பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர் அவர்; உரையாடலில், ஆங்கிலம் கலந்து தான் பேசுவார். மேடை என்றாலோ, பேட்டி என்றாலோ அவரது மொழி நடையே, அடியோடு மாறி, அபாரமாகி விடும். 'பொது'விற்கு வந்து விட்டார் அல்லவா!இந்த நுணுக்கம் பலருக்கு தெரிவதே இல்லை. ஏதோ வீட்டிற்குள் நடந்து கொள்வது போலவே, பொது இடத்திலும் நடந்து, அடிக்கின்றனர்; அசிங்கமாக பேசி, தங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்கின்றனர்.'ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில்' நடந்த சம்பவம் இது —வயதான தாய்க்கும், அவர் மகனுக்கும் மேல், 'பெர்த்' ஒதுக்கப்பட்டிருந்தன. எதிரே இருந்த கீழ், 'பெர்த்'காரரைப் பார்த்து, 'உங்க, 'பெர்'த்தை கொடுக்கிறீங்களா...' என்று அந்த வயதான பெண்மணி கேட்க, அவரோ, மூத்த குடிமகள் என்று கூட பாராமல் மறுத்தார். விடாமல் அந்தப் பெண்மணி, 'என்னால மேலே ஏற முடியல; குடுக்கக்கூடாதா...' என்று சற்று இறங்கிக் கேட்க, பார்த்துக் கொண்டிருந்த மகன் டென்ஷனாகி, ஏகமாய் கத்த ஆரம்பித்து விட்டார்.'பெர்த்' மறுக்கப்பட்ட போது சுருங்கிய அத்தாயின் முகம், மகனது கத்தலில் மேலும் சுருங்கி விட்டது.பொது இடத்தில், குடும்ப உறுப்பினர்களை எப்படி நடத்துவது என்று தெரியாதவர்களுள், ஆண்கள் தாம் பெரும்பான்மை இடத்தை வகிக்கின்றனர்.வீட்ல எலி வெளியில புலி என்று ஒரு படம் வந்தது. இத்தகைய புலிகள் தாம் இந்த ஆண்கள். பொது இடங்களில், நம் வீட்டுப் பெண்கள் பதிலுக்கு குரலை உயர்த்த மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான், இவர்கள் ஆடித் தீர்க்கின்றனர்.நான் சுயபுராணம் பாடுவதாக நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் ஒன்றை சொல்கிறேன்... வீட்டில் நமக்காக எவ்வளவு பணிவிடை செய்கிறாள் என்கிற மகிழ்ச்சியில், வெளியிடங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லும் போது, என் மனைவிக்கு நன்கு பணிவிடை செய்வேன்.ரயிலில், 'பெர்த்' மீது, 'பெட்ஷீட்' விரித்து கொடுப்பது முதல், குறைவான எடையை மட்டுமே சுமக்கும்படி பார்த்துக் கொள்வதிலிருந்து, காயப்படுத்தாத சொற்களை பேசுவது வரை, என் மனைவி மனம் கோணாதபடி கவனித்து கொள்வேன்.கடைசி நிமிடங்களில் ரயில் நிலையங்களில், ரயிலை பிடிக்க, அங்கும், இங்கும் மனைவி, பிள்ளைகளை ஓட வைக்கும் குடும்பத் தலைவன், 'சனியனே... சீக்கிரம் வந்து தொலை...' என, திட்டித் தீர்ப்பான்.'முடியலைங்க...' என்பாள் மனைவி.'ஊம்! நல்லா வரப் போகுதுடி என் வாயில...' என, ஆரம்பித்து, அநாகரிகமாகப் பேசுவதை, ரயில்வே ஸ்டேஷன்களில் நிறைய பார்க்கிறோம்.தன்னுடைய வேகத்திற்கு மனைவியால் நடக்க முடியவில்லை என்பதும், மறதி, கவனக்குறைவுகள் எல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்களா... இவற்றிற்கு தான் எவ்வளவு திட்டு!பிள்ளைகளை இன்னும் மோசமாக நடத்துகின்றனர். பிள்ளை இப்படி மானத்தை வாங்குகிறதே என்கிற கோபத்தில், 'டின்' கட்டி, பார்க்கிறவர்களின் வெறுப்பிற்கும் ஆளாகின்றனர்.பொது இடங்களில் நடந்து கொள்கிற விதம் பற்றி, புறப்படும் முன்பே பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி விட வேண்டும். பொது இடங்களில் எது எதற்கு அனுமதி இல்லை என்பதில், பிள்ளைகள் தெளிவாக இல்லை எனில், அது பெற்றோரின் குறையே!பொது இடங்களில் நல்ல செயல்களை செய்யும் போது, முதுகில் மட்டுமல்ல, பாராட்டு வார்த்தைகளால் தட்டிக் கொடுக்க வேண்டும். தவறுகளை, கண்ணசைவில் மட்டுமே கண்டிக்க வேண்டும்.புரியாத வயதுப் பிள்ளைகளுக்கு, 'டிஸ்கவுன்ட்' கொடுத்து அரட்டை, லூட்டி சேட்டைகளுக்கு இடமளித்து விடலாம். கவனத்தை திசை திருப்ப முயன்றால், இப்பிள்ளைகளை அடக்கி விடலாம். பொது இடங்களில், குடும்ப உறுப்பினர்களை கண்ணியமாக நடத்துங்கள்; பலர் மத்தியில் நாம் ஏற்படுத்தும் காயங்கள், ரணங்களாகி சீக்கிரம் ஆறுவதில்லை.லேனா தமிழ்வாணன்