உள்ளூர் செய்திகள்

விதைத்ததும் விளைந்ததும்!

'ஒரு பிடி நெல்லை வயலில் துாவி, மூட்டை நெல்லாக அறுவடை செய்கிறோம். அதுபோல, நாம் அடுத்தவருக்குக் கொடுத்தால், ஒன்றுக்குப் பத்தாக தருவான், ஆண்டவன். அதற்காகவாவது கொஞ்சமாவது தான தர்மம் செய்யணும்...' என்பார், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அதை விளக்கும் நிகழ்வு இது:திருவிடைமருதுாரைச் சேர்ந்தவரும், சிவ பக்தியில் தலை சிறந்தவருமானவர், சிவசர்மர். தான் பிறந்ததே, அடுத்தவர்களுக்குக் கொடுப்பதற்காகத் தான் என்ற எண்ணத்தோடு, அனைவருக்கும் உதவி செய்தவர். பேதம் பார்க்க மாட்டார்.அவர் மனைவி சுசீலை, நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தவள். கணவரும் மனைவியுமாக, அடுத்தவர் பசியைத் தீர்ப்பதிலேயே கவனமாக இருந்தனர்.செல்வ வசதி மெல்ல குறைந்து, அன்றாட செலவுக்கே அல்லாடும் நிலையில் ஒருநாள், 'சுசீலை, கோவிலுக்குப் போய் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியப் பொருட்களை எடுத்து வா...' என்றார்.'சுவாமி, குழந்தைகளுக்காக என்று உள்ள பண்டங்கள் தான், கொஞ்சம் இருக்கின்றன...' என்றாள், சுசீலை.'சரி, அவைகளைக் கொண்டு வா...' என்றார், சிவசர்மர்.மனைவியிடம் இருந்து பொருட்களைப் பெற்று, கோவிலுக்கு சென்று பூஜையை முடித்துத் திரும்பினார். கையில் பிரசாதத்தாடு வந்தவரிடம், 'ஐயா, பசி தாங்க முடியவில்லை. ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்...' என்று கை நீட்டினார், முதியவர் ஒருவர்.யோசிக்கவே இல்லை, சிவசர்மர். கைகளில் இருந்த பிரசாதங்களை அப்படியே முதியவரிடம் அளித்தார். அதைச் சாப்பிட்ட முதியவர், சிவசர்மரை வாழ்த்திச் சென்றார். வீடு திரும்பினார், சிவசர்மர்.'பிரசாதங்கள் எங்கே?' எனக் கேட்டாள், மனைவி.'பசின்னு ஒருத்தர் கேட்டார். கொடுத்து விட்டேன்...' என்றார், சிவசர்மர். அந்த வேளையில் அடியார்கள் சிலர், சாப்பிட வந்தனர். 'இந்தாருங்கள், இதை வைத்துப் பொருட்கள் வாங்கி வாருங்கள்...' என்று சொல்லி, திருமாங்கல்யத்தைக் கழற்றி, கணவர் கையில் கொடுத்தாள், சுசீலை.அவரும் அதை கொண்டு போய், உணவுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வந்தார். அடியார்களுக்கு உணவு இடப்பட்டது. உண்ட அடியார்கள் வாழ்த்திச் சென்றனர். அடுத்தவர் பசிக்கு உணவளிக்கும் ஆர்வம் கொண்ட இக்குடும்பத்தை, ஆண்டவன் கை விடுவாரா? எடைக்கு எடை தங்கம் தந்து, குழந்தையை பட்டினத்தார் வாங்கியதாகச் சொல்லப்படும் வரலாற்றில் குறிப்பிடப்படுபவர், இந்த சிவசர்மர் தான். பத்தாம் நுாற்றாண்டு வரலாறு இது. நல்லவர்களை, கொடுக்கும் குணம் கொண்டவர்களை, தெய்வம் ஒருபோதும் கை விடாது என்பதை விளக்கும் நிகழ்வு இது.பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !