இது உங்கள் இடம்!
வருமுன் காப்போம்!காய்கறி வாங்க, பஜாருக்கு கிளம்பினேன். போகும்போது, பக்கத்து வீட்டு மாமியையும் அழைத்தேன். மாமியோ, 'கொஞ்சம் இரு, இதோ வந்துடறேன்...' என்றவாறு, அவர் கழுத்தில் இருந்த கனமான தங்க செயினை கழற்றி, பீரோவில் பூட்டினார்.'ஏன் மாமி, செயினை கழற்றிட்டீங்க...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'காலம் கெட்டுக் கெடக்குது... எவன், எந்த நேரத்தில் வந்து செயினை அறுத்துண்டு ஓடுவான்னு தெரியாது...' என்றார்.அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை, ஆள் அரவமற்ற தெரு வழியாக சென்றபோது உணர்ந்தேன்.பைக்கில் வந்த ஒருவன், மாமியையும், என்னையும் உற்று கவனித்தான். மாமியின் வெறுங் கழுத்தையும், பேன்சி மணிமாலை அணிந்த என் கழுத்தையும் பார்த்தவன், வேகமாக சென்று விட்டான்.வாசகர்களே... திருட்டு, வழிப்பறி பெருகிவிட்ட இக்காலத்தில், திருடர்களை குற்றம் சொல்லி பிரயோஜனமில்லை... நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்!— ஜி.ரிஹானா பர்வீன், வேலுார்.புதிய உடை அணிந்து பார்ப்பதை தவிர்க்கலாமே!மகளுடைய கல்லுாரி தோழியின் திருமணத்திற்கு, செல்ல நேர்ந்தது. அங்கு, அவளுடன் படித்த சக தோழியர் பலரும் வந்திருந்தனர். அவர்களை, என் மகள் அறிமுகம் செய்து வைத்தாள். 'பேஸ் புக், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்'களில், மகளின் தோழி ஒருத்தியை, விலை உயர்ந்த மற்றும் நவநாகரிக உடையுடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், அவளோ, திருமணத்திற்கு மிக எளிமையான உடையணிந்து வந்திருப்பதை பற்றி விசாரித்தேன். நகரில் உள்ள பெரிய ஜவுளிக்கடை, வணிக வளாகம் ஆகியவற்றிற்கு செல்லும்போது, அளவு சரியாக இருக்கிறதா என்று விதவிதமான ஆடைகளை அணிந்து பார்ப்பது போல், தன் மொபைல் போனில், 'செல்பி' எடுத்து வந்து, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்'கில், 'ஸ்டேட்டஸ்' பதிவு செய்வதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதேபோல், பலரும், மேற்படி உடைகளை அணிந்து பார்ப்பதால், சரும நோய், தொற்று பிரச்னை வர வாய்ப்புள்ளது. உடை மாற்றும் விஷயத்திலும், பெண்களுக்கு பல பிரச்னை வருகிறது. எனவே, ஜவுளி நிறுவனம் மற்றும் வணிக வளாகம் போன்றவற்றில், பெண்கள் உடை வாங்குவதை உறுதி செய்த பின், அணிந்து பார்க்க அனுமதிக்கலாமே!— பி.அகிலா, திண்டுக்கல்.அன்பை பகிரும், மக்கள் சுவர்!சமீபத்தில், கோவை சென்றபோது, பேருந்துக்காக காத்திருந்தோம். அருகில் இருந்த சுவரில், மர தடுப்புகளால் ஆன, அலமாரி ஒன்று இருந்தது. அதில், பழைய துணிகள், பொருட்கள் காணப்பட்டன. என்னவென்று சுற்றுமுற்றும் பார்த்தபோது, அந்த சுவரிலேயே, 'மக்கள் சுவர்' என்ற வாசகத்தின் கீழ், 'அன்பை பகிர்வோம்' என்று எழுதப்பட்டிருந்தது.மேலும், 'தங்களுக்கு தேவையற்றதை விட்டுச் செல்க, தேவையானதை பெற்றுச் செல்க... ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், பொம்மைகள், முதலுதவி சாதனங்கள் மற்றும் இன்னபிற பயனுள்ள பொருட்கள்...' என எழுதப்பட்டிருந்தது.நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிலர், பொருட்களை வைத்துச் செல்வதும், சிலர், எடுத்துச் செல்வதுமாக இருந்தனர்.பார்க்க, மனதுக்கு இதமாக இருந்தது. எல்லா ஊர்களிலும், தன்னார்வலர்கள், இதுபோன்று மக்கள் சுவர்களை ஏற்படுத்தினால், நல்ல பொருட்கள் குப்பைக்கு செல்வது குறையும், தேவையானோருக்கு, தேவைப்படும் பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்பாக அமையும்.— எஸ்.மங்கையர்கரசி, நெய்வேலி.