உள்ளூர் செய்திகள்

சாண்டோ சின்னப்பா தேவர்! (15)

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக இனி யாரை நடிக்க வைப்பது...' என்று குழம்பிய தேவருக்கு, அவர் வழிபட்ட வேலன், புதிய வள்ளியை அடையாளம் காட்டி விட்டான்.பூக்களால் நிரம்பி வழிந்தது அரங்கம். வெவ்வேறு மலர்களின் விதவிதமான வாசம், வாசல் வரை பரவியது. முதன் முறையாக அதிக பொருட்செலவில், எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக நடிக்க, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் பந்துலு.பொதுவாகவே, தான் நடிக்கும் போது, மற்ற படத் தயாரிப்பாளர்கள் தன்னை தேடி வருவதை அனுமதிக்க மாட்டார் எம்.ஜி.ஆர்., ஒருமுறை ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம், 'நீங்க அடிக்கடி செட்டுக்கு வந்து என்னைப் பார்த்தால், 'எம்.ஜி.ஆர்., ஏ.வி.எம்க்கே சரியா தேதி தரலை போலிருக்கே'ன்னு சொல்வாங்க. உங்களுக்கு என்னை பாக்கணும்ன்னு இருந்தால் தோட்டத்துக்கு வாங்க...' என்றார்.அன்று, ஆயிரத்தில் ஒருவன் செட்டுக்கு வந்திருந்தார் தேவர். அவரிடம் எம்.ஜி.ஆர்., அப்படி கூற முடியாதே...'நாணமோ இன்னும் நாணமோ... இந்த ஜாடை நாடகம் என்ன; அந்தப் பார்வை பேசுவதென்ன...' முதலிரவு டூயட் பாடல் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவர் ஆடிப் பாடினார்.ஏறக்குறைய, அவர்கள் இருவருக்கும் இடையில், 30 வயது வித்தியாசம். பயம், பதற்றம், அறியாப் பருவம் இவற்றில் ஏதோ ஒன்று, அந்த இளம் நடிகையை தொந்தரவுபடுத்தியதால், பந்துலு எதிர்பார்த்த காதல் உணர்வு, அவர் முகத்தில் வெளிப்படவில்லை.'ஏன் இப்படி நடுங்கறே... பயப்படாம நடி...' என்று ஆறுதலாகப் பேசினார் எம்.ஜி.ஆர்.,'தைரியமா நடிக்கணும்மா. எம்.ஜி.ஆரை துரத்தி துரத்தி காதலிக்கிற மாதிரி சரோஜா தேவி நடிப்பாங்களே... அதைப்போல நடிக்கணும்...' என்ற தேவருக்கு, அந்த இளம் நடிகையை பார்த்ததும், தனக்கு இன்னொரு, சரோஜா தேவி கிடைத்து விட்டார் என்று தோன்றியது. மற்றவர்கள் முந்திக் கொள்வதற்கு முன், தான் அவரை ஒப்பந்தம் செய்துவிட வேண்டும் என்று எண்ணி, அவரை தன் அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டார். அந்த இளம் பெண் தான், ஜெயலலிதா!ஜூலை 9, 1955ல் ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்த, கன்னித்தாய் அதே ஆண்டு, செப்.,10ல் வெளியானது.தேவர் பிலிம்ஸ் வரலாற்றிலேயே, 18 நாட்களில், கன்னித்தாய் படம் தயாரிக்கப்பட்டது. தேவருக்கு மட்டும் எப்படி அது சாத்தியமானது என, சினிமாத் துறையினர் ஆச்சரியமடைந்தனர்.எம்.ஜி.ஆரின் ஜோடியாக, ஜெயலலிதாவை தன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தார் தேவர்.அன்று, தேவர் பிலிம்ஸ் அலுவலகத்தில், கதை விவாதம் நடக்கும் அறை, 'டல்' அடித்தது. நடுக்கூடத்தில் பாய்மேல் குப்புறபடுத்துக் கிடந்தார் தேவர். அவர் அருகில், ஆலயமணி பட கதையாசிரியர் ஜி.பாலசுப்ரமணியம், உதவி இயக்குனர்கள் விஜய சிங்கம், ஜெகதீசன், மாரிமுத்து மற்றும் எடிட்டர், எம்.ஜி.பாலுராவ் இருந்தனர்.கதவு தட்டப்படும் ஓசை கேட்டு, எழுந்து சென்று பார்த்தார் ஜெகதீசன். அறை வாசலில் மதுரை திருமாறன்!'அண்ணே... அவரு வந்துட்டாரு...' உயிரை மீட்க வந்த மருத்துவரைப் போல வரவேற்கப்பட்டார் மாறன். எழுந்து உட்கார்ந்த தேவர், 'வாப்பா... உன்னை என்னமோ பெரிய இவன்னு கண்ணதாசன் சொன்னாரு; இக்கதைக்கு ஒரு வழி சொல்லு...' என்றார்.ஆங்கிலப்படமான, பிட்டிலஸ் த்ரீ படத்தின் பைல், மதுரை திருமாறனிடம் தரப்பட்டது.'பிட்டிலஸ் த்ரீ படத்தின் கதை தான், அடுத்து எம்.ஜி.ஆர்., நடிக்கப் போற படம். தமிழுக்கு சரியா வரமாட்டேங்குது. இவங்கல்லாம் கை விட்டுட்டாங்க. நீங்க ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாருங்க...' என்றார் உதவி இயக்குனர் மாரிமுத்து.அண்ணன் தம்பி கதை, தமிழுக்குப் புதுசு; எடுத்தால் நன்றாக ஓடும். அக்கதைக்கு தமிழ் வடிவம் கொடுத்தார் திருமாறன். தேவருக்கு பிடித்து விட்டது. கதைக்காக மட்டும், 1,000 ரூபாய் கொடுத்தார். தேவர் பிலிம்ஸின் கதை இலாகாவில் மகுடம் சூட்டிக் கொண்டார் திருமாறன்.அடுத்து, வசனம் எழுத வேண்டும். ஆரூர்தாஸ் எழுதாத சினிமா கம்பெனிகளே இல்லை என்கிற அளவுக்கு அவர் படுபிசி! அச்சமயம், ஆயிரத்தில் ஒருவன் வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம், தேவருக்கு அறிமுகமாகியிருந்தார். அவர் எழுத்து, தேவருக்கு பிடித்து விட்டது.பத்மினி பிக்சர்ஸ், பி.ஆர்.பந்துலுவின் உதவியாளர் ஆர்.கே.சண்முகம், செட்டில், கலகலப்பாக ஜோக்குகள் சொல்வார். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கான வசனத்தை முதன் முதலாக அவரை எழுத வைத்தார் பந்துலு. ஒரு பரீட்சார்த்த முயற்சி. எம்.ஜி.ஆருக்கும், அவர் புகழை உயர்த்துகிற புதிய எழுத்தாளர்களின் தேவை இருந்தது; அதனால், தேவரிடம், ஆர்.கே.சண்முகத்திற்காக சிபாரிசு செய்தார்.'அது மிருக கம்பெனி; தேவருக்கு முன்கோபம் அதிகம். வசன பைலையே தூக்கி மூஞ்சியில வீசுவாரு. அங்கேயா போகப்போற...' என்று சண்முகத்தை சிலர் பயமுறுத்தினர்.'கார் அனுப்புறேன்; வந்துடுங்க...' என்று தேவர் பிலிம்ஸில் சொல்லியிருந்தனர்; சண்முகம் சென்றார். எழுத்தாளனுக்கு மரியாதை தருகிற கம்பெனி என்ற திருப்தியோடு, தேவர் முன் அமர்ந்தார் சண்முகம். கன்னித்தாய் கதையைக் கூறினார் தேவர். கதை, சண்முகத்துக்கு பிடிக்கவில்லை; ஆனாலும், எம்.ஜி.ஆரே செய்திருக்கிற ஏற்பாடு என்பதால், மறுக்க முடியவில்லை.'ஆயிரத்தில் ஒருவனுக்கு உட்லன்சில் ரூம் போட்டுத் தந்தார் பந்துலு; நீங்க எங்கே போடுவீங்க?' என்று கேட்டார் சண்முகம்.அவரை ஏற இறங்கப் பார்த்த தேவர், 'ஏம்பா... ஆரூர்தாஸே இங்கே உக்காந்து தான் எழுதிட்டுப் போவாரு; நீ என்னன்னா ரூம் கேக்குறயே...' என்றார்.சண்முகத்துக்கு என்னவோ போலாகிவிட்டது. தேவர் காட்டிய அறையில் சிறிய மேசை, நாற்காலி, பல்பு, மின்விசிறி, தண்ணீர்ப் பானை இதைத் தவிர, வேறு எந்த வசதியும் இல்லை. 'ஒரு வாரத்துல மொத்த டயலாக்கும் வேணும்; இந்தாப்பா முன்பணம்...' என்றார் தேவர்.'அண்ணே... இன்னிக்கு அஷ்டமியாச்சே!''அடப்போப்பா... அஷ்டமியாவது, நவமியாவது; நீ என்ன பேங்க்லயா போடப்போறே...' என்று கூறியவாறு, 1,000 ரூபாயை முன்பணமாக கொடுத்தார் தேவர். சண்முகத்திற்கு நம்பவே சிரமமாக இருந்தது. கண்ணதாசன் போன்ற பிரபலங்களுக்கே, வசனம் எழுத, 500 ரூபாய்க்கு மேல் முன்பணம் தரமாட்டார்கள்.கன்னித்தாயை விட குறுகிய நாட்களில், பிட்டிலஸ் த்ரி, முகராசியாக உருவானது. தன் அண்ணன் வேடத்துக்கு, ஜெமினி கணேசனை தேர்வு செய்தார் எம்.ஜி.ஆர்., முதன் முதலில் அவர்கள் சேர்ந்து நடிப்பதால், தேவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படத்தைப் பற்றி ஜெயலலிதா ஒரு பத்திரிகை பேட்டியில், 'முகராசி படம் போல, இதுவரை, அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்ப் படம், அதுவும், எம்.ஜி.ஆர்., நடித்தது வேறு எதுவும் தயாரானதா என்பது எனக்குத் தெரியவில்லை. 'இரவும், பகலும் விடாமல் படப்பிடிப்பு நடந்தது; பகல் முழுவதும் ஷூட்டிங். சிறிது இடைவெளியுடன் மீண்டும் தொடரும். விடியற்காலை, 4:00 மணி வரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால், ஒரு மணி நேரம் தான் ஓய்வு கிடைக்கும். உடனே, காலையில் மேக் அப் போட்டு, சீக்கிரமே ஸ்டுடியோ செல்வேன்; எனக்கு முன்பே எம்.ஜி.ஆர்., வந்திருப்பார். எனக்காவது ஷூட்டிங்கில் நடிப்பது மட்டும் தான்!'ஆனால், எம்.ஜி.ஆர்., தீவிரமான அரசியல் தொடர்புடன், படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல், சோர்வோ தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை, ஒரு இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.'ஷூட்டிங் முடிந்து அடுத்த நாள் டப்பிங், ரீ ரிக்கார்டிங் என மொத்தம் 12 நாட்கள் தான். ஒரு பிரமாண்டமான நட்சத்திரப் படம்; அதுவும் வெற்றிச் சித்திரம்...'— என்று கூறியிருந்தார்.— தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !