சாவித்திரி (11)
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். செப்., 1962ல் இந்தியாவின் வட கிழக்கு எல்லைப் பகுதியான லடாக்கில், இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை துவங்கியது, சீனா. பிரதமர் நேருவின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து கட்சி தலைவர்களும், வேற்றுமையை மறந்து, நேருவோடு கை கோர்த்தனர்.போருக்கு செலவு அதிகம் ஆனதால், பொருளாதார நிலையில், தள்ளாட்டம் கண்டது இந்தியா. ஒவ்வொரு தலைவரும், தங்கள் கட்சியினர் சார்பில், பணம் திரட்டி உதவினர். இந்திய திரையுலக கலைஞர்களும், தங்களால் முடிந்த அளவு பொருளுதவியை திரட்டி, அரசுக்கு உதவ முடிவெடுத்தனர்.தமிழகத்தின் சார்பில், தயாரிப்பாளர், ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தலைமையில், கலைஞர்கள் பொருளுதவி திரட்டும் நிகழ்வை நடத்தினர்.நாகேஸ்வர ராவை தலைவராக கொண்டு, குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., தங்கவேலு, என்.டி.ராமாராவ், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத், பத்மினி, சரோஜாதேவி, விஜயகுமார், பீம்சிங், ஸ்ரீதர் மற்றும் பந்துலு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.கலைஞர்கள் அனைவரும் மன நிறைவோடு பொருளுதவியை வழங்கினர். தன் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த, 23 சவரன் நகைகளை கழற்றி கொடுத்தார் சாவித்திரி.இதன்பின் மீண்டும், 1965ல், ஒரு பதற்றமான சூழலை சந்தித்தது இந்தியா. ஏப்ரல் 5, 1965ல், 25,000 ராணுவ வீரர்களை காஷ்மீருக்குள் அனுப்பி, காஷ்மீரைப் பிடிக்க தீவிரம் காட்டியது, பாகிஸ்தான். அப்போது, இந்திய பிரதமராக பொறுப்பேற்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்திய ராணுவ வீரர்களை காஷ்மீருக்குள் அனுப்பி, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். 1965, செப்டம்பரில் இப்போர் முடிவுக்கு வந்தது.போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பொருளுதவி வழங்க, அரசுக்கு நிதி தேவைப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், தாமே முன்வந்து, தங்களால் முடிந்த நிதியை வழங்கினர் மக்கள்.தென்மாநில திரைப்பட கலைஞர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த, நிதி பெறுதல் வேண்டி, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.நேரு விளையாட்டரங்கில் திரைக்கலைஞர்களின் கிரிக்கெட் போட்டியை நடத்தினர். அது மட்டுமல்லாமல், சிவாஜி மற்றும் இயக்குனர் ஸ்ரீதர் தலைமையில், 75 கலைஞர்களைக் கொண்டு, முக்கிய நகரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களிடம் நிதி பெற்றனர். இக்கலை நிகழ்ச்சிகள் திருச்சி, மதுரை, வேலூர் கடலூர், கோயமுத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி என, எல்லா நகரங்களிலும் நடைபெற்றது.ஜெமினி, சாவித்திரி, ஜெயலலிதா, வி.கே.ராமசாமி, எம்.எஸ். விசுவநாதன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சித்ராலயா கோபு என, பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், சிவாஜிக்கு பின், அதிக நிதி திரட்டலுக்கு காரணமாக இருந்தவர் சாவித்திரி. குறிப்பாக, சாவித்திரி முன்னின்று இக்கலை நிகழ்ச்சிக்கான அத்தனை ஒத்துழைப்பையும் நல்கியிருந்தார். 17 லட்சம் ரூபாயை, இக்கலைஞர்கள் குழு திரட்டி பெருமை சேர்த்தனர்.நவ., 21,1965ல் நடிக, நடிகையர் மற்றும் திரைப்பட கலைஞகள், தங்களின் தனிப்பட்ட பொருளுதவியை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம், சென்னை ராஜ்பவனில் வழங்குவதாக ஏற்பாடு.சிவாஜியும், ஏ.எல். ஸ்ரீனிவாசனும் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சாவித்திரி தன் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன், தன், எழு வயது மகள் சாமுண்டீஸ்வரிக்கு அனைத்து நகைகளையும் அணிவித்து, தானும் அதுபோல அணிந்து கொண்டார்.ராஜ்பவனுக்கு தன் மகளோடு வந்த சாவித்திரி, லால் பகதூர் சாஸ்திரியிடம் தான் அணிந்திருந்த நகைகளையும், தன் மகள் அணிந்திருந்த நகைகளையும் கழற்றி, தேசிய நிதிக்காக கொடுத்தார். சாவித்திரி கொடுத்த மொத்த நகைகளின் மதிப்பு, 100 சவரன்!இதே நிகழ்ச்சியில், ஜெயலலிதாவும், தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றி, நிதியாக கொடுத்தார்.நரசிம்மராவ் ஆந்திராவின் முதல்வராக இருந்த நேரம். வெள்ள நிவாரண நிதிக்காக சென்னை வந்திருந்தார்.சென்னை வந்த நரசிம்மராவுக்கு ஒரு பெரிய மாலை போடப்பட்டது. நிகழ்ச்சியில் அந்த மாலையை ஏலம் விட்டு, அதில் வரும் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு சேர்ப்பது என முடிவு எடுத்தனர்.அதே போன்று, நரசிம்மராவுக்கு போட்ட மாலை ஏலம் விடப்பட்டது. நாட்டுக்கு நிதி வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சாவித்திரியும் ஏலத்தில் பங்கு கொண்டு, யாரும் கேட்காத விலையை குறிப்பிட்டு, ஏலம் எடுத்தார்.நாட்டிற்காக அள்ளி கொடுத்ததை தவறியும் எந்த இடத்திலும் உச்சரிக்கவில்லை சாவித்திரி. நடிகை என்ற அடையாளத்தை தாண்டி, ஒரு குடும்ப பெண்ணாய், இந்திய மகளாக சாவித்திரி நின்ற அந்நேரங்களை நினைக்கும் போது நெஞ்கம் நெகிழ்ந்து போகும்.— தொடரும்.கடந்த, 1967ல் தமிழக சட்டசபைத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திடீர் என்று இறந்து போனதால், 233 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற சூழலே இருந்தது. ஆனால், முடிவுகள், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக அமைந்திட, 138 இடங்களைப் பிடித்து, தமிழகத்தில் முதன் முதலாக தி.மு.க., ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக பொறுப்பேற்றார், அண்ணாதுரை.கலைத்துறையின் ஆதரவில் கழகம் ஆட்சியைப் பிடித்ததால், அண்ணாதுரைக்கு அத்துறை மீது ஈடுபாடு ஏற்பட்டது.முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, கலைத் துறைக்கு என்று சில சலுகைகளை அறிவித்தார். அதில், ஒன்று, கலைமாமணி விருது. 'ஆண்டுதோறும் கலையில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படும்...' என்று அறிவித்தார் அண்ணாதுரை.அவ்வண்ணமே முதல் விருது வழங்கும் விழா, அவர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.கலைமாமணி விருதுக்கு அரசு தேர்ந்தெடுத்த கலைஞர்கள் பட்டியலில் சாவித்திரியும், ஜெமினியும் இடம் பெற்றிருந்தனர். கணவன், மனைவி என, இருவரும் ஒரே ஆண்டில் கலைமாமணி விருது பெறுவது, ஜெமினி - சாவித்திரி தம்பதிக்கு மட்டுமே அமைந்த சிறப்பு.காங்கிரஸ் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த சாவித்திரிக்கு, கலைமாமணி விருதை தி.மு.க., அரசு அறிவித்தது என்றால், சாவித்திரியிடம் இருந்த நடிப்புத் திறமை தான் காரணம்.- ஞா. செ. இன்பா