உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு —நானும், என் மனைவியும் அரசு பணியில் உள்ளோம். எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் ஆறு வயது வித்தியாசம். மகன் பொறியியல் பட்டம் பெற்று, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. பிளஸ் 2 முடித்துள்ளாள், மகள்.முன்பு, நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்தோம். மகன், 9ம் வகுப்பில் படிக்கும்போது, இட வசதி இல்லாததால், தனிக்குடித்தனம் செல்ல நேர்ந்தது.பள்ளிப் பருவத்தில், நன்றாக படித்தான், மகன். கல்லுாரியில் சேர்ந்த நாளிலிருந்து ஒரு வகையான மன நோயால் பாதிக்கப்பட்டான். ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சை பெற்று ஓரளவு குணம் ஆனான். பின்னர் அந்த சிகிச்சையை தொடர முடியாமல் போய் விட்டது. ஆனாலும், படிப்பில் முதல் வகுப்பில் தேறினான்.இப்போது எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு நான், அவன் அம்மா மற்றும் தங்கை என்று யார் எதிரில் இருந்தாலும், கண்டபடி பேசி விடுகிறான்.அவனுக்கு கிரிக்கெட் மற்றும் சினிமாவில் ஆர்வம் அதிகம். உள்ளூர், வெளியூர், உள்நாடு, வெளிநாட்டு போட்டிகள் எதுவானாலும் பார்த்து, ரசிப்பான். இதைப் போலவே, சினிமாவையும் அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்வான்.மற்ற இளைஞர்களைப் போல பிற விஷயங்களில் ஆர்வம் அதிகம் இல்லை. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை. வண்டி ஓட்டுவதிலோ, நண்பர்களுடன் வெளியே செல்லவோ விருப்பம் இல்லை. மேற்படிப்பு படிக்கவும் ஆர்வம் இல்லை. உடற்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி செய்யவும் மறுக்கிறான்.தன் தங்கை செய்யும் சிறு தவறுகளுக்கும், நாங்கள் பெரிய அளவிலான தண்டனை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.என் மனைவிக்கு பல்வேறு, தொடர் உடல் பிரச்னைகள் உள்ளன. இவன் நடத்தையால், மன வருத்தம் அதிகரிப்பதுடன், உடல் நலனும் பாதிக்கப்படுகிறது.என் மகனை குணப்படுத்தி நல்வழிப்படுத்த, நாங்கள் என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து, தகுந்த ஆலோசனை வழங்குங்கள்!— இப்படிக்கு, தி.கணேசன்.அன்பு சகோதரருக்கு —உங்களின் மகனுக்கு என்ன வகை மனநோய் இருந்தது என்பதை, கடிதத்தில் குறிப்பிடவில்லை.உங்கள் மகனின் சிகிச்சையை நடுவில் நிறுத்தியது மாபெரும் தவறு. மீண்டும் அவனை அதே மன நல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். பூரணமாய் குணமாகும் வரை சிகிச்சையை தொடர்வது நல்லது. உங்கள் மகனின் விஷயத்தில் எப்படி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை பார்ப்போம்...* நீங்களும், உங்கள் மனைவியும், மகன் நல்ல மன நிலையில் இருக்கும்போது அவனிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்களை பற்றியும், தங்கையை பற்றியும் அவன் ஆவலாதிகள் தெரிவித்தால், அதை நிவர்த்தி செய்யுங்கள்.அவனின் எதிர்காலம் மிக சிறப்பாக அமைய, அத்தனை முயற்சிகளிலும் உறுதுணையாக நிற்பதாக, உறுதி கூறுங்கள். வேலை பார்த்துக் கொண்டே அவன் மேற்படிப்பு படிக்க உதவுங்கள். திருமணத்துக்கு முன் அவனின் மன நல பிரச்னையை பூரணமாய் குணப்படுத்த ஒத்துழைக்குமாறு அன்புடன் இறைஞ்சுங்கள்* உடற்பயிற்சி மையத்துக்கு வர மாட்டேன் என்றால் பரவாயில்லை. யோகா ஆசிரியையை வீட்டுக்கு வரவழைத்து, அவனுக்கு யோகாவும், தியானமும் சொல்லித் தாருங்கள், அமைதிபடுவான்* தங்கைக்கும், அவனுக்குமான தகவல் தொடர்பை மேம்படுத்துங்கள். 'மகனே, உன் சிறு சிறு தவறுக்கெல்லாம் நாங்கள் தண்டிக்காமல் மன்னிப்பது போல, தங்கையின் தவறுகளை மன்னிக்க நீ கற்று கொள்...' என கூறுங்கள். மன்னிப்பதில் கிடைக்கும் ஹிமாலய சந்தோஷத்தை அவனுக்கு மடைமாற்றுங்கள்* உங்கள் மகனுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க ஊக்குவியுங்கள்* சரியான நேரத்துக்கு, ஊட்டமான உணவை, மகன் உண்ணுமாறு அட்டவணைப்படுத்துங்கள்* தினம், -8 மணி நேரம் அவன் நிம்மதியாய் துாங்குகிறானா என, கண்காணியுங்கள்* இசை கேட்க சொல்லுங்கள். வண்ணமயமான ஆடை அணிய ஊக்குவியுங்கள். 'நான் தனித்துவமானவன். உலகில் சாதிக்க பிறந்துள்ளேன்...' என, சுய வசியம் செய்து கொள்ள சொல்லித் தாருங்கள்* தான் ஒரு மனநோயாளி என்ற தாழ்வு மனப்பான்மை, அவனுக்கு வரவே கூடாது. மனநோயை காலில் போட்டு மிதித்து, பீடுநடை போடுகிற கம்பீர மிடுக்கை, அவனுக்குள் விளக்கேற்றுங்கள்.முழுமையாய் குணமான பின் அவனுக்கு தகுந்த வரன் பார்த்து, மணம் செய்து வையுங்கள்.— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !