வலி!
''எனக்கு நாமக்கல்ல போஸ்டிங்! அடுத்த வாரம் வேலையில சேரணும்,'' என, ஸ்ரீரங்கன் கூறியதும், அவனது பெற்றோர் மனதில், 'குபீர்' என, மகிழ்ச்சி நிறைந்தது.''பெருமாளே...'' என, வானம் நோக்கி கும்பிட்டாள், அம்மா கோதை.இதற்குள், உள்ளறையிலிருந்து வந்த மனைவி பவானியை பார்த்ததும், அதுவரை மையமாக பேசிக் கொண்டிருந்த ஸ்ரீரங்கன், புன்னகையுடன், விஷயத்தை கூறினான்.உடனே, முகம் மலர்ந்து, ''ஹை...'' என்றாள்.''அவனுக்கு சர்க்கரை பொங்கல் செஞ்சு குடும்மா,'' என்றாள் மகிழ்ச்சியுடன் கோதை!ஆனால், அடுத்த நொடி ஸ்ரீரங்கனின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள், கோதை மற்றும் அவள் கணவர் கிருஷ்ணசாமியின் நெஞ்சில் இடியாய் இறங்கியது.வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவரது அப்பா, மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில், அர்ச்சகருக்கு, எடுபிடியாக இருந்தார்; வருமானம் என்று பெரிதாக எதுவும் இல்லை.மாட வீதியில், கோவிலுக்கு சொந்தமான இரு அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். கோவில் பணியாளர் என்பதால், வாடகை கிடையாது. கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமே, பெரும்பாலும், அவர்களது உணவு.கிருஷ்ணசாமியை ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க வைத்தார் அவரது அப்பா; அதற்கு மேல் முடியவில்லை.அதே வீதியில் இருந்த ஒரு வக்கீலிடம், ஆபிஸ் பாய் வேலைக்கு சேர்த்து விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கோர்ட் சம்பந்தப்பட்ட வேலைகளை கற்று கொண்ட கிருஷ்ணசாமி, வக்கீல் குமாஸ்தாவாக உயர்ந்தார். அதன்பின் தான் கோதைக்கும், அவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது; ஸ்ரீரங்கன் பிறந்தான்.ஐந்து வயது முடிந்ததும், அவனை பள்ளியில் சேர்த்தார் கிருஷ்ணசாமி. பிற மாணவர்களை கவனிக்க ஆரம்பித்த ஸ்ரீரங்கன், ஒரு நாள், 'ஏம்பா... அவா எல்லாம் சைக்கிள், பைக்குல வரா; நாம மட்டும் ஏன் நடந்தே போறோம்...' என்றான்.'நம்மாத்துல சைக்கிளோ, பைக்கோ இல்லயேடா கொழந்தே...' என்றார் கிருஷ்ணசாமி.'ஏன் இல்ல?''அதெல்லாம் வாங்கற அளவுக்கு, நம்மகிட்ட வசதி இல்ல...''அப்போ அவாளுக்கு மட்டும் எப்படி வசதி வந்தது?''அவா எல்லாம் நல்ல வேலையில இருக்கா... நிறைய சம்பாதிக்கிறா; அதனால, சைக்கிள், பைக் எல்லாம் வாங்க முடியறது...''நீங்கோ நல்ல வேலையில இல்லயாப்பா...'பொட்டில் அடித்தாற் போல் இருந்தது அவன் கேள்வி.'நல்ல வேலை தான்...''அப்போ நீங்கோ ஏன் சம்பாதிச்சு சைக்கிள், பைக் எல்லாம் வாங்கல...'அவனுக்கு என்ன பதில் சொல்வது என, தவித்தார் கிருஷ்ணசாமி.இப்படிதான் எதையும் சட்டென புரிந்து கொள்வதும், அதை ஆராய்ந்து அறிவதும், சந்தேகம் தீர்த்து கொள்வதும், ஸ்ரீரங்கனின் தன்மையாய் இருந்தது.'சொல்லுங்கோப்பா... நீங்க ஏன் நல்லா சம்பாதிச்சு இதை எல்லாம் வாங்கல...' என்று மீண்டும் கேட்கவும், 'அப்பாவால வாங்க முடியல... நீ நல்லாப் படிச்சு, பெரிய வேலைக்கு போயி, நிறைய சம்பாதிச்சு சைக்கிள், பைக், காரு எல்லாம் வாங்கலாம்; சரியா...' என்றார்.'ம்...' என்று தலையாட்டினாலும், 'அப்பாவின் ஏழ்மை தான், தன் வசதி குறைவுக்கு காரணம்...' என்று, அவனது பிஞ்சு மனதில், பதிந்து போனது. அதன் விளைவாக, 'நன்றாக படித்து, நல்ல வேலைக்கு போனால் நிறைய சம்பாதிக்கலாம்; வசதியாக வாழலாம்...' என்ற எண்ணம், அவன் மனதில் வேரூன்றியது. அதனால், வெறி கொண்டு படித்தான்.வளர வளர, தன் வீட்டின் ஏழ்மையையும், புறச் சூழலையும் ஒப்பிட்டுப் பார்த்து, மற்றவர்கள் போல் தான் ஆசைப்பட்டதை அனுபவிக்க முடியவில்லையே என நினைத்து, தன் பெற்றோரின் இயலாமையின் மீது, அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இதனாலேயே தந்தையுடன் பேசுவதை குறைத்துக் கொண்டான்.கல்லூரியில், பி.காம்., படிப்பில், மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கிய அன்று, கிருஷ்ணசாமி, ஸ்ரீரங்கனை அழைத்து, 'ஸ்டேட் ரேங்க் எடுத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...' என்றதும், 'எடுத்து என்ன பிரயோஜனம்... என்னை மேல் படிப்பு படிக்க வைக்க போறேளா என்ன...' என்றான் கிண்டலும், வெறுப்புமாய்!பதில் சொல்ல முடியாமல் அவர் மவுனமாக இருப்பதைப் பார்த்து, 'ரெண்டு, மூணு இடத்துல வேலைக்கு முயற்சி செஞ்சுண்டு இருக்கேன்; கிடைச்சிடும். என் வாழ்க்கைய நானே பாத்துக்கறேன்...' என்றான் விட்டேற்றியாய்!'ஏம்ப்பா இப்படி பேசற... நம்ம குடும்ப சூழ்நிலை தான் உனக்கு தெரியுமே...''தெரிஞ்சதுனால தான், இந்த முடிவெடுத்திருக்கேன். என் நண்பர்கள் எல்லாரும், நன்னா டிரஸ் போட்டுண்டு வரா. ஆனா நான்... நீங்கோ தீபாவளிக்கு எடுத்து கொடுக்கிற சட்டையையே சாயம் போய் கிழியிற வரை போட வேண்டியிருக்கு... என் பிரண்ட்ஸ்க எல்லாரும் கார்ல வரா. இங்க, 'செகண்ட் ஹேண்ட்' பைக்குக்கு கூட வழியில்ல...' என்று வெறுப்பை உமிழ்ந்தான்.அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு, அங்கே வந்த கோதை, 'உன்னை நன்னா படிக்க வைக்கணும்ன்னு தான் அப்பா ஆசைப்பட்டார். என்ன செய்யறது... வக்கீலுக்கு வயசாகி போனதால, அவர் கோர்ட்டுக்கு போறதில்ல; அதனால, இவரை வேலையை விட்டு நிறுத்திட்டார். வக்கீல் கொடுத்த செட்டில்மென்ட் பணத்துல தான் இப்ப நம்ம குடும்பம் ஓடிண்டு இருக்கு. இந்த நிலையில அவரால என்னப்பா செய்ய முடியும்...' என்றாள்.'நீங்க யாரும் எனக்கு ஒண்ணும் செய்ய வேணாம்... என் ஆசை, கனவு, லட்சியத்தை எப்படி அடையறதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு சிரமம் தர மாட்டேன்; அதுக்காக, பெத்த உங்கள, 'அம்போ'ன்னு விட்டுட்டும் போக மாட்டேன்; ஒரு மகனா என் கடமையை செய்வேன்...' என்று எவ்வித பாச உணர்வும் இன்றி கூறி, வெளியே போய் விட்டான்.அதேபோன்று, துணிக்கடையில் கணக்கராக வேலைக்கு சேர்ந்தான். நேர்மையாய், கடினமாய் உழைத்து, அங்கேயே மேலாளர் ஆனான். கூடவே, தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஐ.ஏ.எஸ்., தகுதி தேர்வுக்கு தயாரானான்.அவன் கையில் சிறிது பணப் புழக்கம் வந்தவுடன், ஒருநாள், 'அம்மா... வீட்டை மாத்திக்கலாம்ன்னு இருக்கேன்...' என்றான்.அதிர்ச்சியடைந்த கோதை, 'ஏம்ப்பா திடீர்ன்னு...' என்றாள்.'பக்கத்துல கொஞ்சம் பெரிய வீடா பாத்திருக்கேன்; இதை விட வசதியா இருக்கும்...' என்றான்.'இதுவும் வசதியாத் தானே இருக்கு; வாடகை கூட கிடையாது...''நீங்கோ வாடகை கொடுக்க முடியாத நிலையில இருந்தேள்... நான் அப்படி இல்லயே; சம்பாதிக்கிறேனே...' என்றான்.முடிவு செய்து விட்டு தான் பேசுகிறான் என புரிந்தது.இத்தனை நாட்களாக இருந்து வந்த கோவில் வீட்டை காலி செய்வது, மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், தன் மகன், வசதியான வீடு பிடித்து குடித்தனம் செல்வது, சற்று பெருமையாகத் தான் இருந்தது அவர்களுக்கு!இதோ புது வீட்டுக்கு வந்து மூன்று ஆண்டுகளாகி விட்டது. இதற்குள் ஸ்ரீரங்கனுக்கு திருமணமும் முடிந்து விட்டது. அவனது திறமையையும், நேர்மையையும் கவனித்த துணிக்கடை அதிபர், தன் மகள் பவானியை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த ஸ்ரீரங்கன், அதிலும் தேர்ச்சியடைந்து, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று, இப்போது நாமக்கல்லில் போஸ்டிங்!மெல்ல தொண்டையை கனைத்து, ''எல்லாரும் ஒண்ணா இருக்கோம்; இப்பவே சில விஷயங்கள தெளிவா பேசிடலாம்ன்னு தோணுது...'' என்று, பீடிகையாய் ஆரம்பித்தான் ஸ்ரீரங்கன்.''அடுத்த வாரமே, பவானிய கூட்டிண்டு நாமக்கல் போயிடுவேன்...'' என்றவன், சற்று நிறுத்தி, ''அப்புறம் நீங்க ரெண்டு பேர் மட்டும் தானே... இவ்ளோ பெரிய வீடு எதுக்கு; காலி செஞ்சுடலாம்ன்னு இருக்கேன்,'' என்றான்.கிருஷ்ணசாமிக்கும், கோதைக்கும் லேசாக பதற்றம் வர, அவனை கேள்விக்குறியாய் பார்த்தனர்; பவானியும், அவன் பேச்சை உன்னிப்பாய் கவனித்தாள்.''நீங்க ரெண்டு பேரும் வயசான காலத்துல, இங்க தனியா இருந்து கஷ்டப்பட வேணாம்; அதனால...''''அதனால...'' பதற்றமாய் கேட்டாள் கோதை.''நல்ல வசதியான முதியோர் இல்லத்துல சேர்த்து விடுறேன்; அதற்கான பணத்தை மாசா மாசம் அனுப்பிடுறேன். அங்க, உங்கள நன்னா பாத்துக்க ஆட்கள் இருப்பா. தனிமையில கஷ்டப்பட வேணாம்,'' என்றான்.கோதைக்கு கண்ணில் நீர், தாரை தாரையாய் வழிந்தது; பேச்சற்று போனாள்.பதறிய கிருஷ்ணசாமி, ''இல்ல ரங்கா... முதியோர் இல்லம் எல்லாம் வேணாம்,'' என்றார் தழுதழுத்த குரலில்!''இவ்ளோ பெரிய வீட்டுல, வயசான காலத்துல, தனியா கிடந்து கஷ்டப்பட வேணாமேன்னு தான் சொல்றேன்,'' என்றான்.''வீட்டை காலி செஞ்சுக்கோ; எங்கள பற்றி கவலைப்பட வேணாம். கோவில் வீடு இன்னும் காலியாத் தான் இருக்கு; பட்டாச்சாரியர பாத்து பேசி, அந்த வீட்டிற்கு குடி போய்க்கறோம்,'' என்றார்.ஸ்ரீரங்கன் யோசிக்கவே, பவானி, சட்டென்று உறுதியான குரலில், ''அம்மா, அப்பாவ விட்டுட்டு போக, ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன். ஏன் அவாளையும் கூட்டிண்டு போனா என்ன...'' என்றாள்.''இல்ல பவானி... இப்ப, நான் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; பெரிய மனுஷாளோட பழக வேண்டியிருக்கும்; இவாளுக்கு அவா கிட்ட நாகரிகமா நடந்துக்க தெரியாது,'' என்றான்.''பிறந்ததுல இருந்து இவா கூடவே தானே இருக்கேள். இப்ப ஐ.ஏ.எஸ்., ஆனதும், உங்களுக்கு திடீர் நாகரிகம் வந்துடுத்தோ... ஐ.ஏ.எஸ்., எல்லாம் ஆகாயத்துல இருந்து குதிச்சவாளா என்ன!''''நான் சொல்ல வர்றது உனக்கு சரியாப் புரியல...''''உங்களுக்குத்தான் நீங்க வளர்ந்து வந்த பாதை புரியல. சின்னதா ஒரு வீட்டுல இருந்து, குறைஞ்ச வருமானத்துல, உங்கள வளர்த்து, காலேஜ் வரை படிக்க வச்சு, ஹாஸ்டலுக்கு அனுப்பாம, வீட்டுல வச்சு பார்த்துண்டாளே... அதுக்கு உங்க அப்பாவும், அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா... எத்தனை நாட்கள் சாப்பாட்டை உங்களுக்கு கொடுத்துட்டு, அவங்க பட்டினி இருந்திருப்பா... அதுக்காக உங்ககிட்ட இருந்து எதையாவது எதிர்பார்த்திருப்பாளா...'' என்றாள்.''நான் ஒண்ணும் அவாளை நிராதரவா விட்டுட்டுப் போகலயே... நல்ல முதியோர் இல்லத்துல, அவா வசதியா இருக்கிற மாதிரி தானே ஏற்பாடு செய்திருக்கேன். அதுக்கான பணத்தைக் கூட நான் தானே கொடுக்கப் போறேன்,'' என்றான்.''அது போறுமா... நான், தாய் இல்லாம வளர்ந்த பொண்ணு! ஒங்கள கல்யாணம் பண்ணிண்டு வந்த பிறகு தான், உங்க அம்மா மூலமா, தாய்ப் பாசத்தை உணர்ந்தேன். இப்ப, அம்மாங்கிற உறவை அனுபவிச்சுண்டுருக்கேன். இவா எனக்கு மாமியார் இல்ல, அம்மா. நீங்கோ ஒங்க அம்மாவ விட்டுட்டுப் போக முடிவெடுத்திருக்கலாம்; நான், என் அம்மாவ விட்டுட்டுப் போக விரும்பல,'' என்றாள் பட்டென்று!''நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சு தான் பேசறயா... அடுத்த வாரம், நாம நாமக்கல் போகணும்; நமக்கு குவாட்டர்ஸ் ஒதுக்கியிருக்கா,'' என்றான்.''அந்த குவாட்டர்ஸ், இந்த வீடு மாதிரி வசதியா இருக்குமா... புது இடம் எனக்கு ஒத்து வருமா...'' என்றாள்.''நக்கலா...''''இல்ல... சீரியஸாவே கேட்கிறேன்...''''இதைவிட வசதியான வீடு, டைல்ஸ் போட்டு அழகா இருக்கும்; வேலைக்கு ஆள் கூட இருப்பா,'' என்றான்.''அப்புறம் என்ன... நீங்க மட்டும் போக வேண்டியது தானே... அரசாங்கமே உங்களுக்கு நல்ல வசதியை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கே... நான் எதுக்கு கொசுறு மாதிரி,'' என்றாள்.''பவானி...''''நான் வரலை; இங்கே அப்பா, அம்மா கூடவே இருந்துக்கறேன்; நீங்க முதியோர் இல்லத்துக்கு பணம் கட்டப் போறதா சொன்னேளே... அந்தப் பணத்தை என்கிட்ட குடுங்கோ... அதை வச்சு, நான் இவாளை பார்த்துக்குவேன். பெற்று வளர்த்த அம்மாவையும், அப்பாவையும் கூட வச்சுக்க விருப்பம் இல்லாத ஒங்களோட வர எனக்கு விருப்பம் இல்ல,'' என்று முகத்தில் அடித்தாற்போல பவானி பேச, அதிர்ந்து போனான் ஸ்ரீரங்கன்.சட்டெனெ ஓடி வந்து அவள் வாயைப் பொத்திய கோதை, ''அம்மாடி பவானி... இப்படி எல்லாம் பேசக் கூடாதும்மா... எங்களால உங்களுக்குள்ள சண்டை வேணாம். நாங்க முதியோர் இல்லத்துக்கே போறோம்,'' என்று சொல்லும் போதே, கோதைக்கு கண்ணீர் முட்டியது.பவானி அவனை நோக்கி, ''நீங்க போற ஊருக்கு உங்க கூட அவாளையும் கூட்டிண்டுப் போகணும் அல்லது இங்கயே ஒரு வீட்டப் பார்த்து, அவாளை தங்க வச்சிட்டு, அப்பப்போ வந்து பார்த்துட்டு போகணும்... அதுதானே நியாயம்... அதை விட்டுட்டு, அவாளை முதியோர் இல்லத்தில் சேர்த்து, இன்னொருத்தர் பொறுப்புல ஒப்படைக்கிறது, பெத்தவாளை நிராகரிக்கிற விஷயம் இல்லயா?''பொட்டில் அறைந்தாற் போல இருந்தது ஸ்ரீரங்கனுக்கு!''வசதியான, அழகான குவாட்டர்ஸ், வேலைக்காரான்னு எல்லாம் இருந்தும் உங்கள கவனிச்சுக்க, நான் வேணும்ன்னு தோணறதே... அதே மாதிரி தானே அப்பா, அம்மாவுக்கு தன்னோட பிள்ளை வேணும்ன்னு தோணும்? உலகத்துல எல்லா வலியையும் விட கொடுமையானது நிராகரிப்பு தரும் வலி,'' சொல்லும் போதே, பவானிக்கு குரல் கரகரத்தது.அவளது சொற்கள், அவன் இதயத்தைக் கரைக்க, அவன் கண்களில் கண்ணீர் கசிந்தது. பரிதாபமாய் தன்னை பார்த்தபடி நின்ற தன் பெற்றோரைப் பார்த்ததும், இன்னும் உடைந்து போனான்.''சாரிம்மா... சாரிப்பா... நீங்க எங்கயும் போக வேணாம்; என்கூடவே வாங்கோ,'' என்றபடி தன் பெற்றோரை அணைத்துக் கொண்டான்.ஹரிகிருஷ்ணா