புது சோறா பழைய சோறா?
அமைதியாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் பேசுவதில் வல்லவர்கள் பெண்கள்.வாழைப் பழத்தில் ஊசி சொருகுவதை போல, தங்கள் வாக்கு சாதுர்யத்தில், வன்மையாளர்களையும் திருத்தி விடுவர்.சிராவஸ்தி எனும் பெருநகரத்தில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.ஊர் முக்கியஸ்தரான அவர், உளுத்துப் போனதைக் கூட யாருக்கும் தர மாட்டார். அவருடைய மருமகளான சுசீலாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமனாரை எப்படியாவது திருத்த வேண்டும் என, தீர்மானித்தாள்.ஒருநாள், சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாமனார். அருகில் நின்று அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள் சுசீலா. அப்போது, அவ்வீட்டின் வாசலில் புத்த பிட்சு ஒருவர், 'பவதி பிட்சாம் தேஹி...' எனக் குரல் கொடுத்தார்.அதைக் காதிலேயே வாங்காமல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தார் மாமனார். இரண்டாவது முறையாக குரல் கொடுத்தார் புத்த பிட்சு.அக்காலத்தில் பிட்சை கேட்பவர்கள், இரு முறை குரல் கொடுப்பர். அப்படியும் பிட்சை வரவில்லை என்றால், மூன்றாவது முறை குரல் கொடுத்து விட்டு, உடனே நகர்ந்து விடுவர். இது, ஒரு சம்பிரதாயம்.ஆகையால், பிட்சு இரண்டாவது முறையாக குரல் கொடுத்தபோது, சம்பிரதாயம் தெரிந்த மருமகள், 'பிட்சுவே... என் மாமனாரே பழையது தான் உண்ணுகிறார்; அதனால் நீங்கள் வேறு இடம் பாருங்கள்...' என்றாள்.பிட்சு போய் விட்டார். மாமனாரோ, 'சுசீலா... நீ இந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்ணாயிருந்தும், நான் பழையது சாப்பிடுவதாகச் சொல்லி, என்னை அவமானப்படுத்தி விட்டாய்; அதனால், இப்போதே வீட்டை விட்டு வெளியே போ...' என்று கோபமாகக் கூறினார்.'மாமா... நான் என்ன தவறு செய்தாலும், நல்லவர்கள் எட்டு பேரிடம் நியாயம் கேட்டு, அதன்பின் தான் என்னைத் தண்டிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். ஆகையால், எட்டு நல்லவர்களை அழைத்து கேளுங்கள். அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறேன்...' என்றாள் சுசீலா.அதன்படி எட்டு பேர் முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது. 'சூடான உணவை உன் மாமனார் சாப்பிடும் போது, பழையது சாப்பிடுகிறார் என்று ஏன் சொன்னாய்?' எனக் கேட்டனர் பஞ்சாயத்தார்.'ஐயா... பூர்வ ஜென்மப் புண்ணியங்களால் தான் செல்வம் கிடைக்கிறது; என் மாமனாரிடம் இப்போதுள்ள செல்வமெல்லாம், போன பிறவியின் புண்ணிய வசத்தால் கிடைத்தவை. ஏன் என்றால், இப்பிறவியில் அவர் எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அதன் காரணமாகத் தான், என் மாமனார் சாப்பிடுவதைப் பழையது என்று சொன்னேன்...' என்று அமைதியாக கூறினாள்.அவள் சொன்னது சரி என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மனம் மாறிய மாமனார், தர்மம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். சுசீலா சொன்னதை ஏற்று, நாமும் இயன்றவரை அறம் செய்து, நல்ல உணவுகளை உண்போம்!பி.என்.பரசுராமன்திருமந்திரம்!தேவர் பிரான் தனைத் திவ்விய மூர்த்தியையாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின்ஓதுமின்; கேண்மின்; உணர்மின்; உணர்ந்த பின்ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.கருத்து: இறைவனை உள்ளவாறு உணர்ந்தோர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பின், அவரிடம் இருந்து கல்வி மற்றும் கேள்வி அறிவை அடையுங்கள்! அவ்வாறு கற்றும், கேட்டும் அறிந்ததை சிந்தித்துத் தெளிவு பெறுங்கள்! அவ்வாறு தெளிவு பெற்றோரே வாழ்வில் உயர்ந்து நிற்பர்.