உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு —வயது: 54. குடிக்கு அடிமையான கணவரால் அலைக்கழிக்கப்பட்டு, வாழ்நாளில் பாதியை இழந்தவள். 26 ஆண்டுகளுக்கு முன், கணவர் இறந்து விட்டார். நானும், என் ஒரே மகனும் நிராதரவானோம்.புகுந்த வீட்டினரால் விரட்டியடிக்கப் பட்டோம். எங்களை வைத்து காப்பாற்றும் அளவுக்கு, பிறந்த வீட்டில், பொருளாதார வசதி இல்லை.பல போராட்டங்களுடன் வாழ்க்கையை எதிர்கொண்டேன். கிடைத்த வேலைக்கு சென்று, மகனை படிக்க வைத்தேன். 10ம் வகுப்புக்கு பின், படிக்க விருப்பமில்லை என்று கூறி, வேலைக்கு சென்றான், மகன்.மகனும், நானும் கடுமையாக உழைத்து, சிறிது சிறிதாக பணம் சேர்த்து, சொந்தமாக, ஒரு வீட்டை கட்டினோம். வாழ்க்கையில் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டோம்.இன்று, 'பில்டிங் கான்ட்ராக்டர்' ஆக இருக்கிறான், மகன். அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆரம்பத்தில், மருமகளும் என் மீது மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொண்டாள்.மருமகளின் பெற்றோர், எப்போது எங்கள் வீட்டுக்கு வந்து சென்றாலும், அதன்பின் அவளின் போக்கே மாறி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள். அப்படியே பேசினாலும் என்னை குறை கூறி, சண்டை போடுவாள்.'உனக்கு என்ன பிரச்னை?' என்று கேட்டபோது, 'தனிக்குடித்தனம் போக வேண்டும்...' என்கிறாள்.'இதற்காகவா, இப்படி கஷ்டப்பட்டு, ரத்தம் சிந்தி நானும், மகனும் சேர்ந்து அழகான வீட்டை கட்டினோம்...' என்றால், 'அப்ப, நீங்க, வீட்டை விட்டு சென்று விடுங்கள். பையனை வளர்ப்பது தியாகமா... உங்கள் கடமையைதானே செய்தீர்கள்...' என்கிறாள். மகனுக்கு இன்னும் விஷயம் தெரியாது. நிச்சயம் அவன் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டான். அவனிடம் ஏதாவது பொய் காரணம் கூறி, தனியாக சென்றுவிட நினைக்கிறேன். ஆனாலும், இந்த வயதிற்கு பிறகு உழைக்க, உடலிலும், மனதிலும் வலு இல்லை. மகன் குடும்பத்துடன் இதே வீட்டில் வாழவே மனம் விரும்புகிறது. நான் என்ன செய்யட்டும், சகோதரி.— இப்படிக்கு,வி.கனகலட்சுமி.அன்பு சகோதரிக்கு —ஒரு விஷ மருமகள், எப்படி இருப்பாள் தெரியுமா? * மாமியாரின் மீதான அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்துவாள்* அவள் சுயநலவாதியாக இருப்பாள்* வயதில் மூத்தவள், கணவனை பெற்று வளர்த்து ஆளாக்கி தந்தவள் என்ற மரியாதை காட்ட மாட்டாள்* பொய் சொல்லி மாமியாரின் நற்பெயரை பொது வெளியில் களங்கப்படுத்துவாள்* மாமியாரின் அபிப்ராயங்களை ஒரு பைசாவுக்கும் மதிக்க மாட்டாள்* மாமியார் எது பேசினாலும், எது செய்தாலும் அது தவறு தான் என சாதிப்பாள்* சுயமதிப்பின்மையும், பாதுகாப்பின்மையும் அதீதமாக கொண்டிருப்பாள்.மேற்சொன்ன அனைத்து குணங்களும், உன் மருமகளிடம் நிறைந்திருக்கும் என, நம்புகிறேன்.ஒரு மகனை, 10 மாதம் சுமந்து பெற்று, வளர்த்து ஆளாக்குவது தியாகம் அல்ல; கடமை தான். ஆனால், எத்தனை தாய்மார்கள், தங்கள் கடமைகளை முழு மூச்சாய் நிறைவேற்றுகின்றனர்!மகனின் திருமணத்திற்கு முன்பே, வருமானத்தை சிந்தாமல் சிதறாமல் சேர்த்து, வரப்போகும் மருமகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறாய். நல்ல கணவனையும், சொகுசாய் வசிக்க ஒரு வீட்டையும் கொடுத்த மாமியாரை, நன்றி கெட்டத்தனமாக வீட்டை விட்டு போ என, மருமகள் விரட்டலாமா?மிகவும் முக்கியமான விஷயம்... -வீடு உன் பெயரில் உள்ளதா, மகனின் பெயரில் உள்ளதா? மருமகள் செய்யும் அழிச்சாட்டியங்களை தயங்காமல், மகனிடம் போட்டு உடை. உரிமைக்குரல் எழுப்பு. கீழ்க்கண்ட தெரிவுகளை மகனிடம் கொடுத்து, எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்...* 'தனிக்குடித்தனம் கிடையாது. ஒரே வீட்டில் தான் சேர்ந்து இருக்க வேண்டும். ஒத்துக் கொண்டால் இரு. இல்லையெனில்,நீ குருவிக்கூட்டை கலைக்கும் எந்த முடிவையும் எடுக்கலாம்...' என, தன் மனைவியிடம் மகனை கூற செய்வது* வீட்டை இரு பகுதிகளாக பிரித்து, ஒரு பகுதியில் மகன் குடும்பம், இன்னொன்றில், அம்மா இருக்க வேண்டும். அம்மாவுக்கான உணவு, மகன் வீட்டிலிருந்து போக வேண்டும். அத்துடன் அம்மாவின் கைசெலவுக்கு, மாதம், 3,000 ரூபாய் மகன் கொடுத்து விட வேண்டும்* கட்டின முழு வீட்டையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு மனைவியுடன் தனிக்குடித்தனம் செல்வது; அம்மாவின் கைசெலவுக்கு மாதம், 3,000 ரூபாய் கொடுப்பது.மூன்று தெரிவுகளை கணவன் வழி கேட்டதும், மருமகள் பின்வாங்கி விடுவாள். நாட்டில் 90 சதவீத விவாகரத்துகள் நடக்க, பெண்ணின் தாயின் துர்போதனைகளே காரணம். உன் சம்பந்தியம்மா மருமகனின் தடாலடி நடவடிக்கைகளை கண்டு வெருண்டு, வாய் மூடுவாள்.உன் உரிமைகளை அதிரடியாக கேட்டு பெறுவதில் எந்த தவறும் இல்லை. ஒரு தாயின் மகத்துவத்தை, ஒரு மகனை பெற்று வளர்க்கும் போது, ஆத்மார்த்தமாக உணர்வாள், மருமகள்.— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !