முதல் அடி, முன்னேற்றத்தின் மணிமுடி!
சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில், 'டெம்போ' வாகனம் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து சில இளைஞர்கள் இறங்கினர். அவர்களை எதிர்பார்த்திருந்தவர்கள் போல், அடுக்கு மாடியில் குடியிருந்த பலர், கார், சைக்கிள் மற்றும் டூ - வீலர்களை தள்ளி வந்தனர். அவர்களிடம், இளைஞர் ஒருவர், ஏதோ பேசியபடி, 'டோக்கன்' தந்தார். அதைப் பெற்றுக் கொண்டதும், வந்தவர்கள், தத்தம் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர்.வந்த இளைஞர்களில் இருவர், சைக்கிள் ரிப்பேர், காற்றடித்தல், துடைத்தல் என, வேலையில் இறங்கினர். மற்றவர், இரு சக்கர வாகனங்களில், வாடிக்கையாளர் கூறிய பழுதுகளை நீக்கியபடியும், 'பஞ்சர்' ஆன 'வீலை' கழற்றி, சரி செய்து மாட்டினர்.'வேக்யூம் கிளீன'ரால், காரின் உட்புறத்தை சுத்தம் செய்தனர். பின், 'வாட்டர் வாஷ்' செய்யப்பட வேண்டிய கார், டூ - வீலர்களையும் செய்து முடித்து, அந்த இடத்தையும் சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவினர்.இத்தனை விஷயங்களையும், ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், 'எப்படி யோசிக்கிறாங்க பார்த்தீங்களா... மொபைல் போனில் அழைத்தால், நம்மை தேடி வரும் உணவுப் பொருள் மற்றும் 'கால் டாக்சி' போல், இவர்களும் அழைத்த நேரத்திற்கு வருகின்றனர். வாகனத் துாய்மை, பழுது நீக்கம் என, நம் கண் முன்னே அனைத்து வேலையையும் முடித்துக் கொடுப்பதால், நம்பகத் தன்மையையும் பெற்று விட்டனர்.'உச்சம் தொட, முதல் அடி முக்கியம் என்பதைப் போல், முதலில், 'டெலிபோன் கிளீனிங் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் துடைத்து தருகிறோம்...' என, ஆரம்பித்தவர்கள் தான், இன்று, இந்த நிலைக்கு வளர்ந்துள்ளனர். தங்கள் தொழிலுக்கு தேவையானதை, ஒவ்வொன்றாய் வாங்கி, அனைத்தும், தங்கள் வாகனங்களில் வைத்துள்ளனர்...' என்றார், நண்பர்.முயற்சி செய்தால், முடியாதது இல்லை. வேலை இல்லை என்று புலம்பாமல், இதுபோல, யோசித்து செயல்படலாமே!
தி.பூபாலன், ராணிப்பேட்டை.மருத்துவர்களின் கர்ப்பப்பை வேட்டை!
என் வயது, 72. சிறுநீர்ப்பை இறக்கக் குறைபாட்டை சரி செய்ய, மதுரையில் உள்ள, பிரபல மருத்துவமனைக்கு கணவருடன் சென்றேன். என்னை மேலோட்டமாக பரிசோதித்த மருத்துவர், 'பையை துாக்கி வைத்து தைத்து விடலாம்...' என்றார்.மேலும், 'கர்ப்பப்பை இறங்கியுள்ளது. அதில் புண்கள் உள்ளன. ஆகவே, கர்ப்பப்பையை ஆபரேஷன் மூலம் உடனே அகற்றாவிடில், அது, புற்றுநோயாகவும் மாறும் அபாயம் உள்ளது...' என்றும், அச்சுறுத்தினார். 70 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பதால், உடனே முடிவு செய்யாமல் தாமதித்தோம்.அதற்குள் மருத்துவரின் ஏஜன்ட், 'பணத்தை பற்றி யோசிக்க வேண்டாம். பிடித்தம் இல்லாமல், மருத்துவக் காப்பீட்டு தொகையில், 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளலாம்...' என்று, ஆசை வார்த்தை காட்டினார்.அதனால், காப்பீட்டுத் தொகை கணிசமாக குறைந்து விடும் என்பதால், மாற்று ஆலோசனை பெற, வேறொரு மருத்துவரை அணுகினோம்.'ஸ்கேன்' செய்து பார்த்த போது, புண்கள் உள்ளதாக, முன்னவர் கூறியது, அப்பட்டமான பொய் என்பது தெளிவாகியது. மேலும், 'கர்ப்பப்பை மிக குறைந்த அளவே இறங்கி உள்ளது. அதில், இன்னும், நான்கு நிலைகள் உள்ளன; இப்போதைக்கு, ஆபரேஷன் தேவையில்லை...' என்றார். அத்துடன், சிறுநீர்ப்பை கோளாறுக்கு, எளிய பயிற்சியும் கற்றுக் கொடுத்தார். இப்போது, இரண்டு ஆண்டுகளாக ஒரு உபத்திரவமும் இல்லை.பணத்தாசை பிடித்த மருத்துவர்கள், தம்மிடம் வரும் வயதான பெண் நோயாளிகளை குறி வைத்து, ஆபரேஷன் என்ற பெயரில், அவர்களின் கர்ப்பப்பையை, ஏஜன்டுகளின் உதவியுடன் வேட்டையாடுவது, இந்த நிகழ்ச்சிக்கு பின் வெளிச்சத்துக்கு வந்தது.கடவுள் படைத்த அனைத்து உறுப்புகளுக்கும், நம் ஆயுள் உள்ளவரை, ஏதாவது பயன்பாடு இருந்தபடியே இருக்கும். இந்த விஷயத்தில், அவசரப்பட்டு நடவடிக்கையில் இறங்கி, ஆபரேஷன் என்ற பெயரில் உறுப்புகளை இழப்பதால், ஆரோக்கியம் கெடுவதுடன், பக்க விளைவுகளால் அவதிப்படவும் நேரிடும்.வயதான பெண்கள், இதை உணர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படுவது, அவர்கள் உடல் நலத்துக்கு, 'பர்சு'க்கும் நல்லது.
சு.வசந்தா, மதுரை.வேலை தான் முக்கியம்; தோற்றம் அல்ல!
பெண்கள் அழகு நிலையம் நடத்தி வரும், தோழியை சந்திக்க, அங்கு சென்றேன். அவளது கடையில் வேலை செய்யும் திருநங்கை, வேலை நேரம் முடிந்ததும், தோழியிடம் சொல்லி கிளம்பினார்.தோழியிடம், 'அழகு நிலையத்தில், அழகான பெண்ணை வேலைக்கு வைக்காமல், திருநங்கையை வைத்திருக்கிறாயே... சரிபடுமா...' என்றேன்.'இதற்கு முன், ஒரு அழகான இளம் பெண்ணை வேலைக்கு வைத்திருந்தேன். கடையில் இருக்கும், 'காஸ்ட்லி' ஆன அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது மற்றும் நான் இல்லாத சமயங்களில், அவரது தோழியரை அழைத்து வந்து, 'மேக் - அப்' போடுவது என்று, அவள் நிறைய செலவு வைத்தாள். 'எனவே, அவளை, வேலையை விட்டு நிறுத்தினேன். அச்சமயம் வேலை கேட்டு வந்த, இந்த திருநங்கையை சேர்த்துக் கொண்டேன். இவரிடம், தொழில் சுத்தமும், நேர்மையும், மேலும், நான் வெளி வேலையை முடித்து வர நேரமாகும் சமயங்களில், பள்ளியிலிருந்து வரும் என் குழந்தையை பொறுப்புடன் கவனித்தும் கொள்கிறார். 'என்னை பொறுத்தவரை, அன்பும், நேர்மையும் தான் உண்மையான அழகு. அந்த வகையில், திருநங்கை அழகாக தெரிந்ததால், மனதுக்கு பிடித்திருந்தது. இவரே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்...' என்றாள், தோழி.
மு. முனீஸ்மாலா, சிவகாசி.