உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 28; தனியார் நிறுவன ஊழியராக இருந்தார் என் கணவர். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டு, என் கணவரும், குழந்தையும் இறந்து விட்டனர். நான் மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்.என் மாமனார் - மாமியாருக்கு, ஒரே மகன், என் கணவர். மிகவும் நல்லவர்கள்; வயதான அவர்களது பாதுகாப்பில் தான் இப்போது இருக்கிறேன். மாமனாருக்கு, 'பென்ஷன்' வருகிறது; சொந்த வீடு உள்ளதால், சமாளிக்க முடிகிறது.எனக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயன்றனர், என் பெற்றோர். எனக்கு விருப்பமில்லை என்றதால், தற்சமயம் வற்புறுத்துவதில்லை.என்னுடன் கூடப்பிறந்தவர் ஒரு அக்கா, ஒரு தம்பி. இருவருக்கும் திருமணமாகி விட்டது. தம்பியுடன் தான் என் பெற்றோர் வசிக்கின்றனர்.வெறும் டிகிரி மட்டுமே படித்திருந்ததால், எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. மன ஆறுதலுக்காக, தற்போது, வீட்டுக்கு அருகிலுள்ள நர்சரி பள்ளியில் ஆயாவாக வேலைக்கு சேர்ந்துள்ளேன். கம்ப்யூட்டர் வகுப்புக்கும் சென்றேன்; அங்குள்ள ஆண்களின் கழுகு பார்வையும், அணுகுமுறையும், அவர்களின் காம எண்ணத்தை வெளிப்படுத்தவே, நின்று விட்டேன்.வயதான மாமனார் - மாமியார் மற்றும் என்னுடைய எதிர்காலம் என்னை மிரட்டுகிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா...— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு —சாலை விபத்தில் காதல் கணவனையும், அன்பு மகளையும் இழந்து, தன்னந்தனியாக நிற்பது, வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால், எல்லா மரணத்துக்கும் நாம் அறியா ஒரு நியாயத்தை வைத்திருக்கிறான், இறைவன். அன்றே பிறந்து அன்றே மடியும் ஈசலை படைத்த இறைவன் தான், 200 ஆண்டுகள் வாழும் ஆமையையும் படைத்திருக்கிறான். பிறந்த நொடியிலிருந்து, மரணம் எப்போது வேண்டுமானாலும் நம் உயிரை பறிக்கும் என்கிற நிச்சயமற்ற தன்மை தான், வாழ்க்கையின் சுவாரசியத்தை கூட்டுகிறது. இதுவே, படைப்பின் தத்துவம். கணவனையும், மகளையும் இழந்தபின், எப்படி சொந்த காலில் நின்று, மீதி வாழ்நாளில் வெற்றி பெறப் போகிறாய் என, இறைவன் உனக்கு வைத்த தேர்வாக நினைத்து, மனதை திடப்படுத்திக் கொள். மாமனார், மாமியார் அனுமதியுடன், முதுகலைப் பட்டப் படிப்பை படி. வார விடுமுறை நாட்களில் பெற்றோர் மற்றும் தம்பி குடும்பத்தை சென்று பார். உன் மனக் காயம் இயற்கையாக குணமாகட்டும். மறதி தான் எல்லா துக்கங்களுக்குமான அருமருந்து. காயங்கள் குணமாகும் இடைவெளியில், உனக்கு நல்ல பணி கிடைக்கும் வகையில், கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்.தவறான ஆண்களின் பசப்பு வார்த்தைகளையும், நல்லவன் போல் நடிக்கும் நாடக நடிகர்களையும் இனம் காண கற்றுக் கொள். பெரிய மீன் கிடைக்கும் வரை, ஒற்றை காலில் நிற்கும் கொக்கு போல, தகுதியான ஆணை தேர்ந்தெடுத்து மணந்து கொள். மீதி வாழ்நாளை, ஆண் துணை இல்லாமல் கழித்து விடலாம் என, தப்புக்கணக்கு போடாதே. மாமனார், மாமியார், தாய், தந்தை காலத்துக்கு பின், நீ வாழ்ந்தாக வேண்டும். ஒரு ஆண் அல்லது பெண் வாழ்க்கையின் அர்த்தமே, தாம்பத்யம் செய்து, ஒரு வாரிசை இவ்வுலகிற்கு விட்டு செல்வது தான்.இறந்து போன உன் கணவனையும், குழந்தையையும் கனவு போல மறக்க பார். மறுமணத்திற்கு பின்னும் உன் மாமனார், மாமியாருடன் நல்லுறவு பேணு.கணவனை இழந்த பெண்களின் மறுமணம் என்பது, ஒரு காலத்தில் தீண்டத்தகாத வார்த்தையாக பாவிக்கப்பட்டது. பின், அத்தகையோரை திருமணம் செய்து, வாழ்க்கை பிச்சை போடுகின்றனர் என்ற ஆண்களின் பாவனையும் அழிந்து விட்டது. அதனால், தகுதியான ஆணை மணந்து, இரண்டு குழந்தை செல்வங்களை பெற்று, பெருவாழ்வு வாழ, உன்னை நெஞ்சார வாழ்த்துகிறேன்.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !