உள்ளூர் செய்திகள்

வலம் வர முடியாத சன்னிதானம்!

கோவிலில், சுவாமி சன்னிதியை வலம் வருவது முக்கியம். ஆனால், தஞ்சாவூர் அருகிலுள்ள திருவையாறு ஐயாறப்பன் கோவிலில், சுவாமி சன்னிதியை வலம் வர தடையுள்ளது. சிவபெருமான் முன், காளை வடிவில் இருப்பவர், நந்தீஸ்வரர். சிலாது மகரிஷியின் மகனாக அவதரித்த இவருக்கு, பிறக்கும் போதே நான்கு கைகள் இருந்தன. மகரிஷி, பெட்டியில் குழந்தையை வைத்து மூடி, திறந்தபோது, அதன் இரண்டு கைகள் நீங்கி விட்டன. பின், அக்குழந்தையை திருவையாறில் விட்டு சென்று விட்டார். அக்குழந்தையை, பார்வதிதேவியின் தாய்ப்பால், நந்தியின் வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம் மற்றும் சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகிய ஐந்து பொருட்களால், அபிஷேகம் செய்தார், சிவன். இக்காரணத்தால், இங்குள்ள இறைவனுக்கு, ஐயாறப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள், அறம் வளர்த்த நாயகி; அஷ்டமி திதியில் நாம் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஆனால், எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில், இங்கு, அஷ்டமி திதியன்று இரவில், அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.ஐயாறப்பருக்கு பூஜை செய்து வந்த அர்ச்சகர், ஒருமுறை காசிக்கு சென்றார். அவரால் உரிய நேரத்தில் பூஜைக்கு வரமுடியவில்லை. இத்தகவல் அரசனுக்கு சென்றது. அரசர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்தபடி இருந்தார்.காசிக்கு சென்ற அர்ச்சகர், மறுநாள், ஊரிலிருந்து திரும்பினார். மக்களும், அரசனும் ஆச்சரியப்பட்டனர். அர்ச்சகர் மீது கொண்ட அன்பால், ஐயாறப்பரே அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்தது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர், ஐயாறப்பர்.லிங்க வடிவில் காட்சி தருகிறார், ஐயாறப்பர். அவரது ஜடாமுடி, கருவறையின் பின்பக்கம், பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். அந்த ஜடா முடியை மிதித்துவிடக் கூடாது என்பதால், சன்னிதியை சுற்ற, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிப்பிரகாரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நின்று, 'ஐயாறப்பா...' என, உரக்க குரல் கொடுத்தால், ஏழு முறை திரும்ப எதிரொலிக்கிறது. அந்த அளவிற்கு இந்த கோவிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. இங்குள்ள தியான மண்டபத்தை சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து கட்டியுள்ளனர். இந்த பொருட்களை சேகரித்து வைக்க, மிகப்பெரிய இரண்டு குழிகள் தோண்டப்பட்டதாகவும், இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும், வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டது என்றும், அதற்காக இரண்டு குழிகள் தோண்டி, தங்கம் மற்றும் வெள்ளியை நிரப்பி வைத்திருந்ததாகவும், பணியாளர்கள் தங்களால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த தாகவும் கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக, இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.முருகனின் ஆயுதம் வேல்; ஆனால், இங்கு, வேலுடன், முருகனுக்கு வில்லும் ஆயுதமாக உள்ளது.இப்படி பல வித்தியாசமான அம்சங்கள் கொண்ட இக்கோவில், தஞ்சாவூரில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் உள்ளது. நீங்களும் இந்த அதிசயங்களைக் கண்டு வாருங்கள்!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !