இது உங்கள் இடம்!
உடைமைகளின் மீதும், ஒரு கண்!சமீபத்தில் ஒரு நாள், இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், வேகத் தடை மீது மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பலமான அடி எதுவும் இல்லை என்றாலும், கீழே விழுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.காலை நேரம் என்பதால், சாலையில், நிறைய வாகனங்கள் சென்றபடி இருந்தன. என் வண்டியை நிறுத்தி, பாதசாரி ஒருவரின் உதவியுடன் அவரை தூக்கி நடைபாதையில் படுக்க வைத்தேன். அதற்குள், போக்குவரத்து காவலர்கள் வந்து விட்டனர்.இனி, அவர்கள் பார்த்துக் கொள்வர் என்று எண்ணி, என் வாகனத்தை எடுக்க வந்தேன். என் வாகனத்திலேயே சாவி இருப்பதை பார்த்து விட்ட ஒருவன், வாகனத்தை கிளப்ப முயற்சித்து கொண்டிருந்தான். மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று, அவனை தடுத்து நிறுத்தினேன். 'உங்கள் வாகனம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால், அதை ஓரமாக நிறுத்துகிறேன்...' என்று சாக்கு போக்கு கூறினான் அந்த கயவன்.'வண்டியை ஏன் ஓட்ட முயற்சி செய்தே... வண்டியை தள்ளி போய் ஓரமாக நிறுத்தலாமே...' என்ற என் கேள்விக்கு, அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு நொடி தாமதித்திருந்தால், என் வண்டி காணாமல் போயிருக்கும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவது மனிதாபிமானம் தான்; அதே நேரம், உங்கள் உடைமைகளின் மீதும், ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.— ஜெ.கண்ணன், சென்னை.ஆசிரியையின் புலம்பல்!அரசுப் பள்ளி ஆசிரியை நான்; சமீபத்தில் ஒருநாள், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு மாணவி, என்னிடம் வந்து, பள்ளிக்கு வரும் வழியில், மாதாந்திர பிரச்னை ஏற்பட்டு விட்டதாகவும், அதனால், கடும் வயிற்று வலி உள்ளதாகவும் கூறி, வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்டாள்.நானும், உண்மையென நம்பி, அவளை அனுப்பி வைத்தேன். பின்பு தான் தெரிந்தது, அவள், தன் பாய் பிரண்டுடன் சுற்றுவதற்காக, இப்படி பொய் சொல்லி இருக்கிறாள் என்று! அவள் படிப்பதோ எட்டாம் வகுப்பு; பாய் பிரெண்டோ, வேறொரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு!'ஏன் படிக்கல?'ன்னு கேட்டாலே, மாணவ - மாணவியர் தற்கொலை செய்து, எங்கள் மீது பழி போடும் காலம் இது. நான் கண்டிக்கப் போக, அவள் எக்குதப்பாக ஏதாவது செய்து, பழி, என் மீது விழுந்து விட்டால் என்ன செய்வது என்று, கஷ்டப்பட்டு என்னை அடக்கி கொண்டேன். இப்படியொரு தர்மசங்கடம், ஆசிரியர்களான எங்களுக்கு தேவை தானா?— சுகுணா ரவிச்சந்திரன், மதுரை.டாக்டர் செய்த ஐடியா!சமீபத்தில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்கவே, வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. அப்போது, 'ரிசப்ஷனிஸ்ட்' பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தை, ஆளுக்கொன்று அளித்து, டாக்டரின் அழைப்பு வரும் வரை, படித்துக் கொண்டிருக்கும்படி கூறினார்.அப்புத்தகத்தில், உடல் நலம் மற்றும் அதைப் பேணிக் காப்பது குறித்த தகவல்களும், பலவித நோய்கள், அதைத் தடுக்கும் வழிகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் என்று விரிவான விளக்கங்கள் இருந்தன.காத்திருப்போர் சலிப்படையாமல் இருக்கவும், அவர்களுக்கு, உடல் நலத்தில் அக்கறையை ஏற்படுத்தவும், அந்த மருத்துவமனை பின்பற்றும் வழிமுறையை, மற்ற மருத்துவமனைகளும் பின்பற்றலாமே!— கே.பாலமுருகன், லாஸ்பேட்டை.பெயரும் மொபைல் நம்பரும்!சமீபத்தில், ஆட்டோ ஒன்றில் பயணித்தேன். வண்டியில் ஏறி அமர்ந்ததும், டிரைவர் ஒரு நோட்டை நீட்டி, என் பெயரையும், மொபைல் நம்பரையும் எழுதுமாறு கூறினார். எதற்கு என கேட்டதற்கு, 'தினமும் நிறைய பேர் பயணிக்கின்றனர்; அவர்கள், நகை அல்லது உடைமைகள் எதையாவது வண்டியில் தவற விட்டுச் சென்றால், தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிப்பதற்காக...' என்றார்.நல்ல யோசனையாக இருந்ததால், ஆட்டோ டிரைவரை பாராட்டினேன். உடனே, அவர் தன், 'விசிட்டிங் கார்டை' தந்து, 'தேவைக்கு அழையுங்கள்...' என்றார்.அவரது அணுகுமுறை கண்டு வியந்தேன். இதை, அனைத்து ஓட்டுனர்களும் கடைப்பிடிக்கலாமே!— எல்.வெங்கடேசன், திருவண்ணாமலை.