உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

அரசு அதிகாரி என்றாலே லஞ்சம் வாங்குவதுதானோ!என் நண்பர் ஒருவர், அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். தன் பதவி காலத்தில், அலுவலகத்திற்கு தணிக்கைக்கு வரும் மேலதிகாரிகளை, 'குளிப்பாட்ட' வேண்டிய கடமையும் (?), நிர்பந்தமும், உடன் பணியாற்றுவோரின் தொல்லைகளுக்கு பயந்தும், லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி, வேறு வழி இல்லாமல் குறைந்த அளவில் லஞ்சமும் வாங்கியிருக்கிறார். இப்போது, அவருடைய ஓய்வூதியம் மற்றும் நிலுவை தொகையைப் பெற, தினமும் அலுவலகத்திற்கும், வீட்டுக்குமாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.அங்கு புதிதாக பதவியேற்றுள்ள அதிகாரி, இவரிடம், 'என்ன சார், உங்க சர்வீஸ் காலத்தில், மக்களை இப்படி கெடுத்து வெச்சுருக்கீங்க... வருபவனெல்லாம், அஞ்சு, பத்துக்கு மேல் லஞ்சம் தரமாட்டேன்கிறான்...' என்று சலித்துக் கொண்டிருக்கிறார்.'பத்து வருஷமாகவே, இந்த ஊரில் இப்படித்தான் பழக்கம்... ' என்று கூறி சமாளித்திருக்கிறார் நண்பர். 'என்ன சார், அன்றைக்கும், இன்றைக்கும் விலைவாசி அப்படியே வா இருக்கு? நூற்றுக்கணக்கில் வாங்கிய இந்த கை, இப்போது பத்தும், இருபதும் வாங்குவதற்கு கேவலமாக இருக்கிறது. வீட்டில் என் பெண்டாட்டியிடம், இந்த வெட்கக்கேட்டை சொன்னால், நம்ப மாட்டேங்கிறாள்...' என்று வருத்தமாக கூறியிருக்கிறார் அந்தப் புதிய அதிகாரி. அரசு அதிகாரிகளே... சம்பளம், போனஸ், வருடத்திற்கு ஆறு மாதம் விடுமுறை, பயணப் படி, எல்.டி.சி., மருத்துவ செலவு என்று எத்தனை சலுகைகள் உங்களுக்கு கிடைக்கின்றன. இன்னும் ஏன் ஆலாய் பறக்கிறீர்கள்? உங்களை விட திறமைசாலிகள், குறைந்த சம்பளத்துடனும், சலுகையுடனும் தனியார் துறையில் பணியாற்றுவோர் லட்சோப லட்சம் பேர் உண்டு. லஞ்சம் வாங்குவதே தவறு! அதில் இப்படி குறைக் கூறி, நல்லவர்களையும் கெடுத்து, உங்கள் வேலைக்கு நீங்களே உலை வைத்து கொள்ளாதீர்கள்!— என்.பன்னீர் செல்வம், சென்னை.வித்தியாசமான பிறந்தநாள் விழா!எங்கள் பேத்தியின் பிறந்தநாள் விழாவை, வித்தியாசமாக கொண்டாட விரும்பினோம். வழக்கமாக, அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளிப்போம். இம்முறை, அவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணி, சென்னை அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தை அணுகினோம். அவர்களும் அனுப்ப சம்மதித்தனர். இல்லத்தில் இருப்போர், 51 பேர் அதில்: 40 பேர் வருவர் என்று கூறினர். தனியார் பேருந்தை ஏற்பாடு செய்து, பேத்தியின் பிறந்த நாளன்று, அவர்கள் இல்லத்தை அடைந்து, பிறந்த நாள் கேக் வெட்டி, எல்லாருக்கும் வழங்கி, சுற்றுலா கிளம்பினோம்.சுற்றுலா வராமல், இல்லத்தில் இருந்தோருக்கு, வெளியில் இருந்து அவர்கள் விரும்பியதை சாப்பிட, ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். மொத்தத்தில், அவர்கள் இல்ல கிச்சனுக்கு, அன்று முழுவதும் விடுமுறை.காலை உணவு, விரும்பியதை விரும்பியவாறு சாப்பிட வைத்து, சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றோம். பிறகு முட்டுக்காடு போட்டிங். விருப்பபட்டவர்கள், 16 பேர் மட்டும் போட்டிங் சென்றனர். பின், மகாபலிபுரத்தில் மதிய சாப்பாடு; சைவம், அசைவம் என, விரும்பியதை சாப்பிட வைத்தோம். பின், 6:00 மணிக்கு கடற்கரை, 7:00 மணிக்கு திருவிடந்தை நித்ய பெருமாள் கோவில் தரிசனம். இரவு டின்னரை முடித்து, இல்லம் வந்து, நினைவு பரிசாக அனைவருக்கும் கோ.ஆப்டெக்ஸ் பெட்ஷீட்டை வழங்கினோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதை விட, நாங்கள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், வசதி படைத்தோர், ஆதரவு அற்ற முதியோர்களை, அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்தலாமே! — எம்.மாரியப்பன், சிட்லபாக்கம்.வளர்ப்பதெல்லாம் வளர்ச்சிக்கே!எங்களது குடும்ப நண்பரான தாத்தா ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நலம் விசாரிப்பு, உபசரிப்பு முடிந்ததும், அவரது வீட்டைச் சுற்றிக்காட்ட என்னை அழைத்தார். வீட்டுக்கு வெளியே இருந்த சிறிய இடத்தைக் கூட வெற்றிடமாக விடாமல், நிறைய செடிகள், கொடிகள், மரங்கள் என நட்டு, வளர்த்திருந்தார். ஆங்காங்கே, நாய், பூனை, கோழி, ஆடுகளுக்கென்று சிறுகுடில்களும் அமைத்திருந்தார்.எல்லாவற்றையும் பார்த்து, பிரமிப்போடு விசாரித்து, 'உங்கள் வீட்டில் இடம் இருப்பதால், இதையெல்லாம் வளர்க்க முடிகிறது. எங்கள் வீட்டில் இடம் இல்லையே...' என்றேன் ஏக்கத்தோடு. அதற்கு அவர், இருக்கும் இடத்தில் மீன்தொட்டி, தேனீக்கள் கூடு, பூந்தொட்டி, மூலிகைச்செடி போன்றவற்றை வளர்க்க, ஆலோசனை கூறியதோடு, சில விதைகளும், தொட்டிகளும் எனக்கு தந்து உற்சாகப்படுத்தினார். நானும், தொட்டிகளில் செடிகளை வளர்க்கத் துவங்கி விட்டேன்.குறைந்த செலவில் வீட்டிலேயே பொழுதுபோக்க, பலன்களை பெற, வருமானம் பெற, அதோடு, பல உயிர்களை வளர்க்கிறோம், பராமரிக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியை பெறும் வழியை, அந்த தாத்தா எனக்கு காட்டியுள்ளார்.நானும், என் நண்பர்களுக்கு இதைச் சொல்ல, பலரது வீடுகளில், மீன், புறா, தேனீக்கள், மூலிகை, காய்கறிகள் என, வளர்க்கத் துவங்கி விட்டனர். அவ்வப்போது ஒவ்வொருவர் வீட்டிற்கும், 'விசிட்' செய்து, எங்கள் வளர்ப்பு முறையை பரிமாறிக் கொள்கிறோம்.இதுபோல செய்வதால், வீண் அரட்டை, வெட்டியாக சுற்றித் திரிவது, கெட்ட சகவாசங்கள் எங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுவிட்டன. என்பது உண்மை. 'நாம் பிற உயிர்களை நேசித்து வளர்க்கும் போது, மனோரீதியாக நாமும் வளர்கிறாம்...' என்று தாத்தா கூறியது, எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தான். நீங்களும் முயற்சிக்கலாமே!— எ.சீனிவாசன், மதுரை.விவாகரத்து பெற்றவள் என்றால்...விவாகரத்து பெற்ற இளம் பெண்ணான நான், மறுமணம் செய்து கொள்ள எண்ணி, பத்திரிகையில் விளம்பரம் செய்தேன். அதற்கு பதில் அனுப்பிய ஆண்கள் பலரும் என்னை, 'சின்ன வீடா'க வைத்துக் கொள்ளவும், முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவது தாரமாக வைத்துக் கொள்ளவுமே விரும்பி எழுதியிருந்தனர். விவாகரத்து பெற்ற பெண் என்றால், அவ்வளவு இளக்காரமா என, நான் கொதித்துப் போனேன். என் போல, விவாகரத்து பெற்று சட்டப்படி மனைவியைப் பிரிந்த ஆணுடனோ, மனைவியை இழந்த ஒருவருடனோ வாழ்க்கையைத் தொடரவே, நான் விரும்புகிறேன்.மேட்ரிமோனியல் விளம்பரங்களுக்கு பதில் தரும் ஆண்களே... விளம்பரம் தரும் பெண்களின் மன உணர்வுகளையும், நியாயமான எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு பதிலளியுங்கள். வாழ்க்கையை எதிர்பார்க்கும் அவர்களை, வார்த்தைகளால் புண்படுத்தாதீர்கள்.— டி.கவிதா, மதுரை.பதில்தான் இல்லை!சமீபத்தில், ஒரு வேலையாக கோவைக்கு சென்று, ரயிலில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த, இளம் வயது பெண் என்னுடன் உரையாட ஆரம்பித்தார். 20 ஆண்டுகளுக்கு முன், இலங்கையிலிருந்து அகதியாக வந்து, சென்னை புழலுக்குப் பக்கத்திலுள்ள அகதிகள் முகாமில் தங்கியிருப்பதாக கூறினார். தந்தை திருநெல்வேலித் தமிழர், தாயார் சிங்களவர். ஆயினும், தமிழர்களுக்கு நேர்ந்த பாதிப்பில், புலம் பெயர்ந்து, 13 வயதிலேயே தமிழகம் வந்துள்ளார். பத்து நிமிட உரையாடலில், அவர் கூறிய சில கருத்துகள், சிந்தனையைத் தூண்டின.அவர் கேட்ட கேள்விகள் இதோ:இலங்கையில் இருந்த போது, பள்ளியில் சிறுவயதிலேயே தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களைக் கற்றுத் தந்தனர். அந்தப் பாடல்கள் எல்லாம், இப்போதும் நினைவில் இருக்கிறது. இங்கு தமிழகத்தில், 'எங்கும் தமிழ்' எதிலும் தமிழ் என்று முழங்கும் தமிழக பள்ளிகளில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை, ஏன் சொல்லித் தருவதில்லை? இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு, தமிழ் நூல்களின் பெயர் கூடத் தெரியவில்லையே... இந்த நிலை ஏன்?இலங்கையில், சிறுகுழந்தைகளைக் கூட மரியாதையாக அழைத்துப் பேசுவது வழக்கம். சென்னையில் பெரியவர்களைக்கூட மரியாதையாக பேசுவது இல்லையே... ஏன்?இலங்கையில், இனவெறி அடிப்படையில் சிங்களவருக்குக் கல்வி, வேலை என, எல்லாவற்றிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, தமிழர்களின் அறிவுக்கும், திறமைக்கும் மதிப்புக் கொடுக்காத ஆட்சி நடக்கிறது. இங்கோ ஜாதி அடிப்படையில் கல்வி, வேலை என, பல வழிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டு புத்திக் கூர்மை, செயல்திறன் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இரண்டும் ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் செல்வது போல் தோன்றுகிறதே!இலங்கை வாழ் தமிழருக்கு ஆதரவாக, இங்குள்ளவர் கூட்டம் கூட்டி குரல் கொடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது, தீக்குளிப்பது என்று செய்கின்றனர். யாரேனும், அகதி முகாம்களில் வாழும் மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவுவது, அன்புடன் நம்பிக்கை வார்த்தைகளைப் பேசுவது, வாழ்வில் முன்னேற வழிகாட்டுவது போன்ற செயல்களை ஏன் செய்வதில்லை, என்று கேட்டார்.இந்த கேள்விகளுக்கு பதில் தான் இல்லை.யோசிக்க வேண்டியவர்கள் யோசிப்பரா?— ரஜனி ரஜத், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !