பத்து மாதங்களும், இருபது வருஷங்களும்!
கலிபோர்னியாவிலிருந்து - சென்னைக்கு, 18 மணி நேர இடைவிடாத பயணம். 10 ஆண்டுகளில், இரண்டு முறை பயணம் செய்தபோது, மனதில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் இருந்தன. அம்மா- - அப்பாவை, பழைய உறவினர் மற்றும் நண்பர்களை பார்க்கலாம் என்ற உற்சாகம் இருந்தது. ஆனால், இப்போது...விமானத்தின் ஜன்னல் வழியே மிதந்து செல்லும் மேக கூட்டங்களை பார்த்துக் கொண்டிருந்த, கபிலனின் நெஞ்சு கனத்திருந்தது. நெஞ்சு வலி என்று போன, அம்மா திலகத்தின் உடலில் ஒளிந்திருந்த பல வியாதிகள், ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரத் துவங்கி, அவளை மரணத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது. அப்பாவுக்காவது பல விஷயங்களில், 'முணுக்'கென்றால் கோபம் வரும்... அம்மாவின் முகத்தில், சினத்தின் சாயலே படிந்ததில்லை. அன்பு செலுத்துவதை தவிர வேறெதுவுமே தெரியாதே... அவளின் மலர்ந்த முகத்தை நினைக்கையில், நெஞ்சு வலித்தது. அவனையும் அறியாமல், கண்ணீர் பெருகியது.பொறியியல் முடித்த பின், எம்.எஸ்., படிக்க, அமெரிக்காவில் உள்ள, கலிபோர்னியா பல்கலை செல்ல, அம்மா தான், பக்க பலமாக நின்றாள்; அப்பாவுக்கு விருப்பமில்லை. 'வெளிநாடு சென்று, மேலே படித்தால், அவன் எதிர்காலத்திற்கு நல்லது தானே... நீங்க தடுக்காதீங்க... பிள்ளை எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்...' என்று, அப்பாவிடம் வாதாடி வெற்றி பெற்றவள்.'என்னை விட்டு உன்னால் இருக்க முடியுமா...' என்று கேட்டபோது, அம்மாவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.'நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும், கபில். இப்ப தான், 'ஸ்கைப், வாட்ஸ் - ஆப், கூகுள் டாக்' என்று எத்தனையோ இருக்கே... உன்னோடு வாரா வாரம் பேசிக்கிட்டு இருக்கப் போறேன்...' என்றாள்.பாசத்தால் பிள்ளைகளை கட்டிப்போடும் மற்ற அன்னையரை போல் அல்ல, திலகம். எது நல்லது, எது கெட்டது என்று, சிந்தித்து செயல்படுபவள்.'கட்டாயம் வந்துடு, கபில்... கடைசியாக உன்னை பார்க்க வேண்டும்...' என்று சொல்லி திலகம், குலுங்கி அழுதபோது, கண்ணீரை அடக்க முடியவில்லை, கபிலனால்.ஆனால், கிளம்பும் முன், 'வாட்ஸ் - ஆப்'பில் பார்த்த, அம்மாவின் முகம் வேறு. முகம் முழுவதும் சோகம் நிறைந்திருந்தது.'ஒரு வாரம் தான், டாக்டர் சொல்கிறார்... நம்பிக்கை இல்லை... நீ புறப்பட்டு வந்துடு...' என்று, சொல்லி விட்டார், அப்பாவும்.பள்ளி பருவம், கல்லுாரி நாட்கள், சுற்றுலா, அம்மாவுடன் பேசி, சிரித்த நாட்கள், பார்த்த திரைப்படங்கள், செய்த விவாதங்கள் என்று, ஏதேதோ தொடர்பில்லாத நினைவுகள் முட்டி மோதின.கபிலின் அப்பாவுக்கு, கார் டிரைவராக இருந்தவன், கதிர். அவர்கள் வீட்டில் வெகு நாட்களாக வேலை செய்கிறான். அவனை அழைத்து செல்ல, விமான நிலையத்திற்கு வந்திருந்தான். வெளிறிப்போன முகத்துடன் வந்த, கபிலனை பார்த்து, கையசைத்தபடி அருகே வந்தான், கதிர்.''உங்களை, நேரா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரச் சொன்னார், அப்பா,'' என்றான். அவன் முகத்திலும் கலக்கம் வெளிப்படையாக தெரிந்தது. கதிருக்கும், அன்னையாக தான் இருந்தாள், திலகம். எதுவும் பேசாமல் காரில் ஏறினான்.சென்னையின் நெரிசல் பயணத்தை கடந்து, ஐந்து நட்சத்திர ஓட்டல் போல இருந்த அதிநவீன மருத்துவமனையை அடைந்தனர். படுக்கையில் பல உபகரணங்களுடன் இணைக்கப்பட்டு, அவனுக்காகவே உயிரை காப்பாற்றிக் கொண்டிருந்த, திலகத்திற்கு, கபிலனின் முகத்தை பார்த்ததும், தாங்க முடியாத துக்கம் பீறிட்டது.கண்களில் கண்ணீரும், குரலில் விம்மலும், ஏதேதோ சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்று மனதில் எண்ணங்கள் தோன்றிய போதும், வார்த்தைகள் வரவில்லை. அப்போது தான் அவன் பார்வை, தந்தை பக்கம் திரும்பியது.அவர் அருகே, அம்மாவின் வயதில், சோகம் நிறைந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தாள், ஓர் பெண்மணி. யார் என்று தெரியவில்லை. அவளை, அதற்கு முன் பார்த்த நினைவுமில்லை.அதற்குள், உதடுகள் லேசாக பிரிந்து, திலகத்தின் கண்கள் திறந்தன. சோர்ந்து போயிருந்த முகத்தில் ஓர் அசாதாரண மலர்ச்சி. ''கபில்... வந்துட்டியா?'' குரல் மெதுவாக, தடுமாற்றத்துடன் வெளிப்பட்டது.''ஆமாம்மா... வந்துட்டேன்... ஏனம்மா இப்படி ஆனாய்?''மேலே பேச முடியாமல், கபிலனுக்கு தொண்டை அடைத்தது. கண்ணீரும், விம்மலும் மடைதிறந்தாற் போல் வந்தன.''அம்மா... அம்மா,'' என்று, அவள் கைகளை பற்றி, தன் முகத்தில் வைத்து அழுதான். கணவர் பக்கம் திரும்பி, கண்ணால் சைகை காட்ட, அவருடன், அந்த பெண்ணும் வெளியே சென்றாள்.''கபில்... இப்போ உன்னிடம், நான் ஓர் உண்மையை சொல்ல போறேன்,'' என்றாள், திலகம்.புரியாமல், ''என்ன உண்மை?'' என்றான்.''நீ, என் வயிற்றில் பிறந்த பிள்ளை இல்லை.'' வானத்தில், திடீரென ஓர் இடி இடிக்கும் ஓசை கேட்டது. அந்த ஒலி, கபிலனின் மனசிலும் கேட்டது.''என்னது... வாட், நான்சென்ஸ்?''''நிஜம் தான், கபில்... அப்பாவின் அருகில் ஒரு பெண் நின்றிருந்தாளே... கவனித்தாயா... அவள் தான், உன்னை பெற்றெடுத்த தாய்.''என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, கபிலனுக்கு.''திருமணமான சில நாட்களிலேயே, எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது; என்னால் குழந்தையை பெற்றெடுக்க முடியாது என்று, டாக்டர்கள் கூறி விட்டனர். இந்த செய்தி, எங்களுக்கு ஒரு பெரிய இடியாகவே இருந்தது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் வசதிகள் வந்த காலம் அது...''ஒரு டாக்டரின் கண்காணிப்பில், வேறொரு பெண்ணின் கருவில் உருவான பிள்ளை நீ... உன்னை சுமந்து பெற்றது, நானல்ல; உன் அப்பாவுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாளே, அவள் தான், உன்னை சுமந்த தாய்.'' திலகத்திற்கு, மூச்சு வாங்கியது.திகைப்புடன் அமர்ந்திருந்தான், கபிலன். இந்த செய்தி, ஓர் அதிர்ச்சியாக இருந்தபோதிலும், சமீப காலமாக பிரபலமாகி வரும் இந்த முறை பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததால், சாதாரணமாக எடுத்துக் கொண்டான். இருந்தாலும், எந்த ஒரு வித்தியாசமான விஷயமும் நமக்கென்று வரும்போது, அதில் ஓர் எதிர்பாராத பாதிப்பு இருப்பதை தவிர்க்க முடியாது.கபிலனுக்கும் அந்த உணர்வு தான் ஏற்பட்டது.''சரிம்மா... அதற்கென்ன இப்போ... என்னிடம், இத்தனை ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன?'' என்றான்.''இருக்கிறது... அதை, உன் அப்பாவும், ஆனந்தியும் சொல்வர்,'' என்ற திலகம், கண்களை மூடினாள்.அதற்குப்பின், திலகத்தின் கண்கள் திறக்கவில்லை.இடையில், அவன் தந்தையும், ஆனந்தியும், அந்த விஷயம் பற்றி, அவனுடன் ஏதும் பேசவில்லை. திலகத்தின் இறுதி காரியங்கள் முடிந்து, கபிலன், யு.எஸ்., திரும்ப வேண்டிய நாள் வந்தது.''கபில்... என் அறைக்கு வா... முக்கிய விஷயம் பேச வேண்டும்,'' என்றார், அப்பா.சற்றும் தயக்கமின்றி, ''அம்மா பத்தின விஷயம்தானே அப்பா?''''ஆம்... ஆனால், அதில், அம்மா சொல்லாமல் விட்டுப்போன பகுதி இருக்கலாம். அதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்,'' என்றார்.''நான், 'வாடகை தாய்' மூலம் பிறந்தவன் தானே... ஆனந்தி மேடம் தானே, அந்த வாடகை தாய்... நான் பேசலாமா அப்பா?'' என்றான்.''ம்!'' என்றார்.''உங்களை, ஒரு கேள்வி கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அது அநாவசியம் என்று தோன்றுகிறது... இருந்தாலும், மனசில் பட்டதை சொல்கிறேன்... ''அம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்த பின், நீங்கள், தானாகவே ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு, இந்த ஆனந்தியின் உறவு மற்றும் என் பிறப்பு அப்படித்தானே?'' என்றான்.''இல்லை.''''பின்?''''ஆனந்தியின் குடும்பம், மிக வறுமையில் இருந்ததால், டாக்டரின் சிபாரிசின் படி தான், வாடகை தாயாக அமர்த்தப்பட்டாள். அவள் கருவுற்ற பின்னரும், குழந்தை பிறந்த பின்னரும் எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது என்பது ஒரு கட்டுப்பாடு... ஆனால், அதையும் மீறி, ஆனந்தி கருவில், நீ இருந்த காலத்திலேயே சந்திக்க துவங்கினேன்...''ஒரு சந்தர்ப்பத்தில், இந்த விஷயம், உன் அம்மாவுக்கு தெரிய வந்தது. அதைக் கேட்டதும், நாள் முழுதும் என்னுடன் பேசவில்லை; அழுது கொண்டிருந்தாள். என் சமாதான வார்த்தைகள் எதற்கும் பதில் தரவில்லை. ''மறுநாள், அவள் மனதில் என்ன தோன்றியதோ, 'எக்காரணம் கொண்டும், இந்த விஷயம், உனக்கோ, பிறருக்கோ தெரியக் கூடாது...' என்று, என்னிடம் சத்தியம் வாங்கி கொண்டாள். நான், அதற்கு ஒப்புக்கொண்ட போதிலும், ஆனந்தியின் உறவை என்னால் துண்டிக்க முடியவில்லை. அதுவும், திலகத்திற்கு தெரியும்.''திடீரென்று அவள் உடல்நிலை கெட்டு, மரணம் நெருங்கிய போது தான், ஆனந்தியை அழைத்து வரச்சொல்லி, உன்னிடம், இந்த உண்மையை சொல்ல முடிவு செய்து விட்டதாக கூறினாள். நீ இனிமேல், ஆனந்தியை உன் தாயாக ஏற்க வேண்டுமென்பது தான், அவள் இறுதி ஆசை,'' என்றார்.''இதற்கு, நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''''நீ, இப்போது வளர்ந்த ஆண். வெளிநாட்டில் இருப்பவன். உன் இஷ்டம் எதுவோ, அந்த முடிவை ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றார், அப்பா.''இப்போது என் முன் உள்ள கேள்வி புரிகிறது. இதுநாள் வரை பார்க்காத, பேசாத, பழகாத, ஆனந்தி என்ற பெண்மணியை என் தாயாக ஏற்க வேண்டும் என்பது... அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று: அவர், என்னை, 10 மாதம் சுமந்து, பெற்றவர்; மற்றொன்று: அவர், உங்கள் மனைவி.''ஆனால், இன்று, இந்த இரண்டு உறவுகளுமே எனக்கு சம்பந்தமில்லாதது. ஆனந்தி, என்னை சுமந்தது, 10 மாதம் தான்; ஆனால், அம்மா என்னை சுமந்தது, 20 ஆண்டுகள்; வயிற்றில் இல்லாமல் இருக்கலாம். மனதில், அறிவில், தொடர்பில், ஆசையில், பாசத்தில் மற்றும் கோபத்தில் என்று பலவிதங்களில், நான் உருவாக காரணமாக இருந்தது, திலகம் என்ற பெண்மணி தான்...''நான் யார், எப்படி, குணம் என்ன, எனக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது போன்ற எதுவுமே தெரிந்திருக்காது, ஆனந்திக்கு. ஒருவேளை, நீங்கள் சொல்லி தெரிந்திருக்கலாம். அப்படியே இருந்தாலும், அதில் நேரிடையாக அனுபவமோ, தொடர்போ கிடையாது...''ஒரு தாய்க்கு பல குழந்தைகள் இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தைக்கு, இரண்டு தாய்கள் சாத்தியமில்லை. என்னைப் பொறுத்தவரை, அம்மா என்பது, ஒரு தனி உறவு; அது, ஒரு குழந்தையை சுமந்து பெறுவதால் மட்டுமே வர முடியாது.''என் வாழ்க்கையில், துண்டிக்கப்பட்ட தொப்புள் கொடியுடன், அந்த உறவு முடிந்து விட்டது. அதனால், ஆனந்தியை தாயாக ஏற்றுக்கொள்ளும்படி, தயவுசெய்து, என்னை நிர்ப்பந்தப்படுத்தாதீர். மனைவி என்ற உறவு வேறு. அதை நிர்ணயம் செய்வது இருவர்; ஒருவர் இல்லை. ''உங்கள் இருவர் மத்தியிலும் ஏதோ ஒரு பிடிப்பும், கவர்ச்சியும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்திருக்க வேண்டும். அதனால் தான், அந்த பழக்கம், 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது, உங்களின் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட நான் தயாரில்லை; எனக்கு உரிமையுமில்லை,'' என்ற, கபிலனின் பேச்சு தெளிவாக இருந்தது. அறையை விட்டு வெளியே வரும்போது, கதவருகில், ஆனந்தி நின்று கொண்டிருப்பதை பார்த்தான், கபிலன். அவளை பார்த்து, ஒரு புன்னகையுடன், ''ஹாய்... ஆன்டி,'' என்று கூறி, தன் அறையை நோக்கி நடந்தான், கபிலன்.தேவவிரதன்