ஊதியமாக ரூ.1 பெற்ற விஞ்ஞானி!
டிச., 30- விக்ரம் சாராபாய் நினைவு தினம் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், ஆக., 12, 1919ல், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார், விக்ரம் சாராபாய். இன்று, இந்திய மண்ணிலிருந்து செயற்கைக் கோள்கள், இஸ்ரோ மூலம் விண்வெளிக்கு அனுப்பப் படுகிறது. இந்த அமைப்பை உருவாக்கியவர், விக்ரம் சாராபாய். அதற்கு நன்றி கூறும் விதமாக, அண்மையில், விண்ணில் பறந்த இந்தியாவின் முதல் தனியார் செயற்கை கோளுக்கு, அவரது பெயரின் சுருக்கமாக, 'விக்ரம் எஸ்' என்று பெயரிடப்பட்டது.தன் ஆரம்ப கல்வியை அகமதாபாத்தில் முடித்தார். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இயற்கை இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று, இந்தியா திரும்பினார், விக்ரம் சாராபாய்.அகமதாபாத்தில், 1947ல், காஸ்மிக் கதிர்வீச்சு ஆய்வில் ஈடுபட்டார். மற்ற வளர்ந்த நாடுகளை போல், இந்தியாவிலும், செயற்கை கோள்களை, விண்வெளிக்கு அனுப்பி, ஆய்வுகள் மேற்கொள்ள ஆர்வம் கொண்டார், சாராபாய்.தகவல் தொடர்பு, இயற்கை வளங்கள் ஆய்வு, வானிலை முன்னறிவிப்பு போன்றவைகளுக்கு, விண்வெளி ஆராய்ச்சி அவசியம் என்பதை, அப்போது பிரதமராக இருந்த, ஜவகர்லால் நேருவிடம் எடுத்துரைத்தார். இதன் விளைவாக, 1962ல் உருவானது தான், 'இந்தியன் நேஷனல் கமிட்டி பார் ஸ்பேஸ் ரிசர்ச்' நிறுவனம். இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு தலைவராக நியமிக்கப்பட்டார், விக்ரம் சாராபாய். தன் தலைமை பொறுப்பிற்கு, சாராபாய் பெற்ற மாதச் சம்பளம், வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. அதோடு, இந்தியாவின் முதல் ராக்கெட்டை, விண்ணில் செலுத்த, இடம் தேர்வு செய்ய, பல்வேறு பகுதிகளுக்கு, தன் சொந்த செலவில் சென்று வந்தார். இது விஷயமாக அவர், அப்போதைய பிரதமர் இந்திராவை, எப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என, சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, தும்பா தான், இந்தியாவின் முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்பட, சாராபாய் தேர்வு செய்த இடம்.இங்கிருந்து இந்தியாவின் முதல், சவுண்டிங் ராக்கெட்டான, அமெரிக்க நைக்கி அப்பாச்சி, நவம்பர் 21, 1963ல் விண்ணில் ஏவப்பட்டது. அது, 30 கிலோ எடையுடன், 207 கி.மீ., உயரத்தை எட்டியது. இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு, ஆகஸ்ட் 15, 1969ல், 'இஸ்ரோ' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக பெங்களூரில் துவக்கப்பட்டது.திருவனந்தபுரம், தும்பா ஏவுகணை தளத்திற்கு அருகில் ரயில் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்றார், சாராபாய். அந்த நிகழ்வு முடிந்த பின், ஹோட்டல் ஒன்றில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது, டிச., 30, 1971ல் மாரடைப்பால் காலமானார்.தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன்இந்தியாவின் முதல் செயற்கை கோள், ஆரியபட்டா - ஏப்ரல் 19, 1975ல் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண் ஏவுதலுக்கு முழு முதல் காரணமாக இருந்தவர், விக்ரம் சாராபாய் தான். அதேபோல், அவரின் திட்டத்தின்படியே, ஜன., 1, 1977ல், 'சைட்' என்ற செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் தொலைக்காட்சி வாயிலாக, 24 ஆயிரம் கிராமங்களில் உள்ள, 50 லட்சம் பேர், கல்வி கற்க முடிந்தது. இது எந்த நாட்டிலும், நடத்தப்படாத சாதனை.பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷண் எனும் இரண்டு உயரிய விருதுகளை விக்ரம் சாராபாய்க்கு வழங்கி, அவரை கவுரவித்தது, இந்திய அரசு.