உள்ளூர் செய்திகள்

வெற்றி தரும் வேழமுகம்!

செப்., 1 - விநாயகர் சதுர்த்தி!புதுக்கணக்கு எழுதும் போதோ, திருமண அழைப்பிதழ்கள் அச்சிடும் போதோ, கடிதம் எழுதும் போதோ, மளிகை சாமான் லிஸ்ட் போட்டாலும் கூட, பிள்ளையார் சுழியான, 'உ' போட்டு துவங்குகிறோம். எதற்காக இந்த சுழியை இட வேண்டும்... இந்த ஒற்றை எழுத்துக்குள், அப்படி என்ன மகிமை ஒளிந்து கிடக்கிறது?'சுழி' என்றால், 'வளைவு!' 'வக்ரம்' என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால், அவரை, 'வக்ரதுண்டர்' என்றும் அழைப்பதுண்டு. பிள்ளையார் சுழியை, 'உ' என எழுதும் போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது; வட்டத்திற்கு முடிவு கிடையாது. அதன் மேல் ஒரு பென்சிலை வைத்து வரைந்து கொண்டே இருந்தால் முடிவே இராது; விநாயகரும் அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். இன்னும் ஒன்றும் சொல்வர்... வட்டம் என்பது இந்த <பிரபஞ்சம். இதற்குள் பலவித உலகங்களும், வான மண்டலமும் அடங்கியுள்ளன. அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையே தான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்றும் வியாக்கியானம் செய்வதுண்டு.'உ' எனும் சுழியில் வட்டத்திற்குப் பிறகு, ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், 'ஆர்ஜவம்' என்பர். இதற்கு, 'நேர்மை' எனப் பொருள். 'வளைந்தும் கொடு, அதே சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதே...' என்ற அளப்பரிய தத்துவத்தை இந்த சுழி கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த உலகத்தை எடுத்துக் கொள்வோம்... அது, வட்ட வடிவில் இருக்கிறது. மேஜையில் வைக்கும் உலக உருண்டையை ஒரு நேரான அச்சில் பொருத்தியிருக்கின்றனர். நிஜ உலகம் சுற்றுவதற்கு அச்சு இல்லை என்று அறிவியல் சொன்னாலும், நேரான நிலையிலுள்ள அச்சு, நம் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தியின் வடிவில் இருக்க வேண்டும். எனவே, வட்டமான இந்த <உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பிள்ளையார் சுழியிலுள்ள நேர்கோடு போல, நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்று இந்தச்சுழி நமக்கு அறிவுறுத்துகிறது.ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவங்கும் போது, 'உ' என மேலே எழுதி கீழே, 'லாபம்' என எழுதுவர்; அதாவது, 'இதில் கிடைக்கப் போகும் லாபம், நேர்வழியிலானதாக இருக்கட்டும்...' என்பதே இதற்குப் பொருள்.விநாயகருக்கு யானை முகம். 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்...' என்ற பழமொழி உண்டு. எல்லாரும், அதன் தந்தத்தின் மதிப்பைப் பொறுத்து, இப்படி ஒரு பழமொழி வந்திருக்கலாம் என நினைப்பர்; ஆனால், காரணம் அதுவல்ல. விநாயகர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், தன் தந்தத்தை ஒடித்து எழுதிய மகாபாரதம் எனும் அற்புதக் காவியம், இன்றைக்கு ஆயிரம் பொன் என்ன... கோடி பொன் கொடுத்தாலும் கூட கிடைக்காது. இதை வைத்து தான் இப்படி ஒரு பழமொழியே உருவானது. இந்த உலகத்திலேயே பெரிய நூல் மகாபாரதம் தான். லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன. மிக வேகமாக எழுதப்பட்ட நூலும் இதுவே.மாணவர்களின் இஷ்ட தெய்வம் விநாயகர். குறிப்பாக, தேர்வு காலத்தில், 'பிள்ளையாரப்பா... நான் அதிக மார்க் வாங்க அருள் செய்; சிதறுகாய் உடைக்கிறேன்...' என வேண்டுவர். அவரது அருளைப் பெற, இன்னொரு எளிய வழியும் இருக்கிறது. உங்கள் பாடங்களையோ, தேர்வையோ எழுதத் துவங்கும் முன், மனதிற்குள் மூன்று முறை, 'ஸ்ரீகணாதிபதயே நமஹ' என்று சொல்லி விட்டு ஆரம்பியுங்கள். அந்த வேழமுகத்தான் தங்கு தடையின்றி எழுதி முடிக்கும் சக்தியையும், சிறப்பான வெற்றியையும் அருள்வார்.விநாயகர் வழிபாடு மிகவும் எளிமையானது. சதுர்த்தியன்று உங்கள் இல்லங்களை அலங்கரியுங்கள். ஒரு இலையில் மோதகம், பொரி, அவல், கடலை படைத்து நைவேத்யம் செய்யுங்கள். விநாயகர் சிலை அல்லது படத்துக்கு அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலை போதும். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், அவரைப் போலவே எளிமையையும், நேர்மையையும் கடைபிடிக்க உறுதியெடுப்போம்.***தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !