உள்ளூர் செய்திகள்

வார்த்தை வசப்படும்!

அரிசியையும், பாசிப் பருப்பையும் கலந்து, அளவாக தண்ணீர் ஊற்றி, மிளகு, சீரகம், உப்பு போட்டு குக்கரில் வைத்தாள், சுபத்ரா.அவளுக்கும், நரேனுக்குமான இரவு சாப்பாடு தயாரானது. மொபைல்போன் அடிக்க, 'இந்த நேரம், யு.எஸ்.,ல் இருந்து, கணவர் சிவாவின் அழைப்பாக தான் இருக்கும்...' என, நினைத்தபடி, போனை எடுத்தவள், ''சொல்லுங்க, சிவா எப்படியிருக்கீங்க,'' என்றாள்.''நான் நல்லாயிருக்கேன். நீயும், நரேனும் எப்படியிருக்கீங்க... எனக்கு, நரேன் நினைவாவே இருக்கு. எப்படி படிக்கிறான். பிளஸ்2 சமயம், அருகில் இருக்க முடியாமல், 'புராஜெக்ட்'டிற்காக என்னை அமெரிக்கா அனுப்பி வச்சுட்டாங்க.''''நான் பார்த்துக்கிறேன். நீங்க போன வேலையை நல்லபடியாக முடிச்சுட்டு வாங்க.''''நீ பார்த்துப்பேங்கிற நம்பிக்கையில் தான் இருக்கேன், சுபா. நேரத்துக்கு சாப்பிட சொல்லு. உடம்பு ஆரோக்கியம் முக்கியம். நல்ல மார்க் எடுத்து, 'மெரிட்'டில், 'மெடிக்கல் சீட்' வாங்கணும்.''அவன் பேசிக் கொண்டே போக, மவுனமாள், சுபத்ரா.நரேனின் அறை கதவு மூடியிருக்கிறது. இன்று, 'பயாலஜி டியூஷன்' போகவில்லை. கேட்டதற்கு, தலைவலி என்றான்.ஒரு மாதமாக, நரேனின் நடவடிக்கைகளை கவனித்தபடி தான் இருக்கிறாள்.படிப்பில் கவனம் சிதறுகிறது. அவனுக்குள் எதையோ நினைத்து, கண்மூடி ரசிக்கிறான்.தனிமையை விரும்பி, அடிக்கடி மொட்டை மாடிக்குப் போகிறான். அப்படியெல்லாம் இருந்தவன் இல்லை.பள்ளியில் நடக்கும் சின்ன விஷயத்தைக் கூட அவளிடம் பகிர்ந்து கொள்பவன், இப்போது எதையும் சொல்வதில்லை.பரீட்சைக்கு இன்னும் நான்கு மாதம் தான் இருக்கிறது. கவனச் சிதறல் அவன் எதிர்காலத்தை அல்லவா பாதிக்கும்.நரேன் பள்ளி சென்றிருந்த நேரம், அவன் அறைக்குள் நுழைந்தாள். அலமாரியில் புத்தகங்கள் அடுக்கப்படாமல் சிதறிக் கிடந்தவற்றை எடுத்து ஒழுங்குபடுத்தினாள்.கட்டிலில் போர்வையை உதறிப் போட்டவள், தலையணை அடியில் நான்காக மடிக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்து பார்த்தாள்.'அழகோவியம், பெண்ணாக, என் முன் பவனி வருகிறது. பார்த்துக் கொண்டே இருக்க துாண்டும், அழகு உருவம். இந்த தேவதை, இவ்வளவு நாள் எங்கே இருந்தாள். என் கனவு நாயகி. வசீகரிக்கும் பார்வை, என்னை அவள் விரும்புகிறாள் என்பதை சொல்லாமல் சொல்கிறதே...'எனக்குள் என்னை தொலைத்து வாழ்வதை விட, அவளிடம் என்னைத் தொலைப்பது மேல். காத்திரு என் காதலியே. அடுத்த வாரம் என் பிறந்தநாள். அன்று, என் காதலைத் தெரிவிக்கும் நாளாக்குகிறேன்...'இதயம் படபடவென்று துடிக்க, ஜிவ்வென்று ரத்த ஓட்டம், மின்சாரம் பாய்வது போல உடலெங்கும் பரவ, எடுத்த இடத்திலேயே அந்த பேப்பரை வைத்தாள்.''நரேன் சாப்பிட வாப்பா... உனக்குப் பிடிக்கும்ன்னு பூரி - கிழங்கு செய்தேன். படிப்பெல்லாம் எப்படி போயிட்டிருக்கு. நல்லா, 'ப்ரிபேர்' பண்றியா... அப்பா, விசாரிச்சாரு,'' என்றாள்.''ம்... படிக்கிறேன்.''''அப்புறம் நரேன், உன் பிறந்தநாள் அடுத்த வாரம் வருதில்லையா... புது டிரஸ் எடுக்கணும், நாளைக்கு நேரம் இருக்குமா... கடைக்குப் போயிட்டு, அப்படியே பெசன்ட்நகர் பிள்ளையார் கோவில்ல சாமி கும்பிட்டு, 'பீச்'சுக்குப் போய் வருவோமா... உன்னோடு வெளியே போய் ரொம்ப நாளாச்சு.''''சரிம்மா, போகலாம்,'' ஒற்றை வரியில் பதிலளித்தான்.கடைக்குப் போய், விநாயகர் தரிசனம் முடிந்து, 'பீச்' மணலில் கால் பதிய நடந்து, உட்கார்ந்தாள்.கண்ணுக்கெட்டும் துாரம் வரை தெரியும் கடலை பார்த்தபடியே, ''சின்ன வயசில் அடிக்கடி உன்னை, 'பீச்'சிற்கு கூட்டிட்டு வருவோம். அலையில் கால் நனைப்பது உனக்கு ரொம்பப் பிடிக்கும்,'' என்றாள்.மவுனமாக முழங்கால் கட்டி உட்கார்ந்திருந்தான், நரேன். 'ஹாண்ட் பாக்'கைத் திறந்து ஒரு சிறிய புகைப்பட, 'ஆல்பத்'தை எடுத்து, ''அப்பா, யு.எஸ்., கிளம்பும்போது, உன் சின்ன வயசு புகைப்படங்களை ஒரு, 'ஆல்பம்' போட்டு எடுத்துட்டுப் போனாரு. நானும், ஒண்ணு போடச் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டேன். எங்க மகனோட நாங்க கடந்து வந்த இனிமையான நாட்களின் சந்தோஷத்தை நினைத்துப் பார்க்க,'' என, அவனிடம் தந்தாள்.குழந்தையாக தொட்டிலில் இருப்பதிலிருந்து, தவழ்வது, நடப்பது, மூன்று வயதில் சைக்கிள் ஓட்டுவது... சென்ற ஆண்டு வரை, அவனின் விதவிதமான புகைப்படங்களைப் பார்த்து அவளிடம் திருப்பித் தந்தான்.''இந்த, 'ஆல்பம்' இதோடு முடிவதில்லை, நரேன். உன் படிப்பு, 'கிராஜுவேட்' புகைப்படம்... அப்புறம், உன் கல்யாணம்ன்னு தொடரும். உன்கிட்டே சில விஷயங்கள, அம்மாவா, உன் மேல் அக்கறை உள்ளவளா பேசணும்ன்னு நினைச்சேன். அதுக்கு இதுதான் சரியான தருணம்ன்னு நினைக்கிறேன்.''என்ன என்பது போல், அம்மாவை பார்த்தான், நரேன்.''உன் வாழ்க்கையின் அடித்தளம் அமையப் போவது, இந்த வயதில் தான், நரேன். இந்த வயதில் மனம் பலவிதத்தில் அலைபாயும். பார்க்கிற எல்லாமே அழகாகத் தெரியும். எல்லாத்தையும் அனுபவிக்கணும்ன்னு மனசு துடிக்கும். குறிப்பாக, பெண்கள், பாலின கவர்ச்சி ஏற்படுவது இந்த வயதில் தான். ''மனசு தடுமாறும். ஒரு பெண்ணின் மேல் விருப்பத்தை ஏற்படுத்தும். அதை காதல்னு நினைச்சு, மனம் சலனப்பட்டு, போக வேண்டிய பாதையை மறந்து தடுமாறிப் போனா, அப்புறம் எதிர்காலமே கேள்விக்குறி ஆயிடும். இது வயசு கோளாறு. இதில் நான் யாரையும் தப்பு சொல்ல மாட்டேன். ஆனா, அதிலிருந்து வெளிய வர முடியும்.''நமக்கு நாமே ஒரு கோடு போட்டுக்கணும். இதிலிருந்து நான் வெளியே வரமாட்டேன்னு மனசைக் கட்டுப்படுத்தணும். அப்புறம் என்ன, வாழ்க்கை நேர் பாதையில் போகும். நல்லபடியாக படிப்பு முடிஞ்சு, வேலை கிடைத்து, தகுதியும், வயதும் வந்தவுடன், மனசுக்குப் பிடிச்ச பெண்ணை மணந்து, வாழ்க்கை நினைச்சது போல அமையும்.''இதுக்கு தேவை, மனக்கட்டுப்பாடு மட்டும் தான். நீ நல்லவன்னு எனக்கு தெரியும், நரேன். ஆனா, இந்த பதின்ம வயதில், மனசு தடுமாறக் கூடாதுன்னு இதை உனக்கு சொல்றேன்,'' என, மகனை ஆழமாக பார்த்தாள்.சிறிது நேரம் தலை குனிந்திருந்தவன், தெளிவோடு அம்மாவை பார்த்து, ''நீ சொன்னதை மறக்க மாட்டேன்மா, போகலாமா... இரண்டு நாளில், 'பயாலஜி டெஸ்ட்' இருக்கு. கொஞ்சம், 'ப்ரிபேர்' பண்ண வேண்டியிருக்கு,'' என, மணலை தட்டி எழுந்தான்.மறுநாள், தலையணையடியில் இருந்த பேப்பர் சுக்கு நுாறாக கிழிக்கப்பட்டு குப்பைக் கூடையில் போடப்பட்டிருந்தது.மொபைல்போன் அழைக்க, ''எப்படியிருக்க, சுபா. நரேன் ஸ்கூலுக்கு போயிட்டானா,'' என்றார், சிவா.''நல்லா இருக்கோம். பாருங்க, நாம் ஆசைப்படற மாதிரி நம் பிள்ளை நல்லா படிச்சு, வாழ்க்கையில் நல்லதொரு இடத்துக்கு வருவான்,'' சந்தோஷ குரலில் சொன்னாள்.''என்ன, சுபா... தீர்க்கதரிசி மாதிரி இவ்வளவு தெளிவா நம்பிக்கையோடு சொல்றே... நரேன் ஏதும் சொன்னானா.''''நரேன் சொல்லலை... நான் தான் சொன்னேன். வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வச்சேன். நீங்க தானே சொல்லியிருக்கீங்க... எதையும், 'பாசிட்டிவ்'வா யோசிக்கணும்ன்னு.''''நீ பேசறது எனக்கு புரியாட்டியும், என் சுபத்ரா ஒரு நல்ல தாயாக இருந்து, மகனை வழிநடத்தறான்னு மட்டும் புரியுது,'' என, மனம் நெகிழ சொன்னான், சிவா.பரிமளா ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !