இது உங்கள் இடம்!
தோழியிடம் பேசும் போது...'கோ-எட்' கல்லூரியில், பயிலும் மாணவன் நான். எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தியின் நட்பு, எனக்கு கிடைத்தது. இருவரும் பொதுவான விஷயங்கள் பேசுவதோடு, ஓட்டலில் காபி, டிபன் சாப்பிடுவது வரை பழகினோம். ஒரு நாள் போனில் பேசும் போது, 'எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு நாள் தங்கி விட்டுப் போயேன்!' என, விளையாட்டாக கேட்டேன். 'ச்சீ... ஆசையைப் பாரு... குரங்கு, பிசாசு...' என, என்னை செல்லமாகத் திட்டினாள். உடனே, அவள் என்னோடு நெருக்கமாக பழகுவதாக கருதிய நான், போனிலேயே, ஒரு முத்தம் தருமாறு கேட்டேன். சட்டென போனை, 'கட்' செய்து விட்ட அவள், அதன் பின், என்னோடு பேசாமல், என் நட்பையும் துண்டித்து விட்டாள்.இப்போது நட்பை இழந்த வேதனையில் நான் துடிக்கிறேன். இளைஞர்களே... உங்கள் தோழியரின் நெருக்கத்தை, சரியாக கணிக்காமல், அவசரப்பட்டு இது போல உரிமையோடு பேசி விடாதீர்கள். இது, நட்பையே பாதித்து விடும். பேச்சிலும், செய்கையிலும் சற்று கண்ணியம் இருக்கட்டும். அது, நட்பை பலப்படுத்தும். — ஆர். மோகன்ராம், ஸ்ரீவில்லிபுத்தூர்.தனியார் பள்ளி நிர்வாகிகளே...என் நண்பர் சமீபத்தில், ஒரு பள்ளிக்கு டிரைவர் பணிக்காக, இன்டர்வியூவிற்கு சென்றிருந்தார். இன்டர்வியூவில், முன் அனுபவம், குடும்பநிலை, எதிர்பார்க்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டறிந்த பள்ளித் தாளாளர், கடைசியாக, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று, சில பரிசோதனைகளை செய்து, ரிப்போர்ட் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார்.அதற்கு நண்பர், 'சார், எதற்கு இந்த பரிசோதனைகள்' என்று கேட்டதற்கு, தாளாளர் கூறியது, 'உங்கள் உடலில் ஆல்கஹால் அளவு எப்படி உள்ளது, நீங்கள் தினமும் குடிப்பவரா என்பதையெல்லாம், நாங்கள் அறிந்து கொள்வதோடு, உங்களுக்கு தொற்றுநோய் எதுவும் உள்ளதா என்பதும், எங்களுக்கு தெரிய வேண்டும். ஏனெனில், சிறு குழந்தைகள் உங்களோடு வண்டியில் வரும்போது, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா...' என்று தெளிபடுத்தியிருக்கிறார்.புகைபிடித்தல், மது அருந்துதல், செல்போன் பேசுதல் போன்ற விஷயங்களில் கெடுபிடியாக இருக்கும் பல பள்ளிகள், இது போன்று ஆரோக்கியமான டிரைவர்களை பணி நியமனம் செய்வது, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும்.— வேல்மணி ராஜன், மதுரை.பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் கேவலமா?என் மகளை, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து, ஒரு மாதமாகியும், ஒரு தகவலும் வராமல் இருக்கவே, விசாரிப்பதற்காக வரன் வீட்டுக்குச் சென்றோம். மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்; உதடுகள் உலர்ந்து, நா வறண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தான், பேசவே வருமென்ற நிலைமை. அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தோம்.உள்ளே இருந்தபடியே, எங்களைப் பார்த்துவிட்ட பையனின் அப்பா, கதவை திறக்காமலேயே, 'பையனுக்கு வேறு இடத்துல முடிஞ்சிருச்சி; போங்க போங்க...' என்று அடிக்காத குறையாக விரட்டினார். அவமானத்தில் கூசிப் போனோம்.பிறகு விசாரித்ததில், அவரது மகன் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கி, காதலித்த பெண்ணோடு ஓடிப்போன விஷயம் தெரிய வந்தது. அவரது மகன், யாரோ ஒரு பெண்ணோடு ஓடிப் போனதற்கு, நாங்களா பொறுப்பு?ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும், சாதாரண மனித பண்பு கூட இல்லாத, இது போன்ற பிறவிகளை என்னவென்பது! அடித்துத் துரத்தாத குறையாக எங்களை விரட்டி விட்டவர், ஒரு ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் என்பதுதான் நெருடலான விஷயம். பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா?— பி.இளங்கோவன், கீழ்க்கட்டளை.நடைப்பயிற்சி அணி!சமீபத்தில், என் அத்தை வீட்டில் இரவில் தங்க வேண்டியிருந்தது. காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, 'வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், 'சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, 'என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், 'எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். 'அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.அவர் கூறியது: தன்னந்தனியாக, 'வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், 'வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, 'வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர் வாங்கிட்டு வருவோம். அதோட பலரோடு பழகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்...' என்றார்.தனியாக மைதானத்திற்கோ, மாடியிலோ, 'வாக்கிங்' செல்வதை விட, இதுபோன்று தெருவாசிகளோடு, ஓர் அணியாக, 'வாக்கிங்' செல்வது புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் பகுதியிலும் இதுபோல சிலர் இணைந்து செயல்படலாமே!— எஸ்.கோதை, மதுரை.குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை!சமீபத்தில், என் உறவினர் ஒருவர், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகன் மற்றும் மனைவியோடு, என் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்கள், தங்கள் மகன் பள்ளியில், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசுகள் வாங்குவதை, பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர்.நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய மகன் டாய்லெட் போக வேண்டுமென்று, தன் அம்மாவிடம், 'சிக்னல்' காட்டினான். அந்த சிக்னலுக்கான அர்த்தம், அந்த பெண்மணி, மகனைப் பின் தொடர்ந்து சென்றதும் தான் எனக்கு புரிந்தது. ஆச்சரியத்துடன், உறவினரை பார்த்தேன்.'ஒரே பிள்ளை... செல்லமா வளர்த்துட்டோம். அம்மா ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவான்; இரவில், அம்மா பக்கத்தில் தான் தூங்குவான்; டாய்லெட் போகும்போது கூட, அம்மா அவன் பக்கத்தில் நிற்க வேண்டும். அவள்தான், அவனுக்கு இன்றுவரை கழுவி விடுகிறாள்...' என்று பெருமையாக சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக மாறியது.இம்மாதிரி...கட்டுப்பெட்டியாக வளரும் குழந்தைகள், பிற்காலத்தில் மண வாழ்க்கையில், அம்மாதிரி முழு ஆதரவு கிடைக்காத பட்சத்தில், மனநிலை பாதிக்கப்படும் அபாயம் காத்திருக்கிறது என்பதை, பெற்றோர் உணர வேண்டும்.பெற்றோர்களே...படிப்பு மட்டும், ஒருவனை முழு மனிதனாக ஆக்கிவிட முடியாது. ஒரே குழந்தையாக இருந்தாலும், பருவத்துக்கு ஏற்றபடி, அவர்களை சுதந்திரமாக வளர விடுங்கள். இல்லையென்றால், வீட்டிற்கும், நாட்டிற்கும் தீமைதான் விளையும்!— எஸ்.ராமன், சென்னை.