இன்னும் திருந்தலையே!
'கொரோனா' வைரசால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு முக்கிய இடம் உண்டு. சமூக இடைவெளியை பின்பற்றாமல், சுற்றுலா தலங்களில் கூட்டம் கூட்டமாக குவிந்ததால், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர், மக்கள். இந்த பாதிப்பிலிருந்து, இத்தாலி இன்னும் மீளவில்லை. அதற்குள், அடுத்த ஆட்டத்தை துவக்கி விட்டனர், அங்குள்ள சுற்றுலா ஏற்பட்டாளர்கள். இத்தாலியில் உள்ள முக்கிய கடற்கரைகளில், 2 மீட்டர் உயரம், 4.5 மீட்டர் அகலமுள்ள பிளாஸ்டிக் தடுப்பிலான அறையை அமைத்துள்ளனர். இந்த அறையின் மேற்புறம் திறந்திருக்கும். இதில், இரண்டு படுக்கைகள், ஒரு குடை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வரும் மக்களுக்கு, வைரஸ் பாதிப்பை தடுக்க, இந்த ஏற்பாடாம். போதிய இடைவெளியில், ஏராளமான தடுப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 'கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், இந்த அறையில் தங்கி, விடுமுறையை உற்சாகமாக கொண்டாடலாம். அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த அறைக்கு கணிசமான கட்டணம் வசூலிக்கப்படும்...' என, அறிவித்துள்ளது, நுவா என்ற, இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம்.'இவ்வளவு அவஸ்தைபட்டும், இத்தாலிக்காரங்க திருந்திய மாதிரி தெரியவில்லை...' என, கவலைப்படுகின்றனர், மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள். - ஜோல்னாபையன்