இது உங்கள் இடம்!
மாற்றி யோசி... வாழ்க்கை வளமாகும்!என் நண்பர், உணவு விடுதி துவங்கினார். காலை டிபன் செய்ய மட்டுமே ஆள் கிடைத்தனர். மதிய உணவு செய்ய போதிய ஊழியர்கள் கிடைக்கவில்லை. இதனால், தன் அக்கம், பக்கத்து வீட்டு நண்பர்களின் மனைவியரிடம், தினமும், 50 நபர்கள் சாப்பிடக் கூடிய அளவு சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், வத்தல் என, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வீட்டினரிடம் செய்து தரக் கேட்டு, அதற்குரிய பணத்தை தந்து விடுவதாக கூறினார்.இதன்படி தினமும், அவரவர் வீட்டில் எல்லாம் தயார் நிலையில் இருக்கும். காலை, 11:00 மணி அளவில், எல்லாருடைய வீட்டிற்கும் வண்டியில் சென்று எடுத்துக் கொள்வார். இப்போது, மதிய உணவு வியாபாரமும் மும்மரமாக நடைபெறுகிறது. இதன் மூலம் வீட்டிலிருக்கும், 20 பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். தங்கள் வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதால், பெண்களும் உற்சாகமாக வேலை செய்கின்றனர்.நண்பரின் மாற்றி யோசித்தல் சிந்தனை, அவர் வாழ்க்கையை பிரகாசிக்க செய்ததோடு, பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளது. இது, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உற்சாக பூஸ்டாக இருக்கட்டுமே!— எம்.எஸ்.வி. அருண், புளியங்குடி.இப்படியும் மோசடியா?சமீபத்தில், எங்கள் வீட்டு, தரைத் தொடர்பு தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 'பி.எஸ்.என்.எல்.,லில் இருந்து பேசுறோம்; உங்க, 'பிராட்பேண்ட்' சரியாக வேலை செய்கிறதான்னு பாருங்க...' என்றனர். உடனே நான் கம்ப்யூட்டரை, 'ஆன்' செய்து பார்த்தேன். எப்போதும் போலவே இருப்பதாக, தோன்றியது. லயனில் இருந்த பெண், 'உங்கள், 'மோடம்' ஸ்லோவாக இருக்கிறது. நிறைய இடங்களிலிருந்து புகார்கள் வருது. அதனால புது, 'மோடம்' சப்ளை, செய்ய உத்தரவிட்டிருக்காங்க. இது, பழைய மோடத்தை விட, மூன்று மடங்கு வேகம் அதிகம். அபாரமாக டவுன்லோட் செய்யும். விலை, 2,900 ரூபாய். உங்க பழைய, மோடத்துக்காக, 300 ரூபாய் தள்ளுபடி செய்து, 2,600 ரூபாய் கொடுத்தால் போதும்...' என்றார்.'வழக்கமாக பி.எஸ்.என்.எல்.,லில் பில்லில் தானே தொகையை கூட்டிக் கொள்வர்...'என்றேன்.அதற்கு அந்தப் பெண், 'அப்படித் தான் இதுவரை செய்து வந்தனர். ஆனால், தற்போது அம்முறையை மாற்றி விட்டனர்; எங்கள் பிரதிநிதியிடம் காசோலையாகவோ, பணமாகவோ கொடுக்கலாம். அவர் உங்களை தொடர்பு கொள்வார்...' என்று கூறி, தொடர்பை துண்டித்து விட்டார்.சிறிது நேரத்தில், ஒரு நபர் மொபைலிலிருந்து போன் செய்து, எங்கள் வீட்டுக்கு வழி கேட்டார். அவரிடம், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் ஐ.டி., கார்டு கொண்டு வரச் சொன்னேன். அவர், 'இன்னும் மூன்று மாதங்களுக்குப் பின் தான் ஐ.டி., கார்டு கொடுப்பர்...' என்று சொல்லி, வைத்து விட்டர்.உடனே நான், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'அம்மாதிரி யாரையும் நாங்கள் அனுப்பவில்லை...' என்று கூறி, அந்த நபரின் முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டனர்.மோசடிகள் பல ரகம்; வாசகர்களே... ஜாக்கிரதை!— ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.அழைப்பிதழ் வேண்டாமே!வசதி படைத்த என் நண்பனுக்கு திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பான் என்று எதிர்பார்த்திருந்த போது, அனைவருக்கும் ஒரு குறுஞ்செய்தி மட்டுமே வந்தது. 'அழைப்பிதழ் அடிக்கிற காசை மிச்சம் செய்துட்டியா...' என்று, அவனை கிண்டல் செய்தோம்.அதற்கு அவன், 'நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அடித்தேன்; மற்றவர்களுக்கெல்லாம் குறுஞ்செய்தி தான். கல்யாணம் முடிஞ்சவுடன், அழைப்பிதழை கிழிச்சு, குப்பையில போட போறோம். அதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்யணும்... ஒரு சிலர், தங்களோட அந்தஸ்தை காட்டுறதுக்காக அழைப்பிதழுக்கு நிறைய செலவு செய்றாங்க. இந்நிலை மாறணும்.'நண்பர்கள் எல்லாம், 'அழைப்பிதழ் கொடுத்தால் தான் வருவேன்'னு அடம் பிடிக்க மாட்டாங்க. அப்படி அடம் பிடிச்சா அவன் நண்பனே கிடையாது. அழைப்பிதழுக்காக ஒதுக்கியிருந்த பணத்தை, பக்கத்திலுள்ள ஆதரவற்ற இல்லத்திற்கு கொடுத்துட்டேன்...' என்றான்.நண்பனின் வழியை நீங்களும் பின்பற்றலாமே!— ஜெ.கண்ணன், சென்னை.