உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 27. படிப்பு: பி.டெக்., பணியில் உள்ளேன். கல்லுாரியில் படிக்கும்போது, ஆண்டு விழா மற்றும் மற்ற கல்லுாரிகளில் நடக்கும் பல்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, அறிமுகமான நண்பர்களுடன் விகல்பம் இல்லாமல் சகஜமாக பேசி வந்துள்ளேன். அவர்களில் சிலர், முகநுால் நண்பர்களாகவே இன்றும் இருக்கின்றனர்.இப்படி அறிமுகமான நண்பன் ஒருவன், நான் பணிபுரியும் நிறுவனத்திலேயே பணியில் உள்ளான். அவன், என்னை காதலிப்பதாக சொன்னான். எனக்கு அதில் விருப்பம் இல்லாததால், அவன் காதலை ஏற்காமல், 'நல்ல நண்பர்களாக இருப்போம்...' என்றேன்.சரியென்று ஒப்புக்கொண்டவன், உள்ளுக்குள்ளேயே வஞ்சகமாக இருந்து உள்ளான். எனக்கு திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்தவன், என் முகநுால் பக்கத்தில் பதிவேற்றியிருந்த படங்களை, 'மார்பிங்' செய்து, நான், அவனுடன் சேர்ந்து இருப்பது போல் மாற்றி, முகநுால் நண்பர்கள் மற்றும் எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கும் அனுப்பியுள்ளான்.அதைப் பார்த்த மாப்பிள்ளை, என் பெற்றோருக்கு தெரியப்படுத்த, அது, 'மார்பிங்' செய்யப்பட்டது என்று எவ்வளவோ எடுத்து கூறினோம்.அதற்கு, மாப்பிள்ளையும், அவர் குடும்பத்தினரும், 'இது பொய்யானதாகவே இருந்தாலும், எங்கள் உறவினர்கள் ஒவ்வொருத்தரிடமும் விளக்கம் கொடுக்க முடியுமா...' எனக் கேட்டு, திருமணத்தை நிறுத்தி விட்டனர்.அந்த கயவனோ, 'உன் மேல் இருக்கும் காதலால் தான் இப்படி செய்து விட்டேன், என்னையே திருமணம் செய்து கொள்...' என்கிறான்.அவன் மீது நடவடிக்கை எடுத்தால், மேலும் சிக்கலாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது.என்ன செய்தால், இச்சிக்கலிலிருந்து விடுபட முடியும் என்று சொல்லுங்கள், அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —ஓர் ஆண், மனதுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை தெரிவிக்கிறான். அந்த பெண்ணோ, அந்த ஆணின் காதலை, நாசுக்காக மறுக்கிறாள். அவன் என்ன செய்ய வேண்டும்? 'எங்கிருந்தாலும் வாழ்க...' என, வாழ்த்தி, அந்த பெண்ணின் வாழ்க்கையிலிருந்து அகன்றிட வேண்டும்.காதலை வலுக்கட்டாயப்படுத்தி, பலவந்தப்படுத்தி அல்லது கெஞ்சி, யாசகமாய் பெற்று விட முடியாது. காதலை ஏற்க மறுத்த பெண்ணை, தொழில்நுட்ப ரீதியாய் பழி வாங்க நினைப்பது மிருகத்தனம். காதல் என்பது, இரு மனம் சம்பந்தப்பட்டது. இரு மனங்களிலும் பூ பூக்க வேண்டும்.அடுத்து நீ செய்ய வேண்டியவை...'மார்பிங்' செய்த கயவனை மன்னித்து, மணந்து கொள்வது, அமில கிணற்றில் விழுவதற்கு சமம். உரிய நடவடிக்கை எடுத்து, முதலில் அவன் வேலையை தொலைத்துக் கட்டு.'சைபர் கிரைம்' குற்றத்துக்காக, உன், 'மார்பிங்' நண்பன், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நீ, நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டி வரும். மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகு. ஒருவன் தண்டிக்கப்பட்டால் தான், 100 பேருக்கு தார்மீக பயம் வரும்.பெண்களுக்கு எதிரான, 'சைபர் கிரைம்' குற்றத்தில் ஈடுபட்டால், காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அணுகி, தண்டனை பெற்றுத் தருவர் என்ற பாடத்தை, சில கிரிமினல் இளைஞர்களுக்கு புரியவை. தைரிய லட்சுமியாய் கிளர்ந்தெழுந்து, இன்றைய இளைய தலைமுறை பெண்களுக்கு முன்னுதாரணமாகு.'மார்பிங்' செய்த விதத்தை, கிரிமினல் நண்பன், காவல் துறையில் ஒப்புதல் வாக்குமூலமாய் கொடுப்பான் இல்லையா... அது, உன் நேர்மைக்கும், ஒழுக்கத்துக்குமான சான்று.முகநுாலிலிருந்து விலகு. ஆண் நண்பர்களுடன் விகல்பம் இல்லாமல் நட்பு பாராட்டுவதை நிறுத்து. முகநுாலில், தங்களது சொந்த புகைப்படங்களையும், அன்றாட நடவடிக்கைகளையும் பெருமையாய் பதிவிடும் தோழிகளுக்கு, தகுந்த அறிவுரை கூறி, தடுத்து நிறுத்து. தொடர்ந்து வரன்கள் பார். யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.'பிளாக்மெயில்' செய்வோருக்கு, என்றைக்குமே எதிலுமே அடிபணியக் கூடாது. அடிபணியாமல் நிற்பதிலேயே, எதிராளி நிலைகுலைந்து போவான். மனதை ஒருநிலைபடுத்தி, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், சதி திட்டங்களை முறியடித்து விடலாம். அவதுாறுகளை உடனுக்குடன் களைவது நல்லது.பயமே இல்லாமல் இருப்பது வீரமல்ல, பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதும் வீரம்தான்.சிறு நரிகள் கூட்டத்தை, பெண் சிங்கமாய் சிதறடி. சிறு நெருஞ்சி முள்ளா, உன் வாழ்க்கை பயணத்தை தடுத்து நிறுத்தி விடும். தைத்த முள்ளை அகற்றி, தொடர்ந்து இலக்கு நோக்கி வீரநடை போடு, மகளே!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !