடம் தான் சம்பளத்தை தருவேன். அதில், ஒரு தொகையை, என் பேரில் வங்கியில் சேமித்து வைப்பார்; இது, என் தந்தைக்கும் தெரியும். என் சித்தியிடம் உள்ள ஒரே குறை, நான் அவருக்கு அடங்கி இருப்பதுடன், அணியும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை, அவரது அனுமதி பெற வேண்டும் என்று நினைப்பார். எனக்கு என்ன தேவையென்றாலும் அவரிடம் தான் கேட்க வேண்டும்; தந்தையிடம் கேட்க கூடாது. அதேபோன்று, தனிப்பட்ட முறையில், நான் எந்த முடிவும் எடுக்க கூடாது. எனக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தது கூட சித்தி தான். என் மீது கொண்ட பாசத்தினால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என நினைத்து, இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால், திருமணத்திற்கு பின், அவரது ஆதிக்கம் குறையவில்லை. அவ்வப்போது என் வீட்டுக்கு வந்து, 'அது இப்படி இருக்க வேண்டும், இதை இப்படி செய்ய வேண்டும்...' என்று எனக்கும், என் கணவருக்கும் ஆலோசனை சொல்வதும், கணவர் எதிரிலேயே, அவர் வீட்டினர், என் குழந்தையை சரியாக கவனிப்பதில்லை என்றும் குறை கூறுகிறார். அத்துடன், என் மாமியாருக்கு போன் செய்து, குழந்தையை எப்படி கவனிக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார். இது, என் கணவருக்கு பிடிப்பதில்லை; சித்தி சென்றபின், என்னிடம் சண்டை போடுகிறார். என் நிலை, இருதலை கொள்ளி எறும்பு மாதிரி தான்.எங்கள் வீட்டிற்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங்மிஷன், எல்.இ.டி., 'டிவி' என்று எது வாங்கினாலும், 'இது எதற்கு வீண் செலவு, இப்படி ஆடம்பரம் தேவையா...' என்பார்; பொறாமையில் சொல்கிறாரா அல்லது நிஜமான அக்கறையில் சொல்கிறாரா என்று தெரியவில்லை. இத்தனைக்கும், எங்களை விட, எல்லா வசதிகளையும் சித்திக்கு செய்து தந்துள்ளார், என் தந்தை. என் தம்பி இன்ஜினியரிங் முடிக்க போகிறான். தங்கை, பி.காம்., முதலாமாண்டு படிக்கிறாள். அவர்களிடம் என் சித்தி எதுவும் சொல்ல மாட்டார். அப்படியே ஏதாவது சொன்னாலும், அவர்கள், அதை, காதில் வாங்க மாட்டார்கள்.நான் சித்தி வீட்டுக்கு சென்றால், எதையும் முழுதாக தெரிந்து கொள்ளாமல், குறை கூறியும், 'அட்வைஸ்' செய்வதுமாக இருப்பதால், இப்போது, அங்கு செல்வதை குறைத்துக் கொண்டேன்; அதற்கும் திட்டுகிறார். இதனாலேயே, என் பிறந்த வீட்டுக்கு வருவதை தவிர்க்கிறார், என் கணவர். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சித்தியை வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை; அவரை எப்படி சமாளிப்பது என்று கூறுங்கள். ப்ளீஸ்!- இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு - இரண்டாம் தாரமாய் வரும் பெண்கள், 90 சதவீதம், ஏழ்மையானவர்கள். எரியும் வீட்டில் பிடுங்குவதெல்லாம் ஆதாயம் என்பது போல், கணவன் வீட்டு நகை, பணம் மற்றும் சொத்துகளை கைப்பற்ற முயற்சிப்பர். மூத்த தார குழந்தைகளை தந்தையிடமிருந்து பிரித்து, அவர்களை வீதிக்கு விரட்ட சதி திட்டம் தீட்டுவர், சிலர். ஆனால், உன் சித்தியோ, நன்மை பயக்கும் சர்வாதிகாரி.நீ விரும்பிய படிப்பை படிக்க வைத்து, நல்ல வேலையிலும் சேர்த்து, நல்ல இடத்தில் கல்யாணமும் செய்து கொடுத்துள்ளாள்.உனக்கு நூறு சதவீதம் நன்மையையே விரும்புகிறாள். ஆனால், அதை, வன்முறையாக, ஆரவாரமாக, அறிவிக்கிறாள். சித்தியின் ருத்ர தாண்டவம், பாசத்தால் ஆனது.மற்றவர்களின் முன், உன்னை அதிகாரம் செய்வதன் மூலம், உன் மீதான உரிமையை நிலை நாட்டுகிறாள். அவள், தன் பிள்ளைகளிடம் அதிகாரம் செய்யாமல் இருப்பது, தாய் ஸ்தானம் பத்திரமாய் இருப்பதால் தான்.சித்தி எதையும் உள்நோக்கத்தோடு செய்யவில்லை; அனிச்சையாக செயல்படுகிறாள். அதற்காக, அவளை வெறுத்து, ஒதுக்க வேண்டாம்.ஒரு நாள் , சித்திக்கு விருப்பமான உணவை சமைத்து, பரிமாறி, தனிமையில், 'உன் மடியில் படுத்துக் கொள்ளவா அம்மா...' எனக் கேள்; உருகிப் போவாள். சித்திக்கு தலைவாரி பூச்சூடி, 'உன் அன்பை புரிந்து கொண்டேன் அம்மா... நீ, சித்தியாக வந்த இரண்டாம் அம்மா. எனக்கு நல்லதையே நினைத்தாய், செய்தாய். நீ, தாம் தூம் என்று நடந்து, உன் இருப்பை எனக்கு உணர்த்த வேண்டாம்; எனக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை, என் காதுகளில் கூறு. என் மீதான உரிமையை என் கணவரிடம், அவர் வீட்டாரிடம் கோராதே...' என்று கூறு.சித்தியின் உண்மையான தாயுள்ளத்தை கணவனுக்கும், கணவன் வீட்டாருக்கும் விளக்கு. அவளின் பிள்ளைகளை உடன் பிறப்புகளாக பாவி. பண்டிகை நாட்களில் சித்திக்கும், அவளது குழந்தைகளுக்கும் புத்தாடை வாங்கி பரிசளி. சித்தியை மாஸ்டர் செக்கப்புக்கு அனுப்பி, உடல்நலனை பராமரிக்க செய். அவர்களது திருமண நாளுக்கு, பரிசளி. 'இவர்கள் நல்ல நிலைக்கு வந்து விட்ட பின், நம்மை கண்டு கொள்ள மாட்டாரோ...' என்கிற சித்தியின் அவநம்பிக்கையை போக்கு!எல்லா சித்திகளும் கொடுமைக்காரர்கள் அல்லர்; பெற்ற தாயை விட, மேலான சித்திகளும் உள்ளனர் என்ற உண்மை, உன் மூலம் உலகுக்கு வெளிப்படட்டும்.தாயும், மகளும் பாச உலகில் நீந்தி களியுங்கள் மக்களே!- என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !