உள்ளூர் செய்திகள்

நரகாசுரன் கட்டிய கோவில்!

தீபாவளி நாயகனான, நரகாசுரன், கொடுமைக்காரனாக இருந்தாலும், அவனும் ஒரு கோவில் கட்டியிருக்கிறான். அதுதான், அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியிலுள்ள, திஸ்பூர், காமாக்யா தேவி கோவில். அப்போது, கவுகாத்தியின் பெயர், பிராக்ஜோதிஷபுரம் என இருந்தது. இதற்கு, ஒளி நகரம் என பொருள்.விஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன், நரகாசுரன். பெற்றோர் யார் என தெரியாத இவனை, விதேஹ நாட்டு மன்னர், (தற்போதைய பீஹார்) ஜனகர் வளர்த்தார். இவன், காமாக்யா தேவியின் பக்தனாக விளங்கினான். கிராடர்கள் என்ற இனத்தவருடன் போரிட்டு, பிராக்ஜோதிஷபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். தவம் செய்த அவன், பிரம்மாவிடம், 'என் தாய் தவிர, வேறு யாரும் என்னை கொல்ல முடியாது...' என்ற வரம் பெற்றான்.விதிவசத்தால் பாணாசுரன் என்பவனுக்கு நண்பனானான். அவன், நரகாசுரனை, பெண் பித்தனாகவும், பெரும் குடியனாகவும் மாற்றினான். மேலும் அவனிடம், 'உன்னைக் கொல்ல யாருமில்லை என்பதால், நீ கடவுளுக்கு சமமானவன் ஆகிறாய். நீ வணங்கும் காமாக்யா தேவி, எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார்த்தாயா... அவளை, நீ திருமணம் செய்து கொண்டால், அம்பாளின் கணவன் ஆகிவிடுவாய். அதன்பின் உன் சக்தி இன்னும் பெருகும்... உன் கீர்த்தி அதிகமாகும்...' என்று, துாபம் போட்டான்.நரகாசுரன் மனதிலும் ஆசை துளிர்விட, காமாக்யா தேவியிடம் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டான். அவள் தந்திரமாக, 'எனக்கு, ஒரே இரவில், நீ கோவில் கட்டு; உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்...' என்றாள். அவன் கோவில் கட்ட ஆரம்பிக்கவும், விடிந்ததற்கு அடையாளமாக, நள்ளிரவிலேயே சேவலை கூவச் செய்தாள், காமாக்யா. வேலையை நிறுத்தி விட்டான், நரகாசுரன். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, காமாக்யா கோவிலுக்கு பக்தர்கள் செல்வதைத் தடுத்தான்.காமாக்யா கோவிலுக்குள் ஒரு குகையும், அதில், 10 படிக்கட்டுகளும் உள்ளன. உள்ளே இருளாக இருக்கும். விளக்குகள் இல்லை என்பதால் தட்டுத்தடுமாறி, பாதாளத்தில் இறங்கி, அம்பாள் சன்னிதியை அடையலாம். அங்கு, ஒரே ஒரு விளக்கு எரிகிறது.ஆண்டுக்கு மூன்று நாள், தேவி, வீட்டு விலக்காவதாக ஐதீகம். இந்நாளில், அம்பாள் பீடத்தில் இருந்து சிவப்பு நிற தண்ணீர் வெளியேறும். அந்நாட்களில் கோவில் மூடப்படும். கோவிலுக்குள் கிருஷ்ணர், பைரவர், மானஸாதேவி, காமேஸ்வரர், காமேஸ்வரி சிற்பங்கள் உள்ளன.கவுகாத்தியில் இருந்து, 12 கி.மீ., கடந்தால், பிரம்மபுத்திரா கரையிலுள்ள வசிஷ்டர் ஆசிரமத்தை அடையலாம். படகுகளில், நதியை கடந்தால், நீலாசல் மலையிலுள்ள கோவிலை அடையலாம்.தொடர்புக்கு: 0361 - 273 4624. தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !