உள்ளூர் செய்திகள்

பண்பாட்டை விதைத்தது பழைய பாடல்களே...

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு. கோவை ராம்நகரைச் சேர்ந்த, கே.எஸ்.கண்ணன் என்பவருக்கு பழைய சினிமா படப் பாடல் புத்தகங்களை சேர்த்து வைப்பதுதான் பொழுதுபோக்கு.தற்போது, 59 வயதாகும் இவர், தன், 15 வயதில் இருந்து வாங்கிய சினிமா பாடல் புத்தகங்கள் பெட்டி, பெட்டியாக வீடு முழுவதும் நிரப்பி வைத்துள்ளார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என்று, அந்தக் கால நடிகர் படங்களின் பாடல்களை, நடிகர்கள் வாரியாக தொகுத்து வைத்துள்ளார்.இந்த பாடல் புத்தகங்கள் அனைத்துமே, பத்து பைசாவில் ஆரம்பித்து, ஐம்பது பைசா வரை விலை வைக்கப்பட்டுள்ளது.இவரது தொகுப்பில், வித்தியாசமான பாடல் புத்தக தொகுப்புதான் சுவாரசியமானது.'உலகம் சுற்றும் வாலிபன்' படப் பாடல் புத்தகம், உலக உருண்டை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல, 'திருடன்' படப் பாடல் புத்தகம், சீட்டு கட்டு வடிவிலும், 'நூற்றுக்கு நூறு' படப் பாடல் புத்தகம், மார்க் ஷீட் வடிவிலும், 'அன்பே வா' படம், கிராம போன் ரிக்கார்டு வடிவிலும், 'வெண்ணிற ஆடை' பாடல் புத்தகம், புத்தக வடிவிலும், 'குழந்தை' பாடல் புத்தகம், குட்டியான புத்தகமாகவும், 'மாட்டுக்கார வேலன்' பாடல் புத்தகம், கயிறால் கட்டியும் வந்துள்ளதை பார்க்கும் போது, அப்போது செய்துள்ள புதுமை வியக்க வைக்கிறது.இந்த பாடல் புத்தகம் எல்லாம், தியேட்டரில் மட்டுமே விற்கப்படும். இடைவேளையின் போது, போட்டி போட்டு, வாங்கி வைத்து, மனப்பாடம் செய்து, நண்பர்களுக்கு மத்தியில் பாடி மகிழ்வதும், மகிழ வைப்பதுமே கண்ணனின் பொழுதுபோக்கு.அந்த பழக்கத்தின் காரணமாக, இன்றைக்கும் பழைய பாடல்களின் முதல் வரியோ அல்லது நடு வரியோ சொன்னால் போதும்... முழு பாடலையும் அடி பிறழாமல் பாடி, அசத்துகிறார்.இப்படி, எந்த அளவிற்கு பழைய படங்கள் மற்றும் பாடல்களின் மீது விருப்பு வைத்திருந்தாரோ, அந்த அளவிற்கு தற்போது வரும் படங்கள் மற்றும் பாடல்கள் மீது வெறுப்பு கொண்டுள்ளார்.காரணம், தற்போது வரும் படங்களும், பாடல்களும் பண்பாட்டை சிதைக்கிறது, கலாச்சாரத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று கோபம் கொள்கிறார்.உதாரணத்திற்கு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி, ஏ.எம்.ராஜா, சுசீலா பாடி, ஜெமினி கணேசன், சரோஜா தேவி நடித்த, கல்யாண பரிசு படத்தில் இடம்பெற்ற, 'வாடிக்கை மறந்தது ஏனோ...' என்ற காதல் பாடலை சுட்டிக் காட்டுகிறார்.'காந்தமோ இது கண்ணொளிதானோ, காதல் நதியில் நீந்திடும் மீனோ, கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ...' என்று பாடிய படி, காதலியின் ஒரு விரலை தீண்டி விடுவார் காதலன்.அவ்வளவுதான்... காதலி கோபப்பட்டு வெகுண்டெழுந்து விடுவார்... 'பொறுமை இழந்திடலாமோ, பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ, நான் கருங்கல் சிலையோ, காதல் எனக்கில்லையோ, வரம்பு மீறுதல் முறையோ...' என்று பொறிந்து தள்ளி விடுவார்.'இந்த பண்பாடு, படம் பார்த்த அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை; அதை, நான் சொல்ல வேண்டியதும் இல்லை...' என்று கூறும் பழைய பாடல்களின் பிரியரான கண்ணனின் தொடர்பு எண்: 98940 55800.***எல் முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !