சிங்கமும் இவருக்கு செல்லப்பிராணிதான்!
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர், அன்னெல் சைமென். 31 வயது பெண்ணான இவரை, அவரது பக்கத்து வீடுகளில் வசிப்போர், சற்று மிரட்சியுடன் பார்க்கின்றனர். நாய், பூனை, கிளி, முயல் போன்றவற்றை, செல்லப் பிராணியாக வளர்ப்பது வழக்கமானது தான். ஆனால், இந்த பெண், 120 கிலோ எடையுள்ள, ஒரு சிங்கத்தை, செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த சிங்கமும், இவருடன், செல்லமாக விளையாடுகிறது. இந்த பெண்ணுக்கு, சிங்கத்தை பார்த்து, சற்றும் பயம் இருப்பதாக தெரியவில்லை. குழந்தையைப் போல், சிங்கத்தை கையாளுகிறார். மற்றவர்களை பார்த்தால், சிலிர்ப்பு காட்டும், இந்த சிங்கம், சைமெனை பார்த்தால் மட்டும், பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறது. இந்த சிங்கம் பிறந்து, 18 மாதம் தான் ஆகிறது. பிறந்ததிலிருந்தே சிங்கத்தை, இவர் தான் வளர்த்து வருகிறார். துவக்கத்தில், தன் வீட்டில் வைத்து தான், சிங்கத்தை வளர்த்து வந்தார். ஆனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், புகார் தெரிவித்ததால், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள, தன் கெஸ்ட் ஹவுசில் வளர்த்து வருகிறார். இந்த சிங்கத்துடன் சேர்த்து, ஒரு நாயையும் வளர்க்கிறார். தினமும் காலையில், சிங்கத்தையும், நாயையும் ஜோடியாக அழைத்துக் கொண்டு, நடை பயிற்சி போவதையும், வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த சிங்கத்துக்கு, டிம்பா என பெயர் வைத்து, செல்லமாக அழைக்கிறார். சைமென் கூறுகையில்,'சிங்கத்துடன் விளையாடுவது, ஜாலியாகத் தான் இருக்கிறது. ஆனால், அதன் சாப்பாட்டுக்கு தான், அதிகமாக செலவிட வேண்டியிருக்கிறது. அதற்கு தேவையான இறைச்சிகளை வாங்கியே, என் சொத்து காலியாகி விடும் போலிருக்கிறது...' என, கூறி சிரிக்கிறார். — ஜோல்னா பையன்.