உள்ளூர் செய்திகள்

மந்திரியின் கதை!

விதியை காட்டிலும் வலிமை உடையவை வேறு உண்டோ என்பார் - திருவள்ளுவர் வெஞ்சின விதியை வெல்ல வல்லமோ - கம்பர் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - சிலப்பதிகாரம் - இப்படி, பலரும் சொன்ன விதி தொடர்பாக நடந்த ஒரு வரலாற்றை சொல்லி விளக்குகிறார், காஞ்சி, மகா பெரியவர். அச்யுதராயர் என்ற அரசனிடம், கோவிந்த தீட்சிதர் என்பவர் மந்திரியாக இருந்தார். இவர், கோவில் கட்டுவது, குளம் வெட்டுவது, வேத பாடசாலை வைப்பது, வேதியருக்கு தானம் செய்வது முதலான, பல புண்ணியங்களை செய்து வந்தார்; சுருங்கச் சொன்னால், அவர் செய்யாத தர்மமே இல்லை. ஒருநாள், அவரிடம் வேலை பார்த்து இறந்து போன ஒருவன், பரலோகத்திலிருந்து வந்து, அவரை அழைத்தான். இறந்தவன் எழுந்து வந்தால், விந்தை அல்லவா... 'தங்களிடத்தில் ஒழுங்காக வேலை செய்த புண்ணியத்தால், என்னை, எமதர்ம ராஜன், எம கிங்கரனாக வைத்துக் கொண்டான். எம லோகத்தில், எமனும், சித்ரகுப்தனும் பேசும் போது, 'தீட்சிதர், நந்தவன தர்மம் ஒன்றை தவிர, மற்றதெல்லாம் செய்திருக்கிறார்...' என்று பேசினர். தாங்கள், அதையும் செய்ய வேண்டும் என்றே கூற வந்தேன்...' என்றான், அவன். 'நீ சொல்வதை எப்படி நம்புவது...' என, கேட்டார், தீட்சிதர். 'சுவாமி... தங்களிடம் வேலை செய்யும், ஸ்தபதியின் உயிரை எடுத்து போக வந்திருக்கிறேன். மேலே ஏற்றும் கல் விழுந்து, அவன் இறக்கப் போகிறான். அதைக்கண்டு என் சொல்லை நம்பலாம்...' என்றான். அவன் வார்த்தைகளை கேட்ட தீட்சிதர், உடனே, அந்த ஸ்தபதியை ஓர் அறையின் உள்ளே வைத்துப் பூட்டி, சாவியை ஜாக்கிரதையாக வைத்தார்.கோவில் கட்டட வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரும் கற்பாறையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம்.'கற்பாறையை நிலை நிறுத்த, ஸ்தபதி வந்தாலொழிய வேறு யாராலும் முடியாது...' என்றார், மேஸ்திரி.கட்டட வேலையில் ஊக்கமுள்ள தீட்சிதரின் மனம், எதற்காக ஸ்தபதியை உள்ளே வைத்து பூட்டி இருக்கிறோம் என்பதை மறந்து, அறையை திறந்தார்.வெளியே வந்த, ஸ்தபதி, கல்லை மேலே ஏற்றினான். அவன் மீது கல் விழுந்தது. உடனே, கிங்கரன், அவன் உயிரை எடுத்து சென்றான். விதியை மதியால் வெல்ல முடியாது என, உண்மையை உணர்ந்த, தீட்சிதர், கிங்கரன் சொல்லை நம்பாமல் இருக்க முடியுமா, நந்தவன தர்மத்தையும் செய்தார்.பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !