உள்ளூர் செய்திகள்

தென் அமெரிக்க டூர்! (4)

மறுநாள் காலையில் சில்லென்ற பனிக்காற்றுத்தான் படுக்கையைவிட்டு எழ வைத்தது. காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு கிளம்பினோம். பரிலோச் துறைமுக பகுதியை அடைந்தோம். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, படகு கிளம்பும் இடத்தை அடைந்த போது, படகு உதவியாளர்கள் வந்து, எங்களை படகில் ஏறுவதற்கு உதவினர். படகு பெரிசு; ஆனால், பெரும் பழசு. படகு, சரியான நேரத்திற்கு கிளம்பி, 'நஹுல் ஹுபெய்' ஏரியில் செல்லத் தொடங்கியது. ஏரி கரையின் ஒரு பக்கம், பச்சை பசேல் என்று அடர்ந்த மரங்கள், செடி, கொடிகள்; இன்னொரு பக்கம், உயர்ந்து நின்ற மலைப் பகுதிகள். இடையே கொட்டும் சிறு, சிறு நீர்வீழ்ச்சிகள். மலைகளுக்கிடையே, அலை, அலையாக ஓடிக் கொண்டிருந்த பனி மேகங்கள்... பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது.கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்துக்குப் பின், ஏரியின் எல்லையில் ஒரு சுற்றுலா பகுதியில் எங்களை இறக்கிவிட்டு சென்று விட்டது படகு. இங்கிருந்து ஒரு மினி பஸ்சில் பயணத்தை தொடர்ந்தோம். 'போரட்டோ பிரியாஸ்' என்ற இடத்தை அடைந்தோம்.இது, அர்ஜென்டினாவின் எல்லை பகுதி. சுங்க சோதனையை முடித்து, பஸ் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில், குறுகிய சாலை வழியாக பஸ் மெதுவாக சென்று, 'பெயெல்லா' என்ற சிறிய ஊரில் எங்களை இறக்கி விட்டது. இதுதான், 'சிலி' நாட்டு எல்லையின் முதல் ஊர். மீண்டும் சுங்கச் சாவடியில் சோதனை; இது ஒரு வேதனை. வேறு வழியில்லை.ஒரு விதமாக சோதனையை முடித்து, அர்ஜென்டினாவுக்கு ஒரு குட்பை போட்டு விட்டு, சாவடியின் அருகே உள்ள ஒரு அழகான ஓட்டலில் சிறிது ரெஸ்ட். பிறகு, அருமையான பகல் உணவு சாப்பிட்டு, அடுத்த படகு பயணத்தை ஆரம்பித்தோம்.பெரிய நவீன படகு, அதிக வேகத்தில் சென்றது. சிலி நாட்டின், 'டோடாஸ் லாஸ் சாண்டாஸ்' ஏரியில் படகு சீராக சென்றது. இந்த ஏரி, நார்வே நாட்டு கடற்சுழிகள் போல் குறுகி இருந்தாலும், ஆழமாக உள்ளது.படகு, 'பெட்ரோஹு' என்ற சிறிய ஊரின் துறைமுகத்தில் எங்களை இறக்கி விட்டது. அங்கிருந்து மீண்டும் ஒரு பஸ் பயணம். 'சிலி' நாட்டின் மிகப் பெரிய ஏரியான, 'லியான்க்யூவின்' கரைப் பகுதியில் பஸ் சென்ற போது, இதமான குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.இந்தப் பகுதியில் எரிமலைகள் அதிகம். அசார்னோ என்ற மிகப் பெரிய எரிமலையின் பனி மூடிக் கொண்டிருந்த காட்சி மிகவும் அபாரம்.மாலை மங்கிய நேரத்தில், 'போட்டோவாராஸ்' என்ற ஊரை பஸ் அடைந்தது. 'இது தான் கடைசி ஸ்டாப்...' என்றார் பஸ் டிரைவர்.அப்பாடா என்று பெருமூச்சை விட்டோம். ஊரில் எங்கு திரும்பினாலும், ஜெர்மன் வடிவமைப்பு வீடுகள், கட்டடங்கள் காண முடிந்தது. இங்கு, 19ம் நூற்றாண்டு சர்ச் உள்ளது; அதுவும், ஜெர்மன் ஸ்டைல்தான். எல்லா அம்சத்திலும் ஜெர்மன் கலைத்திறனை காண முடிந்தது.இவ்வளவு நாள் பயணத்தில் எவ்வளவோ நட்சத்திர ஓட்டல்களில் தங்கினோம்; ஆனால், இங்குள்ள ஓட்டலில் நாங்கள் நுழைந்த போது, பிரமித்து போய் விட்டோம். பிரமாண்ட படுக்கை அறை, கிங் சைஸ் கட்டில், அருமையான மெத்தைகள், படுக்கை விரிப்புகள், இதமான தலையணைகள், 'சீக்கிரம் தூங்க வா...' என்று அழைத்தன. ஓட்டலின் கீழ் தளத்தில் சிறிய ரெஸ்டாரன்ட் அமைந்திருந்தது. நாள் முழுவதும் ஓய்வு இல்லாது பயணித்ததால், அயர்ந்து தூங்கி விட்டோம்.அதிகாலையில், 'வேக்-அப்' கால் இரண்டு முறை அடித்த பின் தான் எழுந்தோம். அவசரமாக குளித்து, அடுத்த உள்ளூர் விமான பயணத்துக்கு தயாரானோம். ஓட்டலை விட்டு கிளம்பவே மனமில்லை. 'அவசரம், அவசரம்...' என, எங்கள் கைடு நச்சரித்ததால், காரில் ஏறி, விமான நிலையத்தை அடைந்தோம்.சிலி நாடு, தென் அமெரிக்காவில் நீட்ட மிளகாய் போல், ஆண்டிஸ் மலைத் தொடருக்கும், பசுபிக் கடலுக்கும் இடையே நீண்டிருக்கிறது.ஜெனரல், 'பினேசே' பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்களே. மிகவும் கொடுமையான தலைவர் என்று பெயர் எடுத்தவர். 'பல எதிரிகளை சத்தம் இல்லாமல் கடத்தி, கொன்று விட்டார்...' என, இவர் மேல் ஒரு பெரும் குற்றச்சாட்டு இன்றும் கூறப்படுகிறது. ஆனால், சிலி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இவர்தான் அடிப்படை என்று, எல்லாரும் ஒத்துக் கொள்கின்றனர்.இன்று, சிலி நாட்டில் ஜனநாயகம் தழைக்கிறது. பொருளாதார முன்னேற்றத்தின் அறிகுறிகள் எங்கும் காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வரத் துவங்கி விட்டனர். பொழுதுபோக்கு மற்றும் இயற்கை அம்சங்களுக்கும் பஞ்சமில்லை.விமானம், 'போட்டோ மாண்ட்' என்ற ஊரில் இருந்து கிளம்பி, இரண்டு மணி நேரத்திற்குள், சிலி நாட்டு தலைநகர் சான்டியாகோவை அடைந்து விட்டது. தென் அமெரிக்காவின் அழகு நகரங்களில் முன்னணியில் உள்ள இந்த நகர், 1541ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. நகரின் குறுக்கே, 'மடிசோ' என்ற அழகிய ஆறு ஓடுகிறது. சுற்றிலும், 'ஆண்டிஸ்' மலையின் பனி படர்ந்த சிகரங்கள் நகருக்கு மேலும் அழகை கூட்டுகிறது. 'கென்னாடீ' என்ற சிறந்த நட்சத்திர ஓட்டலில் கொண்டு சேர்த்தார் எங்கள் புதிய கைடு மரியா. நீண்ட கரும் கூந்தல்; சற்று பெருத்த உடம்பு. ஆனாலும், படு சுறுசுறுப்பான நடை, பேச்சு; இதுதான் மரியா.சிறிது ஓய்வுக்குப் பின், நாங்களே ஒரு மினி நகர் வலம் சென்றோம். பக்கத்தில் ஒரு ஷாப்பிங் சென்டர். அங்கு, 'ஓரியன்டல்' உணவகத்தில், ப்ரைடு ரைஸ் வகைகளை ஒரு கை பார்த்தோம்.மறுநாள் காலை, 'டாண்' என்று, 9:00 மணிக்கு ஓட்டல் வரவேற்பு பகுதியில் காத்திருந்தார் மரியா. முதலில், சான்டியாகோ நகரை வலம் வந்தோம். மிகப் பெரிய பூங்காவில் நுழைந்து, சான்டியா கோவின் அழகை ரசித்தோம். பூங்கா மிகவும் நேர்த்தி; ஒரு குப்பையைக் கூட காணோம். பிறகு, நகரின் மெயின் சதுக்கத்தைச் சுற்றி உள்ள அதிபர் மாளிகை, பழமையான சர்ச், டவுன் ஹால் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து, கடைகள் நிறைந்த அழகான பெரிய வீதிகளில் சுற்றிவிட்டு, 'பொலவிஸ்டா' என்ற புறநகர் பகுதிக்கு சென்றோம்.இந்தப் பகுதி மிகவும் வித்தியாசமாக இருந்தது. பல வகையான உணவகங்கள் நிறைய இருந்தன. மீன் அயிட்டங்களுக்காக மட்டுமே சில ஸ்பெஷல் ரெஸ்டாரன்டுகள் இருந்தன. 'பொட்டிக்' எனப்படும் விசேஷ உடை விற்கும் கடைகள் மூலைக்கு ஒன்று. விலையும் அது போல் அதிகம் தான். அந்த ஏரியாவில் ஒரு ரவுண்ட் அடித்து, பகல் உணவையும் முடித்துக் கொண்டோம். மாலை ஒரு சிறந்த இசை நிகழ்ச்சிக்கு போக திட்டமிட்டோம்; ஆனால், டிக்கெட் தான் கிடைக்கவில்லை. திரும்பியும் பொலவிஸ்டாவுக்கு ஒரு விசிட்.ஆச்சரியம்... இந்தப் பகுதி அடையாளம் முற்றிலும் மாறியிருந்தது. மக்கள் கூட்டம் குறிப்பாக மாறியிருந்தது. மக்கள் கூட்டம் குறிப்பாக, இளசுகள் கூட்டம் அலை மோதியது. நடை பாதை எல்லாம் மேஜை, நாற்காலிகள் போட்டு, பார் போல ஆக்கி, மெகாபாட்டில் பீரை விரைவாக காலி பண்ணி கொட்டியிருந்தனர். இது போக, லத்தீன் இசை மற்றும் நாட்டிய குழுக்களின் கொட்டம்; மீண்டும் உற்சாகம் தலை தூக்கியது.அங்குள்ள ஒரு உணவகத்தில் நுழைத்தோம். சிலி நாட்டு விசேஷ அயிட்டங்களை ஒரு கை பார்த்துவிட்டு, டாக்சியில் ஓட்டலுக்கு திரும்பினோம். வரவேற்பு பகுதியில் உள்ள பெரிய கடிகாரம், இரண்டு கைகளையும் சேர்த்து நள்ளிரவைக் காட்டியது.மீண்டும் மரியா, காலையில் சீக்கிரமே வந்து விட்டார். புதிய உடையில், மேக்-அப்போடு படு ஸ்மார்ட்டாக தோன்றினார். பசிபிக் கடலை ஒட்டியுள்ள இரண்டு ஊர்களுக்கு போக, ஒரு டூர் ஏற்பாடு செய்திருந்தார். கார் போகும் பாதையை சுற்றி, பரந்த திராட்சை தோட்டங்கள். சிலி நாட்டு ஒயின் வகைகள் இப்போது மிகவும் பிரபலமாகி விட்டன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கிராக்கி அதிகம். ஆகவே, புதுப்புது திராட்சை தோட்டங்களை வேகமாக அமைத்து வருகின்றனர்.ஒரு பிரபல திராட்சை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார் மரியா. பல ஏக்கரில் திராட்சை கொடிகள். நடுவில் ஒயின் உற்பத்திக்கான பல மாடிக் கட்டடம். தோட்டத்தை சுற்றி பார்த்த பின், தயாரிப்பு நிலையத்தை அடைந்தோம். புன்முறுவலோடு ஒரு இளம் பெண் எங்களை வரவேற்று, ஒயின் தயாரிப்பின் நுணுக்கமான முறைகளைப் பற்றி விரிவாக கூறினார். பெரிய, 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல்' டாங்குகளில் திராட்சை ரசம் ஊறிக் கொண்டிருந்தது. சரியான பக்குவம் அடைந்ததும், வடிகட்டி பாட்டில்களில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.'நல்ல திராட்சை பழங்களோடு, கூரிய அறிவும், தொழில் நுட்பமும் இருந்தால் தான், சிறந்த ஒயின் வகைகளை தயாரிக்க முடியும்...' என, அந்த இளம் பெண் விளக்கினார்.அடுத்த ஸ்டாப் பசிபிக் கடல் ஓரத்தில் அமைந்துள்ள, 'வால்பரைசோ' என்ற ஊர். கடலில் இருந்து பரவி உள்ள மலைகளை அரணாக கொண்டது இந்த ஊர். சிலி நாட்டில் பல மாகாணங்களில், குடியிருப்பு பகுதிகள் சீராக இருக்காது. சாண்டியாகோவில் கூட சேரிப்பகுதிகள் உண்டு. ஆனால், இந்தப் பகுதி மற்ற இடங்களை விட்டு வேறுபட்டு இருந்தது. பீச்சை ஒட்டிய ரோட்டில், பீச்சுக்கு அருகிலே இருந்த உணவகத்திற்கு சென்றோம். 'முழுக்க, முழுக்க கடல் உணவுகள் தான். காலையில் இந்த கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் தான் இவை. மிகவும் சிறந்த வகை...' என, உணவக வரவேற்பாளர் கூறினார். ஒரு பிடி, பிடித்துவிட்டு கிளம்பினோம்.கார் நெடுஞ்சாலை எண், 65ல் ஓடி சற்று, வடக்கு திசையில் உள்ள, 'வினாடெல்மார்' என்ற ஊரை அடைந்தது. இந்த ஊர் மிகவும் மாடர்னாக இருந்தது. நகைக் கடைகள் நிறைந்த, இடம் வழியாக சென்றோம். அரிய கற்கள் பதித்த, நகைகள் விற்கும் ஒரு பிரபல கடையில் நுழைந்தோம். இங்கு, நான் என் மனைவிக்காக அதிக விலை கொடுத்து, ஒரு நெக்லஸ் வாங்கினேன். அவளை அழைத்து செல்லவில்லை என்ற வருத்தத்தை போக்கி, அவள் முகத்தில் பூரிப்பை இந்த நெக்லஸ் கண்டிப்பாக கொண்டு வந்துவிடும் என்று எனக்குப்பட்டது; ஆனால், பர்சில் தான் பெரிய ஓட்டை விழுந்தது.பக்கத்தில் ஒரு அருமையான, சிறிய மியூசியம் இருந்தது. நுழைவாயிலில் வினோதமான பெரிய சிற்பம் ஒன்று இருந்தது. 'அது என்ன?' என, மரியாவை கேட்டேன். 'ஓ... அதுவா... 'மோ ஆயி என்று கூறப்படும் ஈஸ்டர் தீவின் பழங்குடி மக்களால் செதுக்கப்பட்டது...' என, விளக்கினார். 'ஈஸ்டர் தீவு, சிலியின் தென் பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்கள், 'பாலீனீசியா' தீவுகளில் இருந்து வந்தவர்கள். இன்றும், நாடோடிகளாகவே திரிகின்றனர். சிலி நாட்டு கலாசாரத்தில், இணைய மறுக்கின்றனர்...' என்றும் பல தகவல்களை உதிர்த்தார் மரியா.கேட்கவே வியப்பாக இல்லை... அதனால், எந்த ஊர் போனாலும் அங்குள்ள முக்கிய மியூசியத்தை பார்க்க மறக்காதீர்கள். அவை, அறிவு பொக்கிஷங்கள். படித்து அறிவதை விட, பார்த்து அறிவது சுலபம் தானே. டூரை முடித்துவிட்டு, அன்று இரவே சான்டியாகோ திரும்பி விட்டோம். காலை, 3:00 மணிக்கு கிளம்பி, ஏர்போர்ட் சென்று விட்டோம். மரியாவுக்கும், சிறந்த, சிலி நாட்டுக்கும், 'பை' சொல்லி, விமானத்தில் ஏறி, பொலிவியா நாட்டு தலைநகர், 'லாபாசை' அடைந்தோம்.— தொடரும்.கே. வெங்கட்ராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !