அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா —நான் தஞ்சாவூரிலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கிறேன். என் அப்பா, விவசாயி. அவருக்கு நாங்கள் மொத்தம், ஆறு மகள்கள்.மூத்த அக்காவின் கணவர், இறந்து விட்டார். இரண்டாவது அக்காவின் கணவர், சிங்கப்பூரில் பணிபுரிகிறார். கடந்த, 12 ஆண்டுகளில் ஒருமுறை கூட, இந்தியாவுக்கு அவர் வரவில்லை. சிங்கப்பூரில் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக கேள்வி.மூன்றாவது அக்கா திருமணமாகி, இரண்டு ஆண்டுகளிலேயே கணவனிடம் விவாகரத்து பெற்று, வீட்டிற்கு வந்து விட்டாள். நான்காவது அக்கா, அடி, உதை, ஏச்சு, பேச்சுகளுடன், குடிகார கணவனுடன் நரக வாழ்க்கை வாழ்கிறாள். ஐந்தாவது அக்கா மட்டும், கணவனுடன் நல்லபடியாக வாழ்கிறாள்.நான், கடைக்குட்டி; முதுகலை மருந்தியல் படித்துள்ளேன். எனக்கு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இருந்தாலும், அதே அளவுக்கு பயமும் இருக்கிறது.கடந்த வாரம் என்னை பெண் பார்த்து, 'ஓகே' சொல்லி போயிருக்கிறார், சென்னையை சேர்ந்த மாப்பிள்ளை. அவர் குடும்பத்தில் அவரும், தம்பியும் மட்டும் தான். அவரின் அப்பா, சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து, ஓய்வுபெற்றவர். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார், அம்மா.மாப்பிள்ளை, 6 அடி உயரம், ரோஜா நிறம், ஆங்கிலம் பிளந்து கட்டுவார். நான், 5.2 அடி, மாநிறம், ஆங்கிலம் பேச உதறும். கிராமத்து உணவுகளை உண்பவள், நான். அவரோ, 'பிட்ஸா, பர்கர்' போன்ற துரித உணவுகளை விரும்பி சாப்பிடுவார். நான், முன்கோபி; அவர், சாந்த சொரூபி.பெண் பார்க்க வந்த போது, இருவரும் தனியாக பேசினோம். 'ஒப்பனை இல்லாத உன் முக அழகு, என்னை மிகவும் கவர்ந்து விட்டது...' என்றார்.'ஒரு பட்டிகாட்டுக்கும், ஒரு நகரத்துக்கும் இடையே நடக்கும் திருமணம் வெற்றி பெறுமா; வாழாவெட்டி என்ற பட்டம் சுமக்காது, தீர்க்க சுமங்கலி என்ற பட்டம் சுமப்பேனா; எங்களது உணவு, உடை, பேச்சு, இருப்பிடம், இரு துருவங்கள். இது, ஒத்துப் போகுமா அல்லது முட்டிக் கொள்ளுமா?'இப்படி பல கேள்விகள், என் மனதில் ஓடுகின்றன.ஒட்டு மொத்த எங்கள் கிராமமும், 'நம்ம குலதெய்வம் உன்னை பாதுகாக்கும். பயப்படாம கல்யாணம் பண்ணி போ தாயீ. அமோகமா வாழ்வ...' என்கின்றனர்.அடுத்த மாதம் நடக்கும் எங்களது திருமணம் வெற்றிபெற, தேவையான அறிவுரை கூறுங்கள், அம்மா.— இப்படிக்கு,கிராமத்து பெண்.அன்பு மகளுக்கு —உங்கள் திருமணம் வெற்றி பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை கூறியுள்ளேன்...* உணவு, உடை, மொழி, இருப்பிடம், போக்குவரத்து மற்றும் தினசரி வாழ்க்கை முறை போன்றவற்றில், நீ, சில படிகள் ஏற வேண்டும்; உன் கணவர், சில படிகள் இறங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட படியில் இருவரும், சமநிலை காணலாம்* மனைவியின் அந்தரங்கத்தில் கணவனும், கணவனின் அந்தரங்கத்தில் மனைவியும் பிரவேசிக்க கூடாது. உதாரணத்துக்கு, 'திருமணத்திற்கு முன் யாரையாவது காதலித்திருக்கிறாயா...' என, கணவனும்; 'உங்கம்மா ஒரு ராட்சசி; அவளை, உங்கப்பா எப்படி சமாளிக்கிறார்...' என, மனைவியும் கேட்கக் கூடாது* கணவன் - மனைவிக்கு இடையே, சிறப்பான இருவழி தகவல் தொடர்பு இருத்தல் நல்லது* குடும்ப வாழ்க்கையில் உப்பும், சர்க்கரையும் போன்றது, தாம்பத்யம். இரண்டும் அளவாக இல்லையெனில், குடும்ப வாழ்க்கை ருசிக்காது* வேலை, குழந்தை, நண்பர்கள் மற்றும் பொழுதுபோக்கு என, இருவருக்கும் கவனம் சிதறக் கூடாது* சுயநலம் அறவே கூடாது. ஒருவரின் பிரச்னையை மற்றவர், தன் பிரச்னையாக பாவிக்க வேண்டும்* பொய் கூறுவது, ஏமாற்றுவது, கொடுத்த வாக்குறுதியை மீறுவது அறவே கூடாது* மிதமிஞ்சிய கோபத்தை, நகைச்சுவையால் வென்றெடுக்க வேண்டும் * வீட்டுக்கு வெளியே நீ, மருந்தாளுனர், விவசாயியின் மகள்; கணவனோ, சாப்ட்வேர் இன்ஜினியர், பட்டினவாசி. இரண்டையும் கழற்றி வைத்து, கணவன் - மனைவியாக மட்டும் வீட்டுக்குள் பிரவேசியுங்கள்* வெற்றிகரமான திருமணம், ஒரே நாளில் நிகழ்வதில்லை. அது, சிறிது சிறிதாக உருவாக்கப்படுகிறது. உங்கள் இருவரையும் இறைவன் சேர்த்து வைத்தார் என, நம்புங்கள்* அன்றன்றைய சண்டைகளை இரவுக்குள் முடிக்கப் பாருங்கள். சமாதான கொடி யார் காட்டுவது என்பது முக்கியமல்ல,- எதாவது ஒரு திசையில் அது காட்டப்படுவதே உத்தமம்* உங்களின் எந்த பிரச்னைக்கும், விவாகரத்து தீர்வே அல்ல என்பதை, மனதார நம்புங்கள்* ஒருவரை ஒருவர் அவதுாறாக வெளியில் பேசிக் கொள்ளாதீர்கள்* திருமணம் என்பது, நிர்ப்பந்தம் அல்ல; அது ஒரு, புனித பூஞ்செடி* பரஸ்பரம் அன்பை கூடுதலாய் காட்டுவதாகவோ, குறைவாக காட்டுவதாகவோ நடிக்காதீர்கள். இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்* பணத்தால், அழகால், பதவியால் மற்றும் அதிகாரத்தால் இருவருக்குள்ளும் ஒப்பிடுதல் கூடவே கூடாது* குழந்தைகள் பிறந்ததும், அவர்கள் மீது பாசத்தை கொட்டுங்கள் * மாமியாரை அம்மா போல பாவிக்காவிட்டாலும் புருஷனை பெற்றவள் என்ற விதத்திலாவது மதிக்க வேண்டும். மாமனாரை அப்பா போல பாவிக்காவிட்டாலும், மனைவியை பெற்றுக் கொடுத்தவர் என்ற விதத்திலாவது மதிக்க வேண்டும்* கணவனின் நண்பர்களை கையாள்வதிலும், மனைவியின் தோழிகளை கையாள்வதிலும், இருவருக்கும் மதிநுட்பம் தேவை* சமையல் செய்யாத வீடு, பாழடைந்த மண்டபம். சமையல் தெரியாவிட்டால் கற்றுக்கொள். ஏற்கனவே சமையல் கற்றிருந்தால், அதை மிக சிறப்பாக செய்.மொத்தத்தில், உடுத்திய உடையிலும், உண்ட உணவிலும், கட்டின துணையிலும் திருப்தியடைவது மேலானது. சேர்ந்தே இருந்து, மன்மத தேசத்தின் ராஜா - ராணி ஆகுங்கள் மக்களே!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.