உள்ளூர் செய்திகள்

அந்த ஐநூறு ரூபாய்!

பஸ் திருவெறும்பூரை தாண்டிய போதுதான், முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பிரவீண்குமாரைப் பார்த்தான் ஹரி.''நீங்க... பிரவீண்தானே?'' கொஞ்சம் சந்தேகத்துடன், அவன் தோளில் கை வைத்துக் கேட்டான்.''டேய் ஹரி நீயா... நான் கவனிக்கவே இல்லைடா, எங்க இருந்து வர்ற?”''நான், தஞ்சாவூர்லயே பஸ் ஏறிட்டேன்.”''நானும் தஞ்சாவூர்லதான் ஏறினேன். எங்க இந்த பஸ்லதான் பாட்டையும், படத்தையும் போட்டு கொல்றாங்களே. சரி எப்படி இருக்க ஹரி... என்ன செய்ற?''''பெல்'ல ஒரு காண்ட்ராக்ட் ஒர்க்... இன்னும், இரண்டு வருஷத்துக்கு ஓடும். மினிஸ்டரை புடிச்சி வாங்கினோம். நீ என்ன செய்ற பிரவீண்?''''குரூப்--டூவுல பாஸ் செய்து, திருச்சி கலெக்டர் ஆபீஸ்ல, ரெவின்யூ அசிஸ்டென்ட். இன்னும் ரெண்டு, மூனு வருஷத்தில ரெவின்யூ இன்ஸ்பெக்டர் புரமோஷன் கிடைச்சிடும்.”''கல்யாணம் ஆயாச்சா... குழந்தைங்க?''''ஒரு பையன் எல்.கே.ஜி., போறான். உனக்கு?''''போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு. கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கோம்.”''நம்ம நண்பர்கள் கூட கான்டாக்ட் இருக்கா... ஜனா, எப்படி இருக்கான்?''கல்லூரியைப் பற்றிய பேச்சு வந்தவுடன், சடாரென்று, பிரவீண், தனக்குத் தர வேண்டிய ஐந்நூறு ரூபாய் ஞாபகத்திற்கு வந்தது ஹரிக்கு.அந்த ஐந்நூறு ரூபாய்க்குப் பின்னால், ஒரு கதையே விரிந்தது.பிரவீணும் - ஹரியும் கல்லூரி நண்பர்கள். பூண்டி கல்லூரியில்தான், இருவரும் ஒன்றாகப் படித்தனர். ஒரே கோர்ஸ் என்றாலும், இரண்டு பேரும் படிப்பில், நேர் எதிர்.பிரவீண் சர்வ சாதாரணமாக, தொண்ணுாறு மார்க் வாங்குகிற பாடங்களில் எல்லாம், ஹரி ஜஸ்ட் பாஸ். அதுவும் தட்டி தடுமாறித் தான் தேறுவான்.'பீரவீண் எப்போதும் உன் கூடவே சுத்தறான். ஆனா, எக்ஸாம் டயத்துல உன்னை கழட்டிவிட்டு, அவன் மார்க்கை அள்ளிட்டு போயிடறான். அவன் நல்ல மார்க் எடுக்கட்டும், வேண்டாம்ன்னு சொல்லல. ஆனா, நீ படிக்கறதுக்கும், கொஞ்சம் உதவி செய்லாம்ல...'ஹரியின் நண்பர்கள், இப்படித்தான் அவனை அடிக்கடி உசுப்பேத்தி விடுவர்.'நாங்க ஏதோ தப்பா அட்வைஸ் செய்றதா நினைக்காத மச்சான். நீ எப்பயுமே 'கரணம் தப்பினா மரணம்' ங்கிற மாதிரிதான், ஒவ்வொரு செமஸ்டர்லயும் பாஸ் செய்ற. இது பைனல் இயர் வேறு. பிரவீண் உனக்கு, ஏதாவது ஸ்டடி மெட்டீரியல்ஸ் கொடுத்து, உதவி செய்யலாம்ல...' என்றனர்.''என்னப் பொறுத்த வரைக்கும், நான் அதிக மார்க் வாங்கணும்ன்னு நினைக்கலடா... ஜஸ்ட் பாஸ் செய்தா போதும். வெறும் மார்க்கை வச்சிகிட்டு, நாக்கு கூட வழிக்க முடியாது. திறமைங்கறது பர்பாமென்ஸ்லதான் இருக்கு...''மார்க் எடுக்க முடியலன்னாலும், நல்லா பேசறடா; நீயெல்லாம் நல்லா வருவடா...' என்று, அசோக் கிண்டலடித்ததும், கோபம் வந்துவிட்டது ஹரிக்கு.'ஏய்... என்னால படிக்க முடியாதுன்னு நெனைக்கறியா?' என்று, அசோக்கின், நெஞ்சில் கைவைத்து தள்ளியபடி கேட்டான் ஹரி.'ஏய் என்னடா ரொம்பத் தான் சிலுப்பற! நீ என்னை விட மார்க் எடுத்துருவியா?'அந்த கூட்டத்திற்குள், திடீரென்று நுழைந்தபடியே கேட்டான் பிரவீண்.'என்ன பிரவீண்... சேலஞ்ச் செய்றியா? என்னால முடியாதுன்னு நினைக்கறியா? நீ நைன்ட்டி ரேஞ்ச்லதான் மார்க் எடுக்கற. நானெல்லாம் களத்துல இறங்கிட்டா, சென்டம் போடுவேன். என்ன போட்டிக்குத் தயாரா?'ஹரி, பேசுவதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை பிரவீண் .'சரிடா மாப்ள... மேக்ரோ எக்கனாமிக்ஸ் பேப்பர் தான் இருக்கறதுலயே ஈசியான பேப்பர்; போற போக்குல ஊதித் தள்ளிடலாம். அந்த பாடத்துல சென்டம் வேணாம்... நான் எடுக்கற மார்க்கை விட, ஒரு மார்க் அதிகமா எடுத்துட்டா, நான் உனக்கு ஐநூறு ரூபா கொடுத்துடறேன். இல்லைன்னா நீ எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்திடணும். டீல் ஓ.கே. வா?''சரிடா. சேலஞ்ச் சேலஞ்சாவே இருக்கட்டும்; மேக்ரோ எகனாமிக்ஸ் பேப்பர்ல, நான் சென்டம் அடிச்சுக் காட்டறேன். ஐந்நூறு ரூபாய் ரெடி செய்து வச்சிடு...''மாப்ள... நீ தான் ஐந்நூறு ரூபாய ரெடி செய்யணும். இல்லைன்னா, உன் கழுத்துல கிடக்கிற செயின் காணாம போயிடும் பாத்துக்க...'மறுபடியும் நக்கலாகச் சிரித்தான் பிரவீண்.ஹரி இப்படி ஒரு சவாலுக்கு ஒத்துக்கொள்வான் என்று, யாருமே எதிர்பார்க்கவில்லை. 'நாற்பது மார்க் எடுக்கறதுக்கே, அவனுக்கு நாக்குத் தள்ளிடும். இவனுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க்...'கொஞ்சம் வருத்தமாக பேசினான் கார்த்தி.'உண்மைதான்டா... ஹரி செயினை அடகு வைக்கிறதுக்கு ரெடியாயிட்டான். சேலஞ்ச் செய்யுறதோட சரி; அவன் நிச்சயமா புக்கை தொட மாட்டான். அவனுக்கு அவன் ஆளு கூட சுத்தவே நேரம் இருக்காது...'தன் பங்குக்கு ஊதிவிட்டான் அசோக்.'ஆனாலும், ஹரியை சாதாரணமா நெனச்சுடாத மச்சான். போட்டின்னு வந்துட்டா, அவன் நெருப்பா மாறிடுவான். எனக்கென்னமோ அவன் வீராட் கோலி மாதிரி விஸ்வரூபம் எடுப்பான்னு தோணுது...''விடு மச்சான்; எவன் ஜெயிச்சாலும் பார்ட்டி நமக்குத்தான். நாம எதுக்கு தேவையில்லாம பஜனை செய்துகிட்டு, அதோ உன் ஆளு வந்துட்டா, போய் கொஞ்ச நேரம் கடலையைப் போடு; நான் கௌம்புறேன்...' என்றான் ஒருவன்.யாருமே எதிர்பார்க்காத வகையில், ஹரி, அந்த செமஸ்டரில் மேக்ரோ எக்கனாமிக்ஸ் பேப்பரில் சென்டம் வாங்கயிருந்தான். இத்தனைக்கும், அந்த தடவை மேக்ரோ எக்கனாமிக்ஸ் பேப்பர் கஷ்டம் என்றும், சில கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் பேசிக் கொண்டனர்.'டேய்... நீ ஏதோ மால்பிராக்டிஸ் செய்திருக்க. யூனிவர்சிட்டி அளவுல, இந்த பேப்பரோட ஆவரேஜ் மார்க்கே வெறும் அறுபத்தஞ்சு. நீ எப்படிடா நூறு மார்க் எடுத்த?'சண்டை போடாத குறையாக ஹரியைக் கேட்டான் பிரவீண்.'போட்டின்னு வந்துட்டா, நான் புலியா மாறிடுவேன் பிரவீண். இந்த மூணு வருஷத்தில், நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லையா? என் வீட்டுக்கு வந்து பாரு. எத்தனை புக்ஸ், லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்து, குறிப்பு எடுத்திருக்கேன்னு... அப்ப தெரியும் உனக்கு...''இல்ல ஹரி, நீ என்னை சீட் செய்ற, நான் நம்ப மாட்டேன்...'பிரமை பிடித்தவன் போல் பின் வாங்கினான் பிரவீண்.'உன்னால பணம் கொடுக்க முடியலன்னா விட்டுடு பிரவீண். ஆனா, என்னோட கடின உழைப்பை நீ சந்தேகப்படாத. வேண்ணா அடுத்த செமஸ்டர்ல, இன்னொரு பேப்பர் வச்சுக்குவோம்; அதிலயும் சென்டம் அடிச்சுக் காட்டறேன். நீ என் கூடவே இருந்து பாரு...''நீ பேப்பர் சேஸ் செய்திருக்கேன்னு நினைக்கிறேன் ஹரி..''பீரவீன் மனசாட்சிய தொட்டுச் சொல்றேன். நான் நியாயமா ஜெயிச்சிருக்கேன்; நீ தோத்திருக்க. எல்லாருக்கு முன்னாடியும், இதை பெருமையா ஒத்துகிட்டு, ஐந்நூறு ரூபாயக் கொடுத்திடு. எல்லாருமே ஸ்வீட் எடு, கொண்டாடுன்னு கொண்டாடிடலாம்...'பிரவீண் எதற்குமே பிடி கொடுக்காமல் போய்விட்டான். அதன் பின், கோர்ஸ் முடியும் வரை, பேசக்கூட இல்லை.அன்று, அதோடு போனவர்கள் தான், இன்று மறுபடியும் சந்திக்கின்றனர்.'அதை ஞாபகப்படுத்தி, இப்போது பிரவீணிடம் பேசலாமா... மனசாட்சி உறுத்தி, அவனாகவே, அந்த ஐந்நூறு ரூபாயை இன்று கொடுத்து விடுவானா...' என்று, தனக்குள் கேட்டுக் கொண்டான் ஹரி .ஒரு வேளை, அந்தக் குற்ற உணர்வை மறைப்பதற்குத்தான், அவன் கண்டும் காணாமல், முன் பக்க சீட்டில் உட்கார்ந்திருந்தானோ!''வாழ்க்கைல எப்படியெல்லாம் ஆச்சர்யங்கள் நடக்குது பார் பிரவீண். இன்னைக்கு நான், உன்னை சந்திப்பேன்னு நினைக்கவே இல்லடா.”''எஸ் ரியலி ஹரி. உன்னை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம்; பீ... இன்... டச்.''''பிரவீண்... பால் பண்ணை ஸ்டாப் வந்திடுச்சு. நான் இறங்கணும்; எனக்கு உன்னோட நம்பர் வேணுமே... என்னோட மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சி, ஒரு சின்ன பேப்பர்ல எழுதித் தர்றியா?”''ஓ... கண்டிப்பா கால் செய்யணும் ஹரி.”தன் சட்டைப் பையிலிருந்து, சின்ன துண்டுப் பேப்பரை எடுத்து, நம்பர் எழுதிக் கொடுத்தான் பிரவீண்.ஹரி பஸ்ஸை விட்டு இறங்கிய பின்தான், அந்த ஐந்நூறு ரூபாயை, அவனிடம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது பிரவீணுக்கு.'நியாயமாக படித்து தான் முழு மதிப்பெண் எடுத்திருக்கிறான் ஹரி. விசாரித்த வகையில், அந்த செமஸ்டர் தேர்வெழுதும் போது, பல நாட்கள் இரவும் பகலுமாக படித்தான் என்றுதான், எல்லாருமே சொன்னார்கள். அவனிடம் ஐந்நூறு ரூபாயை கொடுத்திருக்க வேண்டியதுதான் முறை. இன்றைக்காவது கொடுத்திருக்கலாம்... ஏன் எனக்கு மனசு வரவில்லை...' என்று நினைத்த போது, பிரவீணுக்கு உள்மனசு உறுத்தியது.''செக்கர் கீழ நிக்கறார். எல்லாரும் டிக்கெட்டை கையில எடுத்துகிட்டு இறங்குங்க,'' என்று கண்டக்டர் கத்தினார்.படியில் இறங்கிக்கொண்டே டிக்கெட்டை தேடியபோது, அதிர்ந்து போனான் பிரவீண்.டிக்கெட்டைக் காணவில்லை.பர்ஸ், பேண்ட் பாக்கெட், சர்ட் பாக்கெட் என்று, எங்கு தேடியும் கிடைக்கவில்லை.ஹரி போன் நம்பர் கேட்ட போது, அவசர அவசரமாக பஸ் டிக்கெட்டில், போன் நம்பரை எழுதிக் கொடுத்தது அப்போதுதான், பொறிதட்டிய மாதிரி ஞாபகம் வந்தது.''ஸாரி சார்... நான் குரூப் டூ ஆபீசர்; கலெக்டர் ஆபீஸ்லதான் வேலை செய்யறேன். டிக்கெட் எடுத்தேன் சார் மிஸ் ஆயிடுச்சி.'' ''நம்பற மாதிரி இல்லையே... நீங்க ஏதோ சீட் செய்றீங்க. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது; ஐந்நூறு ரூபாய் அபராதம் கட்டிட்டுப் போங்க.”பேசிக் கொண்டிருக்கும் போதே, சார்ஜ் சீட்டில், ஐந்நூறு ரூபாய் அபராதம் எழுதி, கிழித்து, பிரவீண் கையில் கொடுத்தார் செக்கர்.'தாமதப்படுத்தப்பட்ட நியாயங்கள், தனக்கே தண்டனையாக வந்து முடியும்...' என்பதை, யாரோ உணர்த்துவது போல் இருந்தது பிரவீணுக்கு.கொஞ்சம் முறைத்தபடியே அவனிடமிருந்து, அந்த 'ஐநூறு ரூபாயை' பிடுங்கிக் கொண்டார் செக்கர்.ஆதலையூர் சூரியகுமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !