உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

'சபலிஸ்ட்'டுகள் ஜாக்கிரதை!சமீபத்தில், தனியார் சொகுசு பஸ்சில் பயணித்தபோது, மேல் படுக்கையில் படுத்திருந்த ஒரு ஜோடிக்கு, வாய் தகராறு ஏற்பட்டு, பின், அது கைகலப்பாக மாறியது.அப்போது, இரவு, 11:00 மணி இருக்கும். கைகலப்பை பார்த்த, ஓட்டுனர், பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டார். விசாரித்ததில், சம்பந்தப்பட்ட நபர், மது அருந்தியிருந்தார். அந்த பெண், 'பலான' ஆள் என, தெரிய வந்தது.அவர்கள் படுத்திருந்த இடத்தில், ஆணுறை, மது பாட்டில் போன்றவை இருந்ததை கண்டு, அனைவரும் முகம் சுளித்தோம்.இப்பிரச்னையால், மற்றவர்களுக்கு கால தாமதம் ஏற்பட்ட நிலையில், பஸ்சை காவல் நிலையத்திற்கு விடுமாறு கூறினோம். காவல் நிலையம் சென்றால், 'பஸ் கம்பெனி பெயர் கெட்டு விடும்...' என்று, ஓட்டுனர் கூற, அப்பெண்ணை, வேறு ஒரு இருக்கையில் அமர வைத்த பின், பஸ் புறப்பட்டது.இச்சம்பவம், அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை தந்தது. போலீசாருக்கு பயந்து, இதுபோன்ற சொகுசு பேருந்துகளை தேர்வு செய்கின்றனர், 'சபலிஸ்ட்'டுகள். இதனால், பாதிக்கப்படுவது, சக பயணியர் தான்.ஆகவே, பஸ் நிர்வாகம், இருக்கை முன் பதிவின் போதே, தீர விசாரிப்பதோடு, 'இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்டோரை, காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்...' என, கூற வேண்டும்.காலம் போற போக்கை பார்த்தால், இதுபோன்று, படுக்கை வசதியுடைய பஸ்சில், கொலை கூட நிகழ வாய்ப்புள்ளது; ஜாக்கிரதை!- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை, கன்னியாகுமரி மாவட்டம்.இளநீர் வியாபாரியின் சமயோஜிதம்!சமீபத்தில், ரயிலில் பயணித்த போது, இளநீர் வியாபாரி ஒருவர், குட்டி குட்டி பானைகளில் இளநீரை நிரப்பி விற்றுக்கொண்டிருந்தார்.ரயில் பெட்டியின் ஜன்னல் வழியாக, வெட்டிய இளநீரை கொடுக்க முடியாது என்பதால், ரயிலில் பயணம் செய்வோர் வாங்கி பருக ஏற்ற வகையில், சிறு சிறு பானைகளில் நிரப்பி விற்றார். அதுமட்டுமின்றி, கோடை வெயிலின் தாக்கத்தால், ஜூஸ் என்ற பெயரில், கண்டதை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து, மக்களை ஏமாற்றுகின்றனர், வியாபாரிகள். இவர்கள் மத்தியில், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்காத வகையில், சிறு சிறு பானைகளில் விற்கும் இளநீரை, நான் மட்டுமின்றி, பலரும் வாங்கி பருகினோம்; வெயிலுக்கு இதமாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது.இளநீர் வியாபாரியின் சமயோஜிதத்தை கண்டு பெருமிதம் அடைந்தேன்.எம்.லீலா, கோவை.முயற்சி திருவினையாக்கும்!சமீபத்தில், குடும்பத்தோடு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம். சாமி கும்பிட்டு, வெளி பிரகாரங்களை சுற்றி வரும்போது, அங்கு ஒரு பெண், வழிகாட்டியாக, வெளிநாட்டு பயணிகளுக்கு, கோவிலின் சிறப்புகளை ஆங்கிலத்தில் விளக்கிக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு என் தோழியை போல் இருக்கவே, அருகில் சென்று பார்த்தேன்; அவளே தான்.ஆரம்ப பள்ளி படிப்பை கூட முடிக்காத அவள், ஆங்கிலத்தில் சரளமாக விளாசுவதை அறிந்து ஆச்சரியப்பட்டு, அவளிடம், போன் நம்பரை வாங்கி, வீட்டிற்கு வந்தவுடன் பேசினேன்.'எப்படிடீ இது சாத்தியமாயிற்று...' என, கேட்டேன்.'ஆரம்பத்தில்... ஆங்கிலோ - இந்தியன் வீடு ஒன்றில் வேலை செய்தேன். அவர்கள் பேசும் ஆங்கிலத்தை கேட்டு கேட்டு, ஆங்கிலம் சரளமாக பேச வந்தது. ஆனால், எழுத அப்போது, தெரியாது...' என்றாள்.மீனாட்சி அம்மன் கோவிலில், வழிகாட்டியாக வேலை பார்த்த அவள் கணவர் இறந்து விட, குடும்ப சுமை முழுவதும் இவள் மேல் விழ, வேறு வழியின்றி, இந்த வேலைக்கு வந்து விட்டாளாம். வழிகாட்டுனர் சங்கத்தில் ஓரளவு பொளுதவியும், பயிற்சியும் கொடுத்துள்ளனர்.இன்று, பெருமுயற்சி எடுத்து, ஆங்கிலத்தில் எழுதவும் கற்றுக் கொண்டதாகவும் கூறினாள். அவளை, மனமார பாராட்டினேன்.பெண்களே... நிறைய படிக்கவில்லையே... எனக்கு எந்த வேலையும் செய்ய தெரியாதே என, தாழ்வு மனப்பான்மையோடு இல்லாமல், முயற்சி செய்தால், முடியாதது எதுவுமில்லை. வே.செல்வரதி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !