இது உங்கள் இடம்!
திருமணத்திற்கு முன்பே...நண்பரின் மகளுக்கு, வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு நிச்சயமாகி, தடபுடலாக ஒன்பது மாதங்களுக்கு முன், நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணை, வெளிநாடு அழைத்துச் செல்ல, பாஸ்போர்ட், விசா வாங்குவதற்கு ஏற்பாடானது. அதனால், கணவன் - மனைவி அந்தஸ்தில், பாஸ்போர்ட், விசா வாங்க வேண்டுமென்பதால், திருமண தேதிக்கு முன்பே, திருமணத்தை, சட்டப்படி பதிவு செய்து கொண்டனர்.ஆனால், திருமணத்திற்கு முன்பே, மாப்பிள்ளை அகால மரணமடைந்தார். திருமணம் ஆகாமலேயே, பதிவுத் திருமணம் காரணமாக, நண்பரின் மகள், விதவையானார். மகளுக்கு, மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடானது. சட்டப்படி, இந்த பதிவுத் திருமணம் குறுக்கிட்டது.ரத்து செய்யவும் முடியாது. இரண்டாவது திருமணப் பதிவின் போது, நண்பரின் மகள், கணவரை இழந்தவர் என்ற நிலையில், அதற்கான சான்றுகள் கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல். இவ்விஷயத்தை, தற்போதைய மாப்பிள்ளை வீட்டாரிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தனர்.மாப்பிள்ளை வீட்டு பெரியவர்களிடம், இவ்விஷயத்தை விளக்கி, சிக்கலைத் தீர்த்து வைத்தேன். ஆகவே, திருமணத்திற்கு முன், திருமணத்தை பதிவு செய்ய வேண்டாம். பதிவுத் திருமணம் என்பது, சட்டப்படியான திருமணம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே!- டி.கே. ஹரிகரன், மதுரை.தலைமை தந்த தன்னம்பிக்கை!பிளஸ் 2வில் சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தன் முயற்சியால், தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருக்கும் ஒருவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், மதிப்பெண் சான்றிதழை முகநுாலில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த என் மகன்கள், 'வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய, நாம் பெற்ற மதிப்பெண் தடையல்ல. விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால், எந்த உயரத்தையும் எட்டி விடலாம்...' என்பது போன்று, பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இதைக் கேட்ட நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மேலும், இது போன்ற உத்வேகம் இளம் உள்ளங்களில் உருவாக காரணமான, அந்த அதிகாரியின் தன்னலமற்ற தலைமை பண்பிற்கு தலை வணங்குகிறேன்.- அ. ஆஞ்சலோ, சென்னை.ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்?நண்பர் ஒருவர், கணினியில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உடையவர். ஒருநாள், நண்பரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 'நான் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென, மொபைல் போன் திரையில், காவல் துறையிடமிருந்து ஒரு செய்தி வந்தது. 'அதாவது, 'நீங்கள் ஆபாச படங்கள் பார்ப்பதால், உங்களுக்கு அபராதம் விதித்திருக்கிறோம். உங்கள் இணைய முகவரியை முடக்கியுள்ளோம். கிரெடிட் கார்டு மூலம், கீழ்காணும் தொகையை உடனே செலுத்துங்கள். ஒரு மணி நேரத்திற்கு பின், உங்கள் இணையம் செயல்பட துவங்கும்...' என்று செய்தி வந்தது. இப்போது நான் என்ன செய்ய...' என்றார்.'உங்கள் மேல், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், இப்படியெல்லாம் செய்தி அனுப்ப மாட்டார்கள். அவர்களுடைய நடவடிக்கை வெளிப்படையாக இருக்கும். இதை நம்பி, பணத்தை கட்டி விடாதீர்கள். 'நீங்கள், ஆபாச படம் பார்ப்பதை, ஒரு கும்பல் மோப்பம் பிடித்து, இப்படி ஒரு செய்தியை அனுப்பி, உங்களை ஏமாற்றப் பார்க்கிறது. ஆபாச படங்கள் பார்ப்பதால் தான், இப்படிப்பட்ட பிரச்னை வருகிறது. இனி, அதுபோன்ற இணைய தளங்களின் பக்கம் எட்டிக் கூட பார்க்காதீர்கள்...' என்று அறிவுரை கூறி, அவரது அச்சத்தைப் போக்கினேன்.நண்பர்களே... நீங்கள் ஆபாச படம் பார்ப்பதை அறிந்து, ஒரு கும்பல், உங்களை ஏமாற்ற காத்திருக்கிறது. நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்!- ஜெ. கண்ணன், சென்னை.