தென் அமெரிக்க டூர்! (3)
உலக மகா அணையான, 'இத்தைப்பு'வை பார்த்த குஷியுடன் பிரேசிலுக்கு, 'பை பை' சொல்லிவிட்டு, கிளம்பினோம். அர்ஜென்டினா எல்லைக்குள் நுழைந்தோம். அர்ஜென்டினா போக, எங்களுக்கு டூர் கைடு டோனி, குடியேற்ற சான்றிதழ் மற்றும் சுங்க சோதனையை எல்லாம் மிகவும் சுமூகமாக முடித்துத் தந்தார். அங்கிருந்து, 'போர்டோ இகுவாசு' என்ற விமான நிலையத்தை அடைந்தோம். அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் உள்ள சிறிய நகரம் அது. அங்கிருந்து உள்ளூர் விமானத்தில் தலைநகர், 'பியேனோஸ் ஏர்ஸ்' அடைந்தோம்.அங்கு, 'பாலின்' என்ற பெண் டூர் கைடு தான் எங்களை வரவேற்றார். இரவாகி விட்டதால், உணவு முடித்து, ஓய்வெடுக்கக் கூறிய அவர், 'காலையில் ரெடியாக இருங்கள், உள்ளூர் டூர் போகலாம்; குட் நைட்!' என்று கூறி, விடை பெற்றார்.மறுநாள் கிளம்பிய போது, எங்கள் பயணத்திற்கு ஒரு திடீர் தடை; காரணம், தொழிலாளர்களின் சாலை மறியல். அதிக சம்பளம் வேண்டும் என்று, போக்குவரத்தை முழுமையாக ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். இதனால், எங்கள் பயணப் பாதையை மாற்ற வேண்டியதாகி விட்டது.தென் அமெரிக்க நாடுகளில் இதுபோன்ற சாலை மறியல் மிகவும் சகஜம். எங்கள் பயணத்தின் போது, சிலி, பொலிவியாவிலும் சாலை மறியல் சிக்கலில் அவஸ்தை அனுபவித்தோம்.அர்ஜென்டினா தலைநகர், 'பியேனோஸ் ஏர்சை' தென் அமெரிக்காவின் பாரீஸ் என்று செல்லமாக அழைக்கின்றனர். இங்குள்ள பரந்த, நேர்த்தியான சாலைகள், கட்டட வடிவமைப்பு, பூங்காக்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவை, பாரீஸ் நகரை நினைவுபடுத்துகின்றன.முதல் ஸ்டாப் ஒரு பெரிய கல்லறை. அர்ஜென்டினா நாட்டின் பெரும் செல்வந்தர்களுக்கும், புகழ் மிக்கவர்களுக்கும், இதுதான் நிரந்தர தூக்க இடம். கல்லறைக்கு மேல் அழகான சிற்பங்களை வடித்துள்ளனர். இறந்தவரின் குடும்ப பெருமையை பறைசாற்றுவது போல அமைந்துள்ளன.அர்ஜென்டினாவின் புகழ் வாய்ந்த பெண்மணி, 'எவிடா' பற்றி, கேள்விப்பட்டு இருப்பீர்களே... அவர் கல்லறையும் இங்குதான் உள்ளது. இதனால், இந்த கல்லறையை நோக்கி அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இதற்கு அருகே பிரபலமான, பரோக் சர்ச், அதைத் தாண்டி கலாசார மையம் இருக்கிறது. இவற்றைப் பார்த்து முடித்ததும், ரோஜா தோட்டம் எங்களை இழுத்தது. இங்கே பலவித வண்ண ரோஜா மலர்களின் அழகை பார்த்து, கிளம்பிய நாங்கள், பக்கத்தில் இருந்த அருமையான ஏரிக்கரையில் நடந்து, மென்மையான ரோஜா மணத்துடன் இணைந்த, தென்றல் காற்றின் சுகத்தை உணர்ந்து, பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.நகர் பகுதிக்குள் நுழைந்தோம். நல்லவேளை; போக்குவரத்து தடை நீங்கியிருந்தது. நகரின் மையப் பகுதியில் இருந்தது, 'பிளாசா டிமேயா!' முன்னதாக, 'பிளாசா மேயர்' என்று அழைக்கப்பட்டது. இது, மிகவும் புகழ்வாய்ந்த சதுக்கம். இதை சுற்றிதான், டவுன் ஹால் கதீட்ரல் மற்றும் வைஸ்ராய் இல்லம் உள்ளது. 'பியேனோஸ் ஏர்ஸ்' தான் அரசியல் மற்றும் மதம் சார்ந்த அதிகார பீடங்களின் உறைவிடம். இந்த சதுக்கத்தில் எங்களை மிகவும் கவர்ந்தது, 'கசாரோசடா' என்று அழைக்கப்படும், அதிபர் மாளிகை தான். சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். எங்கு பார்த்தாலும், சிறிய கடைகள், ஷூ பாலீஷ் பையன்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கும் பஞ்சமில்லை.நாங்கள் அந்தப் பகுதியில் காலாற நடந்தோம். பிரபலமான, ஆனால் பழமையான, 'டோனிஷ்' உணவகம் தென்பட்டது; உள்ளே நுழைந்தோம். சிறந்த பிஸ்தா, மணக்கும் சூப் வகைகள், காய்கறி சாலட்கள் எல்லாமே சூப்பர் ருசி.சாப்பிட்டு முடித்த பின், சில மைல் தூரத்தில் உள்ள, 'லாபோக்கா' என்ற புறநகர் பகுதியை அடைந்தோம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதி இத்தாலி, ஸ்பெயின் நாட்டு துறைமுக தொழிலாளர்களின் குடியிருப்பாக இருந்தது. கப்பல்களுக்கு பெயின்ட் அடித்த பின், இருக்கும் மிச்சம் மீதியை தங்கள் வீடுகளுக்கும் அடித்துக் கொள்வராம். ஆகவே, இப்போதும் இங்குள்ள மக்கள், பளிச்சென்று பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் பெயின்ட் அடித்து, பழைய காலத்தை நினைவுப்படுத்துகின்றனர்.இதுமட்டுமல்ல; உள்ளூர் ஓவியர்களும், தெருப் பாடகர்களும் இங்கு அதிகமாக தென்படுகின்றனர். டப்பாங்குத்து பாட்டு பாடி, சுற்றுலா பயணிகளை கவர்ந்து, ஓவியங்களை விற்கின்றனர். பொறுமையோடு பேரம் பேசினால், பொருட்களை பாதி விலைக்கே வாங்கி விடலாம்.இங்குள்ள உணவகங்களில், அர்ஜென்டினா மாட்டு இறைச்சி துண்டுகளை, பீர் மற்றும் ஒயினோடு சாப்பிடுவது மிகவும் விசேஷம். இது போக, 'ஜெம் ஸ்டோன்' விற்கும் கடைகளும் அதிகம். ஒரு கடையில் நுழைந்தோம். என் நண்பர் மிகவும் விசேஷமான, 'பிங் ஸ்டோன்' என்ற கல் வகையில் சில வாங்கினார். இந்த இடத்தில், பகலில் எங்கு வேண்டுமானாலும் வலம் வரலாம்; ஆனால், இரவில் தப்பித் தவறிக் கூட நடமாடக் கூடாது. போதை மருந்து மற்றும் பிக்பாக்கெட் கும்பல்களிடம் சிக்கிக் கொள்ள நேரிடும்.அடுத்தது நாங்கள் சென்றது ஒரு பிரபல நடன அரங்கம். 'டாங்கோ நடனம்' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது, அர்ஜென்டினா நாட்டு கலையின் சிகரம் என்று சொன்னால் மிகை ஆகாது. டாங்கோ நடனம் முற்றிலும் வித்தியாசமானது. ஒன்றோ அல்லது பல ஜோடிகளோ பங்கேற்கலாம்.அரங்கத்தின் அருமையான இடத்தில் எங்களுக்கு, 'சீட்' ஒதுக்கியிருந்தனர். திரை விலகியதும், மின்னொளி இசைக்குழு அரங்கத்தில் எல்லாருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, மின்னல் வேகத்தில் ஒரு வரவேற்பு, 'டியூனை' அள்ளி விட்டனர்; ஒரே கைதட்டல். நடனம் தொடங்கியது. ஐந்து ஜோடிகள் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் கவர்ச்சியான ஆடையில் பின்னி பிணைந்து ஆடும் நடனம் துவங்கியது. மிக வேகமாக, அதே சமயம் இசைக்கு ஏற்ப, நளினமான நடன அசைவுகளை காட்டினர். அதிலும், கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், இடுப்பிற்கு மேல் உடலில் அசைவே இல்லை. அப்படியே சிலை போன்ற நிலையில் நிறுத்தினர். இடுப்புக்கு கீழே தான் நடன அசைவுகளே. அப்படியானால், நடனம் எப்படி இருக்கும். கால்கள் மட்டும் வட்டமிட்டு சுழன்றபடியே இருக்கும். இப்படி வேகமாக டான்ஸ் ஆடினால்... கற்பனை செய்து கொள்ளுங்கள். நாங்கள் பார்த்து பிரமித்து விட்டோம்.மறுநாள் காலை எங்களை அழைத்துச் செல்ல இருந்த கைடான, 'பாலின்' இன்னொரு சுற்றுலா குழுவினருடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், நாங்கள் தனியாகவே நகரை வலம் வர கிளம்பினோம். நகரில் எங்கும் பரந்த சாலைகள்; அதுபோன்று, பார்க்கும் இடமெல்லாம் வரலாற்று புகழ்மிக்க சின்னங்கள், நேர்த்தியான வடிவமைப்பு கட்டடங்கள், மாளிகைகள். எதிலும், ஐரோப்பிய வடிவமைப்பு திறன் எட்டிப் பார்த்தது. அது போன்று, பெரும் சிலைகளும் ஐரோப்பிய வடிவமைப்பை காட்டின.ஷாப்பிங் செய்ய ஏற்ற நகரம் இது. முக்கியமாக சிறந்த தோல் பைகள், ஜாக்கெட்டுகள், மணிபர்ஸ்கள், பல டிசைன்களில் குவிந்திருந்தன. ஜெம் ஸ்டோனில் செய்யப்பட்ட அழகான நெக்லஸ்களுக்கும், மோதிரங்களுக்கும், காது தோடுகளுக்கும் பஞ்சமே இல்லை; கண்டிப்பாக பர்ஸ் பழுத்து விடும்.'லாசக்ரா' என்ற பெயரில், ஒரு ரெஸ்டாரன்ட் தென்பட்டது.'பியேனோஸ் ஏர்சின் பிரபலமான ரெஸ்டாரன்ட்...' என, கைடு சொன்னதால், சாப்பிட உட்கார்ந்து விட்டோம்; அருமையான டின்னர்.மறுநாள், பியேனோஸ் ஏர்ஸ்க்கு ஒரு, 'பை' சொல்லிவிட்டு விமானத்தில் ஏறி, 'பரிலோச்' என்ற நகருக்கு போய் சேர்ந்தோம். அர்ஜென்டினாவின் புகழ் வாய்ந்த, 'படகோனியா' பிரதேசத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள நகரம். நாங்கள் போய் இறங்கிய போது, நல்ல மழை வரவேற்றது; பனிகாற்று வேறு.இங்கு, 'நஹுல் ஹுபெய்' என்ற பெரிய ஏரி உள்ளது. மலையை தாண்டிய இடத்தில் ஆரம்பித்து, பல கி.மீ., துரம் வரை பரவி உள்ளது இந்த ஏரி. கடும் குளிர் மற்றும் மழையால், ஓட்டலில் நாங்கள் முடங்க வேண்டியதாகி விட்டது. மாலை நேரமாதலால், வறுத்தெடுத்த வித்தியாசமான சுவை கூடிய, வேர்க்கடலையோடு, காபி சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். இரவு தாண்டியும், மழை பெய்து கொண்டே இருந்தது.பரிலோச் - பரப்பில் சிறிய ஊர் என்றாலும், திரும்பிய இடமெல்லாம் பனித் தூவிய வெண் மலைகள்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிந்தன. ஏரிகள், காட்டுப் பகுதிகள் நிறைந்த இடம். மேலும், பனிச்சறுக்கு விளையாட்டுக்கு ஏற்ற இடம். ஆகையால், வெளிநாட்டு பயணிகள் மட்டுமின்றி, அருகில் உள்ள பிரேசில் நாட்டு மக்களும், இங்கு வந்து பனிச்சறுக்கு விளையாட்டில் உற்சாகமாக பங்கேற்கின்றனர். கிட்டதட்ட இந்த ஊர் ஒரு, சிறிய சுவிட்சர்லாந்து என்றால் மிகையாகாது.மலை உச்சிக்கு சென்று இயற்கை எழிலை ரசிக்கலாம்; நடந்து போக வேண்டும் என்று அவசியமில்லை. 'சேர் லிப்ட்' என்ற வசதி உள்ளது. அதில் ஏறிச் சென்றால், லிப்டே நம்மை மலை உச்சிக்கு கொண்டு போய் விடும்.மலை உச்சியில் இருந்து பார்த்தால், அப்பப்பா, எங்கும் பனி போர்த்தியது போல காட்சி அளித்தது. இதை சொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் நேரில் வந்து அனுபவித்தால்தான் உணர முடியும். காடுகளின் பசுமைகள், பனியின் வெண்மை, மேகங்களின் நீல நிறம் சேர்ந்தால், எப்படி இருக்கும் என்று, நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.பிற்பகலுக்கு பின், அந்த ஊரின் மையத்தில் அமைந்துள்ள ஷாப்பிங் பகுதிக்கு சென்று பார்த்தோம். சிறிய ஊராக இருந்தாலும், அருமையான கடைகள் இருந்தன. சர்வதேச அளவில் புகழ் வாய்ந்த லெதர் மேல் சட்டைகள், பெல்ட்டுகள் மற்றும் ஷூக்கள் நிறையவே இருந்தன. என் நண்பர் விலை உயர்ந்த நல்ல கை வேலைப்பாட்டுடன் அமைந்த ஒரு ஜோடி லெதர் ஷூக்களை வாங்கினார். நான் எப்போதும் போல் இன்னொரு செட், டி-ஷர்ட் மட்டும் வாங்கிக் கொண்டேன்.இரவு நேரத்தில் ஒரு வலம் வந்து, உணவை முடித்துக் கொண்டு, அறையில் முடங்கி விட்டோம். — தொடரும்.கே. வெங்கட்ராமன்