இது உங்கள் இடம்!
கட்சி சண்டையில் மாடுகள் வேண்டாமே!விவசாயத்திற்கும், வண்டி இழுக்கவும் உதவும் மாடுகளின் கொம்பில், சிலர் கட்சிக் கொடிகளின் வண்ணத்தைப் பூசுவதோடு, கட்சி கொடியையும் பறக்க விடுகின்றனர். சமீபத்தில், எங்கள் ஊருக்கு அருகில், இரு கட்சிக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது, கட்சி சாயம் பூசியிருந்த, ஒரு மாட்டை வெட்டிக் கொன்று விட்டனர். அரசியல் தகராறைக் காரணம் காட்டி, ஒரு வாயில்லா ஜீவனை கொல்வது எந்த வகையில் நியாயம்? உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு, அப்பாவி மாடுகளா பலியாவது?மாடுகளின் கொம்புகளில் கட்சிகளின் வண்ணம் பூசியிருந்தாலோ, கட்சிக் கொடி கட்டியிருந்தாலோ, அவர்களுக்கு, அரசு, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அப்போது தான், இம்மாதிரி கொடூரமான காரியங்களில், இனி, ஈடுபட மாட்டார்கள்.அரசியல் கட்சிகளின் அல்லக் கைகளே... உங்கள் அரசியல் சண்டைகளில், நமக்காக பாடுபடும் வீட்டு விலங்குகளை பலிகடா ஆக்காதீர்கள்!- சி.வையாபுரி, கம்பம்.கல்யாணம் என்றால் அவதிதானா?எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவருக்கு, கல்யாணமாகி ஐந்து மாதங்கள் ஆகின்றன. அவர், தன் தோழிக்கு கடிதம் எழுதும் போது, 'நான் கல்யாணம் செய்து கொண்டு அவதிப்படுகிறேன், அது மாதிரி, நீயும் அவசரப்பட்டு கல்யாணம் செய்து கொண்டு, அவதிப்படாதே...' என்று எழுதியிருந்தார்.அதே போல், என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வந்திருந்த அவர், மணமக்கள் அருகில் நின்று, 'இனிமேல் அடிமைதான் போ...' என்றார். இரு மனம் கலந்த திருமணம் புனிதமானது. அதை, ஒரு சிலரால் போற்றி காக்க முடியவில்லை என்றால், நம்முடைய வாழ்க்கையை போல் தான், எல்லாருடைய வாழ்க்கையும் இருக்கும் என்று நினைப்பது தவறு.திருமண வாழ்வை, குதூகலத்துடன் ஆரம்பிக்க இருக்கும் புதுமண தம்பதிகளிடம், மணவாழ்வை பற்றி, இழிவாக பேசுவது, முறையற்ற, அநாகரிகமான செயல்!- மலர்விழி ரங்கசாமி, விருதுநகர்.நோயாளியைப் பார்க்க மருத்துவமனைக்கு செல்லும் போது...உறவினர் ஒருவர், உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க, பழங்கள் வாங்கிக் கொண்டு, மருத்துவமனையில், துணைக்கு இருக்கும் உறவினருக்கு, சாப்பாடும் எடுத்துச் சென்றேன். உடல்நிலை சரியில்லாதவருக்கு, நாங்கள் பார்க்க வந்ததில் சந்தோஷம். உடனிருந்த உறவினருக்கு, நாங்கள் வீட்டு சாப்பாடு கொண்டு சென்றது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. 'ஒரு வாரமாக நோயாளிக்கு கொடுக்கப்படும் பிரட், கஞ்சி போன்ற உணவையே சாப்பிட்டு, நாக்கு செத்து விட்டது. இன்று தான், வயிறார சாப்பிட்டேன்...' என்றார்.எனக்கும், சந்தோஷமாக இருந்தது. அது முதல், மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க சென்றால், உடனிருப்போருக்காக சாப்பாடோ, சிற்றுண்டியோ எடுத்துச் செல்வது வழக்கமாகி விட்டது.- எஸ்.விஜயலட்சுமி, கோச்சடை.