உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 29 வயது ஆண். தற்போது, கவுரவமான தொழில் ஒன்றை செய்து வருகிறேன்; ஆனால், வருமானம் குறைவுதான். என் உடன் பிறந்தவர்கள், நான்கு பேர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இப்போது, எனக்கு பெண் பார்த்து வருகின்றனர் என் பெற்றோர்.நான், என், 20 - 24 வயதில், ஒரு பெண்ணை மனப்பூர்வமாக காதலித்தேன்; அவளும் தான். நான் அனைவரிடமும் சகஜமாக பேசும் குணம் கொண்டவன், சிரித்த முகத்துடன் இருப்பவன். நிறைய பெண் தோழிகள் எனக்கு. என்னுடன் ஒருமுறை பேசும் பெண்கள், அதன் பிறகு என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார்கள். நல்ல மாதிரியான பழக்க வழக்கம் மட்டுமே. இருந்தாலும், நான்கு வருடத்திற்கு பின், என்னவள், என்னை சந்தேப்பட ஆரம்பித்தாள்.ஆரம்பத்தில் நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை; ஆனால், ஒரு கட்டத்தில் எந்த பெண்ணுடனும் சாதாரணமாக பேசினால் கூட, 'அவள் யார், அவளுடன் எதற்காக பேசினாய்?' என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு, உயிரை வாங்குவாள். என்னால் தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பெரிய சண்டை வந்து, பிரிந்து விட்டோம். நாங்கள் பிரிந்து ஐந்து வருடம் ஆகிறது; ஆனாலும், அவள் நினைவு வந்து போனால், அந்த ஒரு நொடி, என்னை அறியாமல் நின்று விடுவேன். அப்போதெல்லாம், என் பெற்றோர், 'பெண் பார்க்கட்டுமா?' என்று கேட்டால், தட்டி கழித்து வந்த நான், ஆறு மாதத்திற்கு முன்தான், ஓ.கே., சொன்னேன்; அதனால், என் பெற்றோரும் என்னை நம்பி, மிகவும் சீரியசாக பெண் தேடி வருகின்றனர். தற்சமயம், மீண்டும் அப்பெண் என்னிடம் வந்து, 'என்னை காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை; தோழியாக பழகு...' என்றாள்; நானும் ஒப்புக் கொண்டேன்.சமீப காலத்தில், என் பெற்றோர் முகத்தில் கலக்கத்தை கண்டேன். விசாரித்து அறிந்ததில், நானும், அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாய், என் பெற்றோரிடம் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். என்னிடம் எப்படி கேட்பது என்று, அவர்கள் கேட்காமல் இருந்து விட்டனர். பின் எப்படியோ என் அம்மா கேட்க, 'அவ்வாறு இல்லை; நீங்களே அப்பெண்ணை பார்த்து, கட்டி வைத்தாலும் எனக்கு சந்தோஷம்...' எனக் கூறினேன்; ஆனால், அவர்கள் ஒப்பு கொள்ளவில்லை. இது, அப்பெண்ணின் வாழ்க்கையை பாதித்து விடுமோ என பயமாக இருக்கிறது. தயவு செய்து ஏதாவது ஆறுதல் தாருங்கள் அம்மா.இந்த கேடு கெட்ட சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது, எப்போது திருந்தும்? இச்சமுதாய மக்கள், நாக்கை பிடுங்கி சாகும் அளவிற்கு பதில் தாருங்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும் என்று அவர்கள் யோசிக்காது, இப்படி பேசுவது தவறல்லவா?— இப்படிக்கு, உங்கள் அன்பு மகன்.அன்புள்ள மகனுக்கு —ஒன்பது வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை சந்தித்து, நீயும், அவளும் நான்காண்டு காலம் காதலித்து இருக்கிறீர்கள். நீ எல்லா பெண்களிடமும், சகஜமாய் பழகும், வாலிபன். இதனால், உன் காதலிக்கும், உனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலி பிரிந்து போய் விட்டாள். காதலி பிரிந்து போய், ஐந்து வருடங்கள் ஆகின்றன. இப்போது, உன் பெற்றோர், உன் சம்மதத்துடன் உனக்கு பெண் பார்த்து வருகின்றனர். ஐந்து வருடங்களுக்குப் பின் வந்த உன் மாஜிக் காதலி, உன் தோழி ஸ்தானம் கேட்டு பெற்றிருக்கிறாள். உன் பெற்றோரோ, உங்களிருவருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக சந்தேகப்படுகின்றனர். சந்தேகத்தை கேட்டதற்கு, 'நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை; ஆனால், நீங்கள் அவளையே எனக்கு திருமணம் செய்து வைத்தால் மகிழ்ச்சி...' என்றிருக்கிறாய்; பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை.உன்னுடைய காதலியின் கல்வித் தகுதி, பணி, குடும்பப் பின்னணி பற்றி நீ எதுவும் கடிதத்தில் குறிப்பிடவில்லை. உன் விஷயத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள் மூவர். ஒன்று, நீ; இரண்டு, உன் பெற்றோர்; மூன்று, நம் சமுதாயம். முதலில் உன்னுடைய தவறை அலசுவோம்...நீ எல்லாப் பெண்களுடனும் சிரித்து, சிரித்து பேசுவாய். 'ஒரு தடவை என்னுடன் பேசியவர்கள், அதன் பிறகு என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார்கள்...' என, கர்வத்துடன் கூறியிருக்கிறாய்; இதுவே, ஓர் ஆணாதிக்க வெளிப்பாடு. ஆண் - பெண் நட்பு, கூட்டுப் புழு என்றால், ஆண் - பெண் காதல் வண்ணத்துப் பூச்சி. கூட்டுப் புழுவிலிருந்து, வண்ணத்துப் பூச்சிக்கு மாறுவது பரிணாம நடப்பு. உனக்கு மனம் இருப்பது போல தான், பெண்களுக்கும் மனம் இருக்கிறது. அவர்களின் மனங்களை சபல, சலன, மயக்க, தயக்கத்திற்கு உள்ளாக்கிவிட்டு, நீ வேடிக்கை பார்த்தது சரியில்லாத விஷயம். தன்னுடைய காதலன், பின்னாளில் கணவனாகப் போகிறவன், மற்ற பெண்களுடன் பழக எந்த காதலி சம்மதிப்பாள்? அதற்கு, காதலியின் சுயம் எப்படி சம்மதிக்கும்? நீ அவளை காதலிக்க ஆரம்பித்தவுடன், மற்ற பெண்களுடனான நட்பை கத்தரித்து இருக்க வேண்டும் அல்லது ரேஷன் பண்ணியிருக்க வேண்டும். நீ நட்பாய் பழகிய பெண்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து, அவரவர் குடும்பத்தை பார்க்க போய் விடுவர். ஓர் ஆணுக்கு, 25 வயது வரை தாயும், 25 வயதிலிருந்து ஊமை தூக்கத்திற்கு ஓலை வாங்கும் வரை மனைவியும் தான் நிரந்தர துணைகள்; மற்றவை எல்லாம் ரயில் ஸ்நேகங்களே. நான்கு வருடம் காதலித்து பிரிந்து விட்டு, ஐந்து வருடம் பிரிவுத் துயரில் காதலியை வாடவிட்டு, தற்சமயம் அவளை நீயும், உன் பெற்றோரும் அலைக்கழித்து வருகிறீர்கள்.ஏறக்குறைய, ஒன்பது வருடங்கள், மகன் ஒரு பெண்ணை காதலித்து, அவள் நினைவாகவே வாழ்ந்து, அவளை விட்டுவிடாமல் தோழியாக தக்க வைத்துள்ளான் என்பது உன் பெற்றோருக்கு தெரியும். மகன், தங்களுக்கு மரியாதை கொடுத்து, ரகசிய திருமணம் செய்யாமலிருக்கிறான்; நாம் சம்மதித்தால் காதலியையே மணந்து கொள்வேன் என்கிறான். நம்மை மதிக்கும் மகனுக்கு, சிறிது விட்டு கொடுத்தால் என்ன என்று உன் பெற்றோர் நினைக்கவில்லை. அவர்களுக்கு மகனின் சந்தோஷத்தை விட, அவர்களின், 'ஈகோ' முக்கியமாக இருக்கிறது.மூன்றாவதுதான் உன்னைச் சுற்றியுள்ள சமுதாயம். ஒரு சமுதாயம் யாரையும், எந்த விஷயத்தையும் நெகடிவ்வாக, பாசிட்டிவ்வாக விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கும். இந்த விமர்சனங்கள், பல சமயங்களில் மோசமான விளைவுகளையும், சில சமயங்களில் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும். உன்னுடைய விஷயத்தை விமர்சிக்கும் போது, சமுதாயம் உனக்கு அந்நியமாகி போகிறது. அடுத்தவர் விஷயத்தை அதே சமுதாயம் விமர்சிக்கும் போது, அந்த சமுதாயத்தில் நீ இரண்டற கலந்து விடுகிறாய்.ஒன்பது வருடம் பழகி, ஒரு பெண்ணை அந்தரத்தில் நிறுத்தி வைத்திருக்கிறாயே... பெற்றோரை கேட்காமல் இவன், அவளை ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டால் என்ன? நடக்காத திருமணத்தை நடந்ததாக கூறினால், இவன் ரோஷப்பட்டு அவளை பெற்றோர் விருப்பத்துடனோ, விருப்பமில்லாமலோ திருமணம் செய்து விடுவான் என நினைத்தாலும் நினைக்கும் உன் சமுதாயம். சமுதாயம் நாக்கை பிடுங்கி சாகும் அளவிற்கு பதில் தரச் சொல்கிறாய். நாக்கை பிடுங்கி சாகும் அளவிற்கு கேள்வி கேட்க வேண்டும் என்றால், உன்னையும், உன் பெற்றோரையும்தான் கேள்வி கேட்பேன்.அவளுக்கு உன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், தோழி என்ற பாவனையிலாவது உன்னை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என யாசித்து, தோழியாகி இருப்பாள்?அவள் இல்லாமல் நீ யாரை மணந்து கொண்டாலும், வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியடைவாய். பெண்ணின் சாபம் பொல்லாதது; உன் ஏழெழு தலைமுறைகளையும் அது பாதிக்கும்.உன் பெற்றோருக்கு ஆறு மாதம் அவகாசம் கொடு. அதற்குள் அவர்கள் சம்மதித்து விட்டால், உங்களிருவரின் கல்யாணம் உறவு, நட்பு சூழ கல்யாண மண்டபத்தில் ஜாம் ஜாமென்று நடக்கும். சம்மதிக்கா விட்டால் அவளை பதிவுத் திருமணம் செய்து கொள்; தப்பே இல்லை. சாட்சி கையெழுத்து போட நான் வருகிறேன்.திருமணத்திற்கு பின், பெண்களுடன் பேசி, பேசி அவர்களின் இதயங்களை திருடும் களவாணி வேலை செய்யாதே. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கண்ணா!—என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !